கடவுளுக்குச் சமமானவர்களா? - புத்தகம் விமர்சனம்

kadavulukku-samamanavara-book-review
கடவுளுக்குச் சமமானவர்களா? - புத்தகம் விமர்சனம்

ஆசிரியர்: மு. தமிழ்ச்செல்வன் மு. தமிழ்ச் செல்வன்
பக்கங்கள்: 110
விலை: ரூபாய் 120
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முதலில் ஆசிரியருக்கு ஒரு சபாஷ்!
சிறப்பானதொரு முன்னெடுப்பு செய்ததற்கு...
நம் அன்றாட வாழ்வில் ஏதாவது ஒரு இடத்தில் நமது நம் கண்ணில் பட்டாலும் நாம் கண்டுகொள்ளாத நபர்கள் பற்றிய புத்தகம்...

தூய்மை பணியாளர்களுக்கும் நம் ஒவ்வொருவருக்கும் நிச்சியம் சம்பந்தம் உண்டு, ஆனால் அவர்களைப் பற்றிய சிந்தனை அற்றுத்தான் இந்த இயந்திர வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கிறோம் !

அவர்களது அவல நிலை குறித்தும், அவர்கள் மீதான சமூகத்தின் பார்வை குறித்தும், மனித (மலத்தை)கழிவுகளை மனிதனே அள்ளும் நிலைக்கு மாற்று என்ன என்பது குறித்தும், குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இப்பணியை தொடர காரணமாய் இருக்கும் அரசின் நோக்கம் என்ன, ஏன் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கியது போல் தூய்மை பணியாளர்கள் ஆக்கக்கூடாது என்பது போன்ற பல விஷயங்களை பல காலகட்டத்தில் கட்டுரைகளாக வெளியிட்ட கீற்று இணையதளத்திலிருந்து தொகுத்து புத்தகமாக அளித்திருக்கிறார் ஆசிரியர்.

மேலும் பல பொதுக் கூட்டங்களில் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இடதுசாரி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பேசிய உரைகளையும் பத்திரிக்கை செய்திகளையும் ஆதாரத்தோடு அளித்திருக்கிறார். நாம் அனைவரும் நிச்சயம் நினைத்துப் பார்த்திருக்க முடியாத அளவிற்கு அவல நிலையில் இருக்கும் தூய்மை பணியாளர்களை குறித்து நிச்சயம் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதோடு அவர்கள் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது இந்த கட்டுரை தொகுப்பு.

தூய்மை பணியாளர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்று பேசுவதும், அவர்கள் கால்களை கழுவுவதும், அவர்கள் அருகில் அமர்ந்து வாழ்க்கையில் ஒரே ஒரு நாள் உணவு அருந்துவதும் அவர்களது அவல நிலைக்கு தீர்வாகாது என்பது அனைவரும் அறிந்ததே!

ஆக அரசியல் நாடகங்களை எதிர்த்து வலுவாக குரல் கொடுப்போம்.
தூய்மை பணியாளர்களும் சக மனிதர்களே என்பதை பிற அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ளவே போராட வேண்டியிருக்கிறது என்பது கசப்பான உண்மை!

மருத்துவமனையில், ஓவிய வகுப்பில் என காத்திருப்பு நேரத்தில் வாசித்துக் கொண்டிருந்தேன், அப்பொழுதெல்லாம் சிலர் தலைப்பை ஆர்வமாக பார்த்து புத்தகத்தை வாங்கி சில பக்கங்களை புரட்டினர்.

இப்புத்தகம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன்

அ.யோகானந்தி.