அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு - புத்தக விமர்சனம்

arignar-anna-life-history-book-review
அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு - புத்தக விமர்சனம்

நூலின் பெயர் : அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு
நூலாசிரியர் : பாலமுரளி
விலை: 50
பக்கம்:94
பதிப்பகம் : தமிழன் கம்ப்யூட்டர்ஸ்
பதிப்பாசிரியர் :எம் சாதிக் பாஷா

அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளிப் பாடப்புத்தகங்கள் வாயிலாகப் பள்ளி நாட்களில் இருந்து படித்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் என்ற உந்துதல் எழ இந்த நூலைப் பார்த்ததும் வாங்கிவிட்டேன்.

மொத்தம் எட்டு தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. அண்ணாவின் பிறந்த தினம் அனைவரும் அறிந்த செப்டம்பர் 15 1909 , ஆனால் அவர் பெரியாரின் பாசறையில் இருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியது என்னவோ பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17 ,1949.. பேரறிஞரின் பெருந்தன்மைக்கு இதனை ஓர் உதாரணமாகக் காண்கிறேன்.

பேரறிஞர் அண்ணாவின் பெருமைகளை எனது பாணியில் இப்படி எழுதலாம் என்று தோன்றியது.

‘பேரறி(வு) அண்ணா வாழ்க!
பெருந்தமிழ்த் தலைவர் வாழ்க!
ஆரண நூல்கள் தந்த
அணித்தமிழ்த் தொண்டர் வாழ்க!
வாரணப் பேச்சால் வென்ற
வளம்மிகும் உரைஞர் வாழ்க!
பூரணப் புலமை பெற்ற
புகழ்மிகும் முதல்வர் வாழ்க
அரசியல் சித்தர் வாழ்க!
அறநெறிச் செல்வர் வாழ்க!
தரமிகு எழுத்தர் வாழ்க!
தனித்துவ உதயர் வாழ்க!
வரமெனப் பிறந்தார் வாழ்க!
வண்டமிழ் மறவர் வாழ்க!
உரமுடன் உழைத்தார் வாழ்க!
உறவெனச் சிறந்தார் வாழ்க!
நாடகம் வழியே மக்கள்
நடைமுறை வாழ்வைச் சொன்னார்!
ஊடகம் வழியே நல்ல
ஒற்றுமைக் கருத்தைச் சொன்னார்!
பாடமாய்ப் பலவும் சொன்னார்
பாமரர் நிலையைச் சொன்னார்!
தேடலின் தெளிவைச் சொன்னார்!
சென்னையைத் தமிழ்நா டென்றார்!

அறிஞர் அண்ணாவின் ஆட்சியில் சித்திரை நிலவாய் முத்திரை பதித்த பத்து கட்டளைகள்.

1. தமிழ்நாடு எனத் தமிழகம் பெயர் பெற்றமை.
2. இருமொழித் திட்டம் தமிழ் மற்றும் ஆங்கிலம்
3. தமிழ் ஆட்சிச் சொற்கள் அகிலம் சென்றமை
4. இந்தி மொழி நீக்கம்.
5. பேருந்துகள் தேசிய உடமையாக்கப் பெற்றமை
6. தமிழ் வளர்ச்சி குறள் தத்துவம் பரவியமை
7. தன்மானத் திருமண சட்டம்
8. புதுமுக வகுப்பு வரை இலவச கல்வி
9. தமிழ் வழி கல்வி வளர்ச்சி
10. தரிசு நிலங்களுக்கு வரி நீக்கம்

போப்பாண்டவரிடம் வரம் கேட்டு போர்ச்சுகல் சிறையில் இருந்த ரானடேவை மீட்டது, அரசியல் துரோகங்களை அமைதியாகச் சந்தித்தது…என்று இந்த நூலில் நான் அறியாத செய்திகள் பல
இருந்தன.

அண்ணாவுக்குச் சிலை வைத்து தம்பிகள், மகாத்மா காந்தி மறையவில்லை. மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று பேரறிஞர் அண்ணா ‌ எழுதிய கட்டுரையும் முதல்வராக இருக்கும்போது முத்தாய்ப்பாய் செய்தவையும், முட்டாள்களை அறிவாளியாக்கும் கட்சி திமுக .அதனால் முட்டாள்கள் இருந்தால் கட்சி உறுப்பினராகலாம் என்றார். மேலும் எங்களுக்கு முட்டாள்கள் தேவைப்படுகிறார்கள். தமிழக முழுவதும் உள்ள முட்டாள்கள் சேர்ந்தால் முழுமையான எழுத்தறி பெற்ற முழுமையான அறிவார்ந்த முழுமதி நிலவு போன்ற அழகான தமிழகத்தை உருவாக்கலாம் ‌ என்று ‌ ஒருவரின் அறிக்கைக்குப் பதில் அறிக்கை எழுதினார் என்பதையும் அறிந்த போது அண்ணாவின் நகைச்சுவை உணர்வு சிந்திக்க வைத்தது. சோகங்கள் கரைந்தன. முகத்தில் சுடரெனப் புன்னகை மலர்ந்தது.

நாடக மேடையில் செய்த சமாளிப்பு திராவிட மாடலாக இருந்த அண்ணாவைப் பற்றி அறிந்தபோது திராவிட மாடல் ஆட்சி பற்றியும் அறியும் ஆர்வத்தைத் தூண்டியது.

மொத்தத்தில் அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு அனைவருக்கும் அறிவூட்டும் சாசனம்!

பேரறிஞர் அண்ணா
அரசியலுக்கு ஆசனம்.
ஆசிரியருக்குப் பாசனம்