வந்தவாசிப் போர் - புத்தக விமர்சனம்

vandavasi-war-book-review
வந்தவாசிப் போர் - புத்தக விமர்சனம்

எனது தெருவில் ,ஆவடியில் தான்,தினமும் காலை 8 மணிக்கும் மாலை 4 மணிக்கும் ஒரு ஸ்கூட்டியில் ஒரு பாய் ,"வந்தவாசி பாய் வந்தவாசி பாய்" என்று கூ வி விற்றுக் கொண்டே போவான் .முதலிரவுக்கு உகந்த பாய் இன்பத்திற்கு உகந்ததாய் என்று சொல்லிக்கொண்டே தினமும் பாடிக்கொண்டே கூறிக்கொண்டே செல்வான் .

பத்தமடை பாய் காட்டிலும் வந்தவாசி பாய் மிகவும் பெயர் பெற்றது ,சிறப்பானது .கோடைகாலத்தில் அதுவும் வெயில்வாட்டும்  காலத்தில் குளிர்ச்சியையும் குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும் நமது உடலுக்கு அளிக்கக் கூடிய வகையிலேயே வந்தவாசி நார் பாய் விசேஷமானது.

குடியாத்தம் நகரில் லுங்கி நெசவு எப்படி விசேஷமானதி, சிறப்பானதோ,அதுபோல் வந்தவாசி நகரில் வந்தவாசி நாரில் பாய் முடைதல்  மிகவும் விசேஷமானது ; குடிசைத் தொழிலுக்கு பெயர் பெற்றது.
 
மேலும் இங்கு தெருக்கூத்து கலைஞர்கள் மிகுதியாக காணப்படுகின்றார்கள் .தெருக்கூத்து கலைஞர் அவர்களை வாத்தியார் என அழைக்கப்படுகின்ற அவர்களை நேரில் கண்டு பேசியிருக்கிறேன் .அவர்களின் வாழ்க்கைத் தரமும் சொல்லப்படுகின்ற அளவில் இல்லை என்றாலும் அவர்களின் கலைத்திறன் போற்றுதற்கு உரிய அளவிலேயே இருந்தது; இருக்கிறது ; இருக்கும்.

1986 இல் செய்யாறு கோட்டத்தில் ஒரு ஆறுமாதம் பணி செய்தேன் .பணி காரணமாக வந்தவாசி தேசூர், தெள்ளார் ஆகிய இடங்களுக்கு பணி காரணம் பயணம் சென்ற போது  வந்தவாசி கோட்டை,பக்கத்தில் உள்ள சமண மதத் கோயில்களையும் கண்டிருக்கிறேன்.

எனது பால்ய வயதில் எனது தந்தை சில ஊர்களை அடிக்கடி குறிப்பிடுவார் . அவர் என்னை அருகில் அமர்த்திக் கொண்டு வந்தவாசி சேத்துப்பட்டு திருவண்ணாமலை வேலூர் ஒடுக்கத்தூர் என்று 1940களில் அவர் பணி செய்த இடங்களிலெல்லாம் , அதன்குறிப்பிட்டு அதன் விசேஷங்களை எனக்கு கூறிக் கொண்டே இருப்பார் அதன் காரணமாக எனக்கு வந்தவாசி பிடிக்கும் , செஞ்சி கோட்டை பிடிக்கும் ,சேத்துப்பட்டு பிடிக்கும் திருவண்ணாமலை பிடிக்கும் ,வேலூர் கோட்டையும் பிடிக்கும்.


நீர் அதிகாரம் குறித்து சிறப்பாக ஆனந்தவிகடனில் எழுதிக்கொண்டிருக்கும் வெண்ணிலா அவர்கள் இந்த வந்தவாசிப் போர் குறித்து ஒரு பேட்டியில் பேசியபொழுது கேட்டுக்கொண்டிருந்தது நினைவு கொள்கிறேன்.

தொப்புள் கொடியின் ஈரத்திலிருந்து *என்று தன் நினைவை கீழ்கண்டவாறு டாக்டர் வெண்ணிலா அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்:
 'பயணங்களின் தூக்கத்தில் நழுவிவிடும் நிலக்காட்சிகளைப்போல் அவரவர் தம் சொந்த மண்ணின் வரலாற்றை நழுவவிட்டுக் கொண்டிருக்கிறோம்'.

நேற்றின்  வரலாறு தெரியாது போனால் இன்று என்ன செய்வது என்று புரியாமல் போகும்.
 இன்று என்ன செய்வது என்று புரியாமல் போனால் ,
நாளை என்பது நம் கையில் இல்லை.

உள்ளூரின் புவியியல் தெரியாமல் நாம் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதற்கு பொருள் ஒன்றுமில்லை. 2000ஆண்டு தமிழ் வாழ்வின் தொடர்ச்சியாக அறியப்படும் வாழ்வியல் சூழல் அமைய வேண்டும் .

தமிழகத்தின்  சின்னஞ்சிறிய கிராமமும் நூற்றாண்டு வாழ்வின் நிகழ்விடம்  என்பதை  நாம் தலைமுறைக்கு உணர்த்த வேண்டும்.

வந்தை *என அழைக்கப்படும் வந்தவாசியில் வேரறியும் பயணத்தின் சிறு பதிவாக இந்த நூல் மலர்ந்திருக்கிறது. என்கிறார் டாக்டர் வெண்ணிலா அவர்கள்.

நேற்றின் வரலாற்றிலிருந்து இன்றைக்கு என்ற தலைப்பில் டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப.மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

வாழ்ந்து கெட்டவன் ஊரோடு ஒட்டமாட்டான்' என்ற மு.ராஜேந்திரன் அவர்களின் வரி, வந்தவாசி நகருக்கு  பொருந்தி விடுகிறது.

பிரெஞ்சுக் காரர்கள் தங்கள் காலனி நாடுகளில் தங்கள் மதத்தை வன்முறையால் புகுத்தி கலாச்சாரங்களில் சரிவை உண்டாக்கி பெருத்த சேதம் செய்திருக்கிறார்கள் .அந்த வகையில் பிரெஞ்ச்க்காரர்களைத் தோற்கடித்து ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டதால் தான் இந்தியா தப்பித்தது.
அதற்கு வந்தவாசிபோர் வழிவகுத்தது.

250 ஆண்டுகளுக்கு முன் வந்தவாசியில் நடந்த சம்பவத்தை இப்போது மாற்ற இயலாது .ஆனால் இரு சிறு வெளிநாட்டு கும்பல் மிகப்பெரிய பெரும்பான்மையான மக்கள் உள்ள தேசத்தில் பலப்பரீட்சை செய்யும்போது நமக்கு என்ன வந்தது என அமைதியாக இருந்தால் எத்தகைய நிலை ஏற்படும் என்பதையும் புரிந்துகொள்ள வந்தவாசி சம்பவங்கள் நமக்கு உதவும் என்கிறார் டாக்டர் மு .ராஜேந்திரன் அவர்கள்.

 
இனி இந்த நூல் குறித்து பார்ப்போம்:
இந்த நூலில் மொத்தம் இருபத்தி ஒரு கட்டுரைகள் இடம்பெற்று இருக்கிறது.
​வந்தவாசி போரின் மௌனசாட்சிகள் .
​ஆங்கிலேயக் கர்னல் சர் அயர் கூட்டின் போர்வரை படமும் விளக்கமும் .
​வரலாற்றுப் பார்வையில் வந்தவாசி .
​மருத நாடு .
​வந்தவாசி போரின் தளபதிகள் .
​ஊரைச்சுற்றி .

லாலியின் தோல்வியும் வந்தவாசிக்கு வந்த புகழும்.
​வந்தவாசி வட்டத்துப்  பல்லவர் கல்வெட்டுகள் .
​திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற போர்கள்.
​இரு பெரும் தெள்ளாற்றுப்போர்கள்
​கர்நாடக டைரி.

​இந்திய சுதந்திரப் போரில் திருவண்ணாமலை மாவட்ட விடுதலைப் போராளிகளின் பங்கு .
​வந்தவாசிப் போர் --ஒரு வரலாற்றுத் திருப்புமுனை .
​சில சுதந்திர போராட்ட முன்னோடிகளின் முக்கிய நிகழ்வுகள் ​நேர்காணல் ​பிரம்மதேசம் .

​வரலாற்றில் வந்தவாசி போர் .
​மாவட்டத்தின் தனிச்சிறப்புகள் .
​வரலாற்றில் வந்தவாசி
​தமிழகத்தில் ஜைன சமயம்.

​சூரியன் மறையா தேசத்திற்கு என்று இருபத்தி ஒரு கட்டுரைகளில் இந்த வந்தவாசிப் போர் இதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

வந்தவாசி போர் ஏன் ஏற்பட்டது ?வந்தவாசிப் போர் யார் யாருக்கு நடந்தது ?உள்நாட்டுப் போரா வெளிநாட்டு போரா ?வந்தவாசி போரில் முக்கியத்துவங்கள் ?வந்தவாசி கோட்டையை கைப்பற்றி யதால் யாருடைய கை ஓங்கியது  ?யாருடைய கை பின் வாங்கியது ?இதனால் ஏற்பட்ட பிற்கால மாற்றங்கள் என்ன என்பதையெல்லாம் குறித்து அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.

1760 ஜனவரி 22ஆம் நாள் வந்தவாசி போர் நடைபெற்றது.

இரண்டு தெள்ளாற்று போர்களின் பின்னணியில் 530 ஆண்டுகளுக்கு பின் வந்தவாசியில் நிகழ்ந்த போர் இது.
 
வந்தவாசிப் போர் ,வணிகம் செய்ய வந்த இரு ஐரோப்பிய குழுக்கள் (ஆங்கிலேய பிரெஞ்சு குழுக்கள் ) இந்திய மண்ணில் மேலாதிக்க ஏகபோகத்திர்க்காக தங்களுக்குள் மோதிக் கொண்ட போர் இது.

எதிர்கால இந்திய எஜமானர் ஆங்கிலேயர்களா?பிரெஞ்சுக்காரர்களா?
 என்பதை முடிவு செய்த போர் இது.

இந்த வந்தவாசியில்   தான் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மோதிக்கொண்டனர்.   பிரெஞ்சுக்காரர்கள் சரணடைந்தனர்.

வந்தவாசி போருக்குப் பின்பு 1760 லிருந்து 1763 ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் இந்தியாவின் பிரஞ்சுப் பகுதிகள் முழுமையும் தனது ஆளுமையில் வைத்திருந்த ஆங்கிலேயர்கள் பாரிஸ் உடன்படிக்கையின்படி பிரெஞ்ச்சுக்கு பாண்டிச்சேரி சந்திரநாகூர் ஏனாம் காரைக்காலை விட்டுக் கொடுத்தனர. இந்த இடங்களை பிரெஞ்சுக்காரர்கள் கடைசிவரை வைத்திருந்தனர்.

ஆங்கிலேயர்கள் ஆகஸ்ட் 15 1947ல் இந்தியாவை விட்டுச் சென்ற ஏழு ஆண்டுகள் கழித்துத்தான் பிரஞ்சுக்காரர்கள் இந்தியாவை விட்டுச் சென்றனர்.

1750 ஆம் ஆண்டிலிருந்து 1758 வரை எட்டு ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முதல் ஐரோப்பியர்கள் என்ற பெருமை பெற்ற பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி, 1763ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர்களுக்கு போட்டியாளராக இல்லாமல் ஆங்கிலேயரின் தயவில் 1947ஆம் ஆண்டு வரை இருக்க வேண்டியதாயிற்று வந்தவாசி போர் விளைவாக .

ஆங்கிலேயர்களுக்கு முன்பே இந்தியாவில் ஆட்சி செய்ததால்தானோ என்னவோ இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் போன பின்புதான் பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர்.

ஜெனரல் லாலியின் பரிதாப முடிவு துயர் ஏற்படுத்தவே செய்கிறது. அவரது மகனின் உறுதியான முயற்சிகளினால் ராஜதுரோக குற்றச்சாட்டுகளிலிருந்து மரணத்துக்குப் பின்பு 'லாலி' விடுவிக்கப்பட்டமை பெரும் ஆறுதல் அளிக்கிறது.

ஜைன மதம் குறித்த கட்டுரையும், திருவண்ணாமலை போர்களும்,கல்வெட்டுகள் குறித்த பேராசிரியர் எ.சுப்பராயலுவின் நேர்காணலும், வரலாற்றுப் பார்வையில் வந்தவாசியும், வரலாற்றில் தடம் பதித்து மறக்கப்பட்டுவிட்ட இடங்கள் குறித்த பதிவுகளும் இந்நூலின் சிறப்புகள்.

மறக்கடிக்கப்பட்ட அழகுசிதிலப்படுத்தப்பட்ட சரித்திர சான்று சின்னங்கள் வந்தவாசி மட்டுமல்ல .
வேலூர் குடியாத்தம் சாலையில் உள்ள அந்த கால போர் குதிரை லாயங்கள் ,ஆரணியில் அமைந்துள்ள போர் தளவாட பகுதிகள் குதிரை லாயங்கள் எல்லாம் எப்படி பாழ்பட்டு கிடைக்கின்றன என்பதைக் காணும் போது கண்ணீர் வரச் செய்கிறது.

இந்த வந்தவாசி போர் படித்து முடித்த பிறகு டாக்டர் வெண்ணிலா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இந்த சரித்திரப் புள்ளி விவரங்களை எல்லாம் துல்லியமாக படித்து முடித்த பிறகு எனக்கே மெய்சிலிர்த்துப் போனது .வந்தவாசியை சொந்த ஆசியாகக் கொண்டு  வாழ்ந்து கொண்டிருக்கும் வெண்ணிலா அவர்கள் ஒரு சரித்திரக் கதையை எழுதினால் என்ன?

சித்தமெல்லாம் ரத்தம் என்று தலைப்பிட்டு முத்தான அவர்தம் மொழிகளில் ஒரு சரித்திரப் பின்னணியோடு வந்தவாசி போர் எழுதுமாறு கேட்டுக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

தொகுப்பு டாக்டர் ராஜேந்திரன் இ.ஆ.ப. டாக்டர் வெண்ணிலா.

 அகநி வெளியீடு.முதல் பதிப்பு 2010 மூன்றாம் பரிசு 2018.மொத்த பக்கங்கள் 168 விலை ரூபாய் 250.