முனைவர் பெ. ஷோபனாவின் நூல் வெளியீட்டு விழா!

writer-shobana-book-released
முனைவர் பெ. ஷோபனாவின் நூல் வெளியீட்டு விழா!

அருமையான டைட்டில். ‘உள்ளத்தை நம்பு உயரம் உன்னுடையது’.

கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் தலைமை. தேவிபாலா வெளியிட, தயாளன் பெற்றுக்கொண்டார். வேதா கோபாலன், மடிப்பாக்கம் வெங்கட், லதா சரவணன், பொறியாளர் அ.மோகன் ஆகியோர் வாழ்த்துரை. மானா பாஸ்கர் பதிப்பாளர் உரை நிகழ்த்த, டி என் ராதா கிருஷ்ணனின் அருமையான தொகுப்புரையுடன், விஜி ஆர் கிருஷ்ணனின் வரவேற்புரையுடன் இனிதே நடந்தது.

கலைமகள் ஆசிரியர் பேசும்போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சொன்னார்.
மக்களின் மனம் கவர்ந்த முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகு ஏ பி ஜே அப்துல் கலாமுக்கு அவர் நெருக்கமானவர். மற்றவர்கள், கலாம் அவர்களை ஒரு முறையேனும் ஐந்து நிமிடம் பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கிய காலத்தில் ஐம்பது முறைக்கு மேல் அவரைச் சந்தித்தவர். இவரை எப்போதெல்லாம் சந்திக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அப்போதெல்லாம் உதவியாளரைவிட்டு போன் செய்யச் சொல்வார். இவரும் உடனே கிளம்பிப் போய் அவருடன் சில பல நாட்கள் தங்கிவிட்டு வருவார். இது பலருக்கும் தெரிந்த விஷயம்.

கலாம் சார் எழுதிக்கொண்டிருந்த கட்டுரைகளில் அவருக்குக் கூடுதலாக ஏதேனும் தகவல் தேவையானால் உதவியாளர் போல் கீழாம்பூர் அந்தத் தகவலை எடுத்து முழுமையாகக் கொடுப்பார்.

“கீழாம்பூர் சார். நாலடியார் பற்றி சாருக்கு ஒரு தகவல் வேண்டுமாம். நாளைக்கு வந்துடுங்க” என்று உதவியாளரிடமிருந்து போன் வரும். உடனே நாலடியார் சம்பந்தப்பட்ட அத்தனை நூல்களையும் இவர் எடுத்துக் கொண்டு டெல்லிக்குப் போய்விடுவார். விமான டிக்கெட் வரும். விமான நிலையத்தில் மிலிட்டரி ஜீப் வந்து அழைத்துப் போகும்.
நிறைய இசை நிகழ்ச்சிகளெல்லாம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுவது வழக்கம். எம் எஸ் அம்மா போன்றவர்கள் அங்கே நிகழ்ச்சி நடத்திய சரித்திரப் பாரம்பர்யம் உண்டு.

“ரொட்டீனான நிகழ்ச்சி அல்லாமல் வேறு என்ன ஏற்பாடு செய்யலாம்?” என்று அவர் ஐடியா கேட்டபோது, “வில்லுப்பாட்டு நிகழ்ச்சி வைக்கலாமே..” என்று கீழாம்பூர் சொல்லியிருக்கிறார்.

திரு சுப்பு ஆறுமுகம் அவர்களைக் குழுவினருடன் வரவழைத்தார்கள். நிகழ்ச்சியைப் பிரமாதமாக நடத்தினார் சுப்பு ஆறுமுகம். வழக்கமாக இதற்கென்று ஜனாதிபதி மாளிகையின் சார்பில் சன்மானம் அளிக்கப்பட்டுவிடும். ஆனால் அதெல்லாம் போதாது என்று நினைத்திருக்கிறார் அப்துல் கலாம் ஐயா. தன் தனிப்பட்ட அன்பளிப்பாக ஒரு நல்ல தொகையை நிரப்பி, செக் கொடுத்திருக்கிறார்.

முதலில் அதை வாங்க மறுத்துவிட்டார் சுப்பு ஆறுமுகம். “எனக்குத்தான் சன்மானம் கொடுத்துவிட்டார்களே? இரண்டாம் முறை எதற்காக?” என்று கேட்டிருக்கிறார்.
மிகவும் வற்புறுத்தியபிறகே அவரை வாங்க வைக்க முடிந்ததாம்.

சென்னை வந்தபிறகு தன் வீட்டுக்கு அருகில் இருந்த கே கே நகர் ஸ்டேட்பேங்க் கிளையில் போய் அந்த செக்கை டெபாசிட் செய்திருக்கிறார் சுப்பு ஆறுமுகம்.

செக் அளித்தவர் பெயரைப் பார்த்தவுடன் வங்கி மேனேஜருக்குச் சிலிர்ப்பும் பரபரப்பும் ஏற்பட்டு, எழுந்து நின்று அந்த செக்கை வாங்கிக்கொண்டாராம்.

பிறகு அந்த செக்கை போட்டோ எடுத்துப் பெரிதாக்கி வங்கியில் மாட்டி வைத்தார்களாம்.
இப்போதும் ஸ்டேட்பேங்க் கேகே நகர் கிளையில் அந்த போட்டோ வைக்கப்பட்டிருக்கிறதாம்.

பி கு : சுப்பு ஆறுமுகம் ஐயா சரியான விடாக்கொண்டர்.... தான் இரண்டு முறை சன்மானம் வாங்கியதை ஈடுகட்ட, மற்றொரு நிகழ்ச்சி செய்து கொடுத்த பிறகே திருப்தி ஏற்பட்டது அவருக்கு.