எலியின் பாஸ்வேர்டு - புத்தக விமர்சனம்

eliyin-password-book-review
எலியின் பாஸ்வேர்டு - புத்தக விமர்சனம்

புத்தகம்: எலியின் பாஸ்வேர்டு
ஆசிரியர்: எஸ்.ரா
பக்கங்கள்: 40

விதவிதமான பொம்மைகளைக் காட்டி குழந்தைகளை ஈர்ப்பது போன்றதே வித்தியாசமான கதைகளால் குழந்தைகளின் கருத்தைக் கவர்வதும். ஆனால் அவர்கள் விரும்பும் கதைகளைச் சொல்வது அவ்வளவு எளிதானதல்ல. குழந்தைகளின் உலகமே கற்பனைகள் நிறைந்தது. அந்த உலகத்திற்குள் நுழைந்து அவர்களை பயணிக்க வைப்பது போல அவர்களுக்கு கதை சொல்ல வேண்டும். எளிமையான ஒன்றைச் சொன்னாலும் அதை வியப்பாகச் சொல்லத் தெரிய வேண்டும். குறிப்பாக நமது உடல்மொழியால் அவர்களை ஈர்க்க வேண்டும். அதற்கு ஏற்ற ஒரு கதையாக இந்த எலியின் பாஸ்வேர்டு கதையைச் சொல்லலாம். இக்கதைகளை நாம் நமது உடலசைவோடு ஏற்ற இறக்கமாகச் சொன்னால் குழந்தைகளை எளிதாக ஈர்க்கலாம்.

தலைப்பிலேயே இக்கதையின் கருவை ஊகித்திருப்பீர்கள். ஆம் இன்றைய காலத்தில் நமது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க நாம் கடவுச்சொல்லை(பாஸ்வேர்டு) உபயோகிக்கிறோம். அதேபோல ஒரு எலிக்கூட்டம் தனது எதிரிகளான பாம்புகளிடம் இருந்து தப்பிக்க எப்படியான கடவுச்சொற்களை உபயோகித்தன என்பதே கதைக்கரு. அதோடு அதிகாரம் எப்படி வலிமை குறைந்தவர்கள் மீது தனது பலத்தைக் காட்டுகிறது என்பதையும் கதையோடு ஊடாக கருத்தாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

அதை சட்டம் போடுவதும் நீங்கள். சட்டத்தை மீறி குற்றம் செய்வதும் நீங்கள். குற்றத்தை விசாரிப்பதும் நீங்கள். இப்படி இருக்கையில் எங்களுக்கான நீதியை நீங்கள் எப்படி சரியாகத் தர முடியும் என முயல் பாம்பிடம் கேட்பதாக குறிப்பிட்டிருப்பார். இது ஓட்டிற்குப் பணம் வாங்கும் பொதுமக்களுக்குப் பொருந்துவதாக எனக்குத் தோன்றுகிறது. அதாவது பணத்தை வாங்கி ஓட்டுப் போட்ட பிறகு அவர்களிடம் நமக்கு நடக்கும் அநீதிகளை எதிர்த்து நியாயம் கேட்டால் எப்படி நீதி கிடைக்கும்?

இந்த நிலையில் எலிகள் முயலிடம் ஆலோசனை கேட்கும். இதுவும் ஒரு நல்ல கருத்தை நமக்குச் சொல்கிறது. நமக்கு எது சரி என்று தெரியாத போது அது பற்றி சரியாகத் தெரிந்த ஒருவரிடம் ஆலோசனை பெறுவது தவறில்லை என்பதைக் கூறும். முயல் எலிக்கூட்டத்தில் ஒன்றை படிக்க வைக்க ஆலோசனை கொடுக்கும். அதன்படி டாம் என்ற எலியைப் பள்ளியில் படிக்க வைத்து மேல்படிப்பிற்கு வெளிநாடு அனுப்பி வைக்கின்றன. அந்த எலியும் காரியத்தில் கண்ணாக இருந்து நவீன தொழில்நுட்பத்தைக் கற்று ஊர் திரும்புகிறது.

அதனால் தத்தமது வலைகளுக்கு பாஸ்வேர்டு போட்ட கதவுகளை அமைக்கிறது. இதையறிந்த பாம்புகள் தனது கூட்டத்திலிருந்து ராக் என்ற பாம்பை படிக்க வைத்து அந்தப் பாஸ்வேர்டை உடைக்கின்றன. வெற்றி பெறும் வரை வேகமாக ஓட வேண்டும். வெற்றி பெற்ற பின்னர் அதை விட வேகமாக ஓட வேண்டும். அப்போது தான் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இந்தக் கருத்து இங்கு பொருத்தமாக இருக்கும். எனவே மீண்டும் படித்து புதிய பாஸ்வேர்டை உருவாக்கி தனது கூட்டத்தாரை காக்கிறது. ராக் பாம்பை சிறை பிடிக்கிறது. ஒரு சிறு அசம்பாவிதத்தால் ஒரு உயிரிழப்பு ஏற்படுகிறது.

இச்சம்பவத்திற்குப் பின்னர் பாம்புகளுக்கும் எலிகளுக்கும் நட்பானதா? இல்லையா? என்பதே முடிவு. கதைக்கேற்ற படங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பின் மீதான ஈர்ப்பை அதிகரிக்க உதவுகின்றன. வாசிக்கத் தொடங்கும் குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகம். வாசிப்போம் வளர்வோம்.