முனியாண்டி - சிறுகதை

muniyandi-short-story
முனியாண்டி - சிறுகதை

”எக்ஸ் ரே படம் எடுத்துப்பாத்ததுல விலா எலும்புல விரிசல் இருக்கும்மா, மூச்சுவிடும் போது சிரமமா இருக்கும் ரெஸ்ட்டுல இருக்கனும், கூடிய வரை படுத்து ரெஸ்ட் எடுக்கனும் அப்பத்தான் சரியாகும் அதுவே ரெண்டு மாசம் ஆகலாம் அதுவரைக்கும் இவரப் பத்திரமாப் பாத்துக்கனும்” நு சொன்னாரு டாக்டர்

“ அப்ப வேலைக்கிப்போகமுடியாதா லேசான வேலைதாறேன்னு சொல்லிருக்காரு காண்ட்ராகடர் பாத்துச்சொல்லுங்க டாக்டர் அய்யா”

“ ஏம்மா ஒனக்கு கொஞ்சமாச்சும் யோசனை இருக்குதா? நான் அசையவே கூடாதுன்றேன் நீ என்னடான்னா வேலைக்கிப் போறதைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்குற உன் புருசன் இருக்கனுமா இல்ல வேணாமா?”
” டாக்டர் அய்யா அதுக்குச்சொல்லல. அவர் வேலைக்கிப்போனாத்தான் வீட்டுல அடுப்பெரியும் வேற ஒன்னும் வருமானமில்ல  எனக்கு கால்  சரியில்ல நடக்குறதே சிரமம் வேலைகீலைக்குப் போகமுடியாது ஒரு கால் சூம்பிப்போச்சு. வீட்டுல ரெண்டு பொம்பளைப் பிள்ளைக  எல்லாத்தையும் இவர் வருமானத்திலதான் சமாளிச்சேன் இப்ப இப்படி ஆயிப்போச்சுன்னு ”கண் கலங்குனா முனியாண்டி பொஞ்சாதி

“ அதுக்கு நான் என்னம்மா பண்ண முடியும் இது கவர்மெண்ட் ஆஸ்பத்திரி இங்க சிகிச்சை மாத்திரம்தான் தரமுடியும்  உன் வீட்டுல அடுப்பெரிய எல்லாம் வழி செய்யமுடியாது நான் சொன்னமாதிரி அவரைக் கவனிச்சிக்கிட்டா சீக்கிரம் சரியாகி வேலைக்கிப்போகலாம் இல்லன்னா.....”
“ சரிங்க அய்யா பாத்துக்கிறேன்”
“ ஏண்டி இப்ப காசுக்கு என்ன பண்ணப்போற நான் சரியாகி வர நாளாகும்ன்றாரு டாக்டர்  அதுவரைக்கும் வயித்துக்கு என்ன பண்ணுறது காசு யார் குடுப்பா எதுக்கும் அந்த காண்ட்ராக்டரைப்போய்ப்பாரு ஒதவி செய்யுவாரு” னான் முனியாண்டி
” சரி இந்தாங்க சாப்பாடு சாப்புடுங்கன்னு கொண்டாந்திருந்த சாப்பாட்டக் குடுத்தா அவ”
“ இதுக்குக் காசு ஏது யார் குடுத்தா?”

“ யார் குடுத்தா என்ன சாப்பாடு வந்திருச்சில்ல சாப்புடுங்க அப்புறம் சொல்றேன்”
” சொன்னாத்தான் சாப்புடுவேன் சொல்லுமா”
“ ஒன்னுமில்ல இதே ஆஸ்பத்திரில ரத்தம் குடுத்தேன் ஒருஅம்மா கூப்புட்டுப் போய் ரத்தம் குடுக்கவைச்சி  கையில 500 ரூ குடுத்தாங்க  அதை வைச்சித்தான் இப்பப் பொழப்பு ஓடுது சாயங்காலமா நான் காண்ட்ராக்டரைப்போய்ப்பாக்கிறேன்”

முனியாண்டி ஒரு காண்ட்ராக்ட்டுல வேலை செய்யிறாரு. சித்தாளும் இல்லாம கொத்தனாரும் இல்லாம ரெண்டுங்கெட்டான் வேலை அது. வேலைக்கிப்போனா கூலி  ஒரு நாளைக்கி 500 ரூ. வேலைக்கிப்போகலைன்னா இல்ல. என்ன வேலை சொன்னாலும் செய்யனும் அப்புடித்தான் நேத்து ஒரு கட்டடத்துல வேலை பாத்துக்கிட்டு இருக்குறப்ப  சாரத்துல இருந்து சரிஞ்சி விழுந்து வெலா எலும்புல சரியான அடி வலி உயிர் போச்சு மூச்சு இழுத்து விடமுடியல.  ரத்தக்க்காயம் இல்ல . ஆனா உள்ளாற சரியான அடி போல
காண்ட்ராக்டர் அவரோட பைக்கில ஒக்காரவைச்சி  கவர்மெண்ட் ஆஸ்பத்திரில கொண்டாந்து சேத்துட்டு
” யார் கேட்டாலும் வீட்டுல கீழ விழுந்துட்டேன் னு சொல்லனும்”ன்ற கண்டிசனோட விட்டுட்டு வீட்டுல வந்து ஒன் பொஞ்சாதியப் பாக்கச் சொல்லு   நு  சொல்லிட்டுப்போய்ட்டார்

அதுக்கப்புறம் தாக்கல் தெரிஞ்சி இவ இங்க வந்தா .
அன்னிக்கி சாயங்காலம் இவ காண்ட்ராக் டரைப் போய்ப் பாத்தா. அவர் இவகிட்ட ”முனியாண்டி எப்படி இருக்கான் எப்ப சரியாகும்? எப்ப சரியானாலும் வேலைக்கி வந்துரச்சொல்லு நு சொல்லிட்டு 1000 ரூ கையில குடுத்துட்டு
“இத செலவுக்கு வைச்சிக்க அப்புறம் வேலை பாத்து கழிச்சிக்கலாம் ஏதும் தேவைன்னா வந்து கேளு கடனாத்தாறேன் அதையும் ஒடம்பு சரியாகி வந்தப்பின்ன வேலைபாத்துக் கழிச்சாப் போதும் வட்டியெல்லாம் கேக்கல” ன்னாரு
அந்தப்பணத்தை வாங்கிட்டுப்போய் புருசனைப் பாத்தா வெவரத்தைச்சொன்னா

” அடப்பாவி காசைக்குடுத்து வேலைபாத்துக் கழிக்கச்சொன்னாரா ? நு சோகமாக் கேட்டார்  முனியாண்டி
அப்ப அவரைப் பாக்கவந்திருந்த கொத்தனார் சொன்னார்
” நாயப்படி பாத்தா வேலை செய்யும் போது அடிபட்டதுக்கு ஏதாவது குடுக்கனும் அதைக் குடுக்காம கடனாக் குடுக்குறேன்னு சொன்னாரா நல்ல மனுசன்யா அவரு”ன்னு சோகமாச்சொன்னாரு

” அவர் என்ன செய்வாரு நான் அஜாக்கிரதையா விழுந்ததுக்கு பாவம் வேலை வேற நின்னுபோச்சு” நு வருத்தப்பட்டார் முனியாண்டி
” என்னா சொல்ற வேலைக்கிக் கூப்புட்டுப் போனா வேலை முடியிற வரை அவர்தான் பொறுப்பு அப்ப என்ன பாதிப்பு வந்தாலும் அவர்தான் பாக்கனும் இதை நான் சொல்லல சட்டம் சொல்லுது. என் தம்பிக்கி ஒரு வக்கீல் தெரியும் அவரை வைச்சி இதை டீல் பண்ணுவமா?” நு கேட்டார் கொத்தனார்

” கோர்ட் கேசுன்னு நம்மலால அலைய முடியுமா நம்மலுக்கு கஞ்சிக்கே காத்தாடுது”
“ இதெல்லாம் ஒரு பேரம்தான் இவர்கிட்டயே லோக்கலா ஆளைவச்சிப் பேசி காம்பன்சேசன் வாங்குவோம் விசயத்தை என் தம்பிக்கிட்ட விட்டுறு எல்லாம் அவன் பாத்துக்குவான் “
“ சரி கேட்டுப்பாருங்க ரொம்பத்தகறாரு வேணாம் நாளைக்கி அவர் மூஞ்சில முழிக்கனும்”
“சரி பாப்போம்”னு சொன்னாரு கொத்தனார்

அன்னிக்கிச்சாயங்காலம் கொத்தனார் வந்து இவன் கிட்ட 5000 ரூ குடுத்துட்டுச் சொன்னார்
” காண்ட்ராக்டர் லேசில ஒத்துக்கலயே என் தம்பி சட்டம் எல்லாம் பேசி இதை வாங்கிக்குடுத்தான். இதுல ஒரு கையெழுத்துப் போடு நு ஒரு பேப்பரில கையெழுத்தும் வாங்குனாரு

“அய்யா நீங்க நல்லா இருக்கனும் என் புள்ளகுட்டியெல்லாம்  ஒங்களைக் கும்புடும்”ன்னாரு முனியாண்டி
“ எம்புட்டு நாளு வேலபாத்துருக்க என் கூட இதைக்கூடச்செய்யாட்டி நான் மனுசன் கெடையாது நீ நல்லா இருந்தா எனக்கு அது போதும்” நாரு கொத்தனார்

முனியாண்டிய நாளாம் நாள் வீட்டுக்கு அனுப்பிச்சிட்டாங்க வீட்டுலயே ரெஸ்ட் எடுத்தாப்போதும்னு சொல்லிட்டாங்க
அவனும் வந்து ரெஸ்ட் எடுத்து ஓரளவு சரியான பின்னாடி மறுபடி வேலைக்கி காண்ட்ராகடரைப் போய்ப் பாத்தான் அப்ப அவர் சொன்னாரு கோவமா

“ குடுக்குறதெல்லாம் குடுத்தாச்சு  இப்ப எதுக்கு திரும்பக்காசு கேட்டு வந்துருக்கியா? பத்துப் பைசா பேறாது என்கிட்ட இருந்து”ன்னாரு
” அய்யா காசுகேக்க  நான் வரல வேலைக்கி வந்துருக்கேன் திரும்பச்சேத்துக்கங்க “
“ ஒன்னய மாதிரி ஆள வேலைக்கி வைச்சா அப்புறம் தண்டமாத்தான் அழுகனும் போ போ வேலை ஒனக்குக்கெடையாது வேற ஆளப்பாரு”

” அய்யா நீங்க இப்படிச்சொன்னா நான் எங்க போவேனயா?”
“ போ அந்த வக்கீல்ட்டப் போ அன்னிக்கி என்ன மிரட்டி 10000 ரூ வாங்கிட்டுப்போனான்ல அவன் கிட்டப்போ  என்கிட்ட ஏன் வார”
” அய்யா என்ன சொன்னீங்க பத்தாயிரம் குடுத்தீங்களா அவர் என்கிட்ட 5000 தான கொடுத்தார்?”
“ அதை அவன்கிட்ட போய் கேளு இந்தா பார் நீ 10000 வாங்குனதுக்கு உண்டான பேப்பர் நு காமிச்சார் காண்ட்ராக்டர். அப்பத்தான் தன்னை வைச்சி கொத்தனார் வெளாண்டது முனியாண்டிக்குத் தெரிஞ்சது

நேரா கொத்தனாரைப் போய்பாத்தார் முனியாண்டி அவர்கிட்ட “ ஐயா 10000 ரூ காண்ட்ராக்டர் கிட்ட வாங்கிட்டு 5000 ரூ என்கிட்டக்கொடுத்தீங்க மீதி   எங்கய்யா?
“ டேய் லூசு வக்கீல் பீஸ் யாரு குடுப்பா அந்த 5000 த்தை வக்கீல் பீசாக்குடுத்தாச்சுடா. அவர் வந்ததுனாலதான் பயந்து அவர் பணம் குடுத்தார் உன் பொஞ்சாதி போய்க்கேட்டாளே எதுனாச்சும் குடுத்தாரா. அதான் கேக்குரவுக கேட்டாத்தான் காசு வரும் அதை அவரு வந்து கேக்கனும்னா அதுக்கு பீஸ் குடுக்கனும் இதுதான் நடைமொறை
இதைக்கேட்டுட்டு முனியாண்டிக்கு சிரிக்கிறதா அழுகுறதான்னு தெரியல... நமக்கும் தான்

நன்றி - அ.முத்துவிஜயன்.