சுண்ணாம்புச் சாந்தும் செங்கக் கல்லும் ஒரமும் - சிறுகதை
அன்னிக்கி குட்டி குலுமா பெருசு சிறுசு அம்புட்டும் கெளம்பிக்கிட்டு இருந்தாக. இன்னிக்கி மீனாச்சி திருக்கலியாணம். சாயங்காலம் பூப்பண்ணாக்கு சாமி ஊர்வலம் எப்புடியும் திருக்கலியாணம் பாக்கமுடியாது உள்ளாற விடமாட்டாய்ங்க. ஆனா ராத்திரி பூப்பண்ணாக்கு பாக்கலாம். கண்ணு கொள்ளாது போய்ட்டு வரலாம்னு வண்டி கட்டி கெளம்பிட்டு இருந்தாங்க.
வண்டினா முன்னாடி இருந்தமாதிரி மாட்டு வண்டியில்ல. அதெல்லாம் அத்துப்போய் பலவருசமாச்சு. வெள்ளாம போனதுல இருந்து வண்டிமாடு வைக்கப்படப்பு வாய்க்கால் எல்லாம் காஞ்சு கருகிப்போச்சு. இப்ப யெல்லாம் டிராக்டர்தேன். அதுல போனாத் தேன் கட்டுபடியாகும். இப்ப கட்டட வேலை தான் நடக்கு. அதுக்குத் தோதாத்தேன் இந்த டிராக்டர் வண்டி. அது வெவசாயத்துக்குன்னு லோன்ல வாங்குனது. அதைத்தவிர மீதி எல்லாம் செஞ்சிட்டுக்கெடக்கு. குப்பை அள்ள ஆளுகளை கூப்புட்டுப்போக செங்க மணலு கல்லு ஏத்தியாரன்னு என்ன வேலைக் கினா லும் அதேன்.
அதுல ஆளுகளை ஏத்திக்கிட்டுப்போய் டவுனுக்கு வெளில நிப்பாட்டி எறக்கிவிட்டுட்டு அங்கருந்து நடந்து போய் சாமிபாக்கனும். அதேமாதிரி சாமியப்பாத்துப்புட்டு அங்குணக்குள்ள குடுக்குற பொங்கல் அன்னதானம் மோர் எல்லாம் வாங்கிசாப்புட்டுப்புட்டு காலாற நடந்து வந்து திரும்ப டிராகட்டர்ல ஏறி ஊருவந்து சேரணும்.
இதுதான் இப்ப நடக்குறது. போன ரெண்டுவருசமும் சாமி கோயிலுக்குள்ளயே சுத்துவந்துச்சு. வெளிய வரல.அதுனால இந்த வருசம் கூட்டம் ரொம்ப இருக்கும்னு பேசிக்கிட்டாக. கெளம்பும் போது பூவாயி சொல்லிச்சி
”ஏப்பூ அந்த சுண்ணாம்புச் சாந்தையும் செங்கக்கல்லயும் உரத்தையும் மறந்துறாத”ன்னு.
பூவாயிக்கெழவிக்கு வயசு 90க்கு மேல. கண்ணு எல்லம் மங்கிப்போச்சு. ஒடம்பு கூனிக்குறுகி சுருங்கி மொத்தமே ஒரு மூணடிக்குள்ள மூலையில கெடக்கும். பெருசா ஒன்னும் திண்ணாது. பெரும்ம்பாலும் தண்ணி ஆகாரம் தேன்.ஆனா நல்லது பொல்லதுன்னு குடுத்தா ஒரு வா திங்கும். அதுக்கு பல்லு மாத்திரம் அப்புடியே இருக்கு இன்னமும். அது எப்புடின்னு கேட்டா அது பொறந்ததுல இருந்து சாம்பலத்தவிர வேற எதுனாலயும் பல்லு வெளக்குனதில்ல.இப்பயும் அப்புடித்தேன் அதுக்குக்காகவே எரு வைச்சி எரிக்கிற வீடுகல்ல வாங்கிக்குக்குடுப்பாக.
பூவாயி புருசன் போய் சேந்தாச்சு. அதோட மகனுக்கு வயசு 75 இருக்கும் அவரொரு பக்கம் இருந்தாரு அவருக்கு பல்லெல்லாம் போச்சு. மருமக இப்ப இல்ல. எல்லாரும் பேரன் கூடத்தான் இருந்தாங்க பேரனுக்கும் வயசு 50 இருக்கும் அவன் மகளுகளுக்கும் கலியாணமாகி பேரன் பேத்தி எடுத்தாச்சு. அதுக எல்லாம் திருநாளுக்கு வந்துருக்குதுக அதுகளைக்கூப்புட்டுக்கிட்டுதான் சாமி பாக்கக்கெளம்புனாக.
பூவாயி சொன்னதக்கேட்டதும் அவளோட பேரன் சரி அப்பத்தா . கவனத்துல வைச்சிக்கிறேன்னு சொன்னான். அது பூவாயி காதுல விழுகல
” எய்யா என்னா சொல்லுற”ன்னு கேட்டுச்சு
“அந்த சுண்ணாம்புச் சாந்தையும் செங்கக்கல்லயும் உரத்தையும் கவனத்துல வைச்சிக்கிறேன்னு வேட்டில ஒரு முடிச்சிப் போட்டுக்கிட்டான் பேரான்டி. அப்ப பிள்ளக எல்லாம்கேட்டுச்சு
“தாத்தா அது என்னாது சுண்ணாம்புச் சாந்தும் செங்கக்கல்லும் உரமும்னு ”
அதுக்கு அவரு சொன்னாரு ”அது தொழில் சம்பந்தப்பட்டது . அதேன் கருத்தா இருக்கச்சொல்லிச்சி” பாட்டின்னார்
ஒருவழியா சாங்காலமாக் கெளம்பி எல்லாரும் போய் காலேஜ் பாலத்துக்குக்கீழ டிராக்ட்டர நிப்பாட்டிட்டு நடந்து எல்லாரும் அம்மன் சன்னதிக்கு போனாக. அந்தப்பக்கம்தான் சாமிவரும். அங்கபோய் இப்ப புதுசாச தொறந்துருக்குற கயிலாய மடத்துக்கிட்டப் போனா அங்க அன்னதானம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. எல்லாரும் ஆளுக்கொரு தட்ட வாங்கி சாப்புட்டாக. அங்கதான் காலையில இருந்து காத்துக்கெடந்த போலீஸ்காரவுகளும் இருந்தாக .
அதுக்கு எதுத்தாப்புல உள்ள துணிக்கடைக்கி முன்னாடி நின்னாக சாமிபாக்க. கடைக்காரவுக சொன்னாக கடைய மறிக்காம நில்லுங்க. கடக்குள்ள வாங்குறதுன்னா வாங்க இல்லாட்டி வெளிய நின்னு சாமிபாத்துட்டுப் போங்கன்னாக. அதுக்குப்பக்கத்துல ஒரு வண்டில பாட்டுப்போட்டுக்கிட்டு இருந்தாக. மக்யாநாள் எதிர்ச்சேவைக்கி குல்லா தண்ணிப்பீச்சுற பை அலங்காரப்பொருளுக எல்லாம் புதுமண்டவத்துல வாங்கிட்டு ஆளுக போய்க்கிட்டு இருந்தாக
ஏழு மணியாச்சு சாமி வெளிய வரக்காணோம். பக்கத்துல ஒருத்தர் தன்னோட ரெண்டு மகனுகளுக்கு கருப்பசாமி வேசம் போட்டு அலங்காரம்பண்ணி கூட்டியாந் திருந்தாரு. அதே மாதிரி ஒரு அம்மா தன்னோட மகளுக்கு மீனாச்சி வேசம் போட்டு கூட்டியாந் திருந்தி ருச்சு. அம்மன் சன்னதியே நெருசலாதேன் இருந்துச்சு. இவுக எல்லாம் ஓரமா ஒதுங்கிக் காத்துருந்தாக. அப்புடியே மணி ஒம்போதாகிப்போச்சு. சாமியக்காணோம். அப்ப ஒருத்தர் சொன்னாரு
”இன்னிக்கிப் பிரதோசம் அது முடிஞ்சிதான் சாமி வரும்”னு சொன்னாரு..
அதேமாதிரி 9 மணிக்கெல்லாம் சன்னதிதெரு பரபரப்பாச்சு. கோயில் ஆனை கொம்பு அப்புறம் வாத்தியங்கள் மொழங்க வெளிய வந்துச்சு எல்லாரும் கோயில் வாசலயே பாக்க ஆரம்பிச்சாக, அப்ப ஒரு அம்மா எல்லாருக்கும் மஞ்சள் தாலி க்கயிறும் விசிறியும் குடுத்துச்சு அங்க ஒரு சலசலப்பு ஆனவன்ன போலீஸ் காரவுக அமைதிப்படுத்தினாக.
அப்புறம் நகரா பிள்ளையார்ன்னு ஒவ்வொரு சாமியா வர ஆரம்பிச்சது எல்லாரும் சந்தோசமா பாத்துக்கிட்டு இருந்தாக. அப்புறம் சொக்கநாதர்பிரியாவிடை வாகனம் வந்துச்சு அதைத்தொடர்ந்து மீனாச்சி பூப்பல்லாக்கு வர தெருவெல்லாம் மல்லிகை மணத்துச்சு மீனாச்சி ஒரு பக்கமா பாத்து இருக்க இவுக எல்லாம் இந்தப்பக்கம் இருந்ததுனால சாமி தெரியல. அதுல வருத்தமாப்போச்சு அதுக்கப்புரம் பெருமாள் முருகன் எல்லாம் வந்தவன்ன சாமி பாத்துட்டு கெளம்புனாக.
அப்ப எல்லாரும் தெக்குக்கோவர வாசல் வழியா நடக்க ஆரம்பிச்சாக . அப்ப பூவாயி பேரன் நீங்க மெதுவா போய்க்கிட்டு இருங்க நான் ஒரு சோலிய முடிச்சிட்டு வாறேன்னு சொல்லிட்டுப்போனாரு. அங்க பலூன் விக்கிறவன் வந்தான் அவன் கிட்ட பிள்ளகளுக்கு பலூன் வாங்கிக்கொடுத்தாக அப்புறம் ஜவ்வு முட்டாய் காரன் பொம்மையோட வர புள்ளைகளுக்கு அவன் கிட்ட வாச்சு மாதிரி செஞ்சு முட்டாய கைல கட்டி விட்டான். இது இல்லாம திருவிழாவுக்கு போனதா சொன்னா ஒருத்தன் நம்ப மாட்டான்
அதுக்குள்ள பேரன் வந்து சேந்தவன்ன டிராக்டர் இருக்குற எடத்துக்கு நடந்து போய் எல்லாரும் அதுல ஏறி வீடு வாரதுக்குள்ள சின்ன புள்ளக எல்லாம் சாமியாட ஆரம்பிச்சிட்டுதுக தூக்கத்துல. அதுகள மடில படுக்கப்போட்டு கூட்டியாந்தாக. ஒரு வழியா வீட்டுக்கு வந்தாச்சு. எல்லாத்தையும் எறக்கி வீட்டுக்குள்ளாற படுக்கப்போட்டாச்சு.
அப்ப அந்த ”தாத்தா அது என்னாது சுண்ணாம்புச் சாந்தும் செங்கக்கல்லும் உரமும்னு” கேட்டதுல ஒன்னு முழிச்சிக்கிருச்சு அது இப்பவும் கேட்டுச்சு. ”தாத்தா அந்தப்பாட்டி சொன்னது என்னாச்சுன்னு”.
அதுக்கு அவர் சொன்னாரு மறப்பனா அதுக்குத்தான வேட்டில முடிச்சி போட்டுருந்தேன்னு சொல்லிக்கிட்டுப் போய் பூவாயிகிட்ட” அப்பத்தா அப்பத்தா”ன்னு கூப்புட்டார்.
நான் முழிச்சிக்கிட்டுத்தான் கெடக்கேன். என்னா வாங்கியாந்தியான்னு கேட்டுச்சு அப்ப துண்டுல முடிஞ்சிருந்த பொட்டனத்த அவுத்து பூவாயிக்கிட்ட குடுத்தார். அதப்பிரிச்சி மொதல்ல மோந்துபாத்துச்சு. அது மொகத்துல ஒரு சந்தோசம். மீனாச்சியப்பாத்த மாதிரி அப்புறம் அதைப்பிரிச்சி அதுல இருந்த நாகப்படினம் அல்வாவ ஒரு துண்டக்கிள்ளி வாயில போட்டுட்டுச் சொல்லுச்சு ”அல்வாக்குள்ள இருக்காடா அங்கயற்கன்னி ”நு சொல்லி ரசிச்சி சாப்புட்டுச்சு அப்ப அது கண்ணு கசிஞ்சிச்சி. அப்புறம் அதுல இருந்த மைசூர்பாக்க ஒடைச்சி ஒரு துண்ட வாயில போட்டுட்டு சொல்லிச்சி ”இந்த இனிப்புக்குள்ள இருக்கான் சொக்கன்னு”
அப்புறம் அந்த ஜிலேபில ஒரு துண்டு பிச்சி வாயில போட்டுச்சு. இந்த ஜீராக்குள்ளதான் திருநாளே கெடக்குதுன்னு சொல்லி கண்ண மூடி அனுபவிச்சிச்சி.
அப்ப அவர் சொன்னர்
”நல்லா மண்ணுகாஞ்சு பேர் வைச்சிருக்க அல்வாக்கு சுண்ணாம்புச் சாந்துன்னும் மைசூர்பாக்குக்கு செங்கக் கல்லுன்னும் ஜிலேபிக்கி ஒரம்னும்னு சொல்லி சிரிச்சிட்டு அது சரி மத்த ரெண்டும் புரியுது ஆனா ஜிலேபிக்கு எதுக்கு ஒரம்னு பேர் வைச்சிருக்கன்னு ”
கேட்டப்ப பூவாயி சிரிச்சிக்கிட்டே சொல்லிச்சி ”அது கண்ணுக் குட்டிபோடுற சாணி மாதிரி இருக்கும் அது ஒரம்தானான்னு” சொன்னவன்ன அவரும் சேந்து சிரிச்சார்.பூவாயியோட நக்கல ரசிச்சி
அ.முத்துவிஜயன்