மருத்துவத் தியானம் புத்தக விமர்சனம்

maruthuva-thiyanam-book-review
மருத்துவத் தியானம் புத்தக விமர்சனம்

மனநல மருத்துவர் நடராஜன் பெருமாள், நாற்கரம் பதிப்பகம், டிசம்பர் 2025, பக்.92, விலை ₹120.

சங்க இலக்கியங்களைப் போலவே, பத்தியெழுத்துகளிலும் அர்த்தம் பொதிந்த கடினத்தன்மையைப் பழங்காலப் புத்தகங்களில் கண்டிருக்கிறோம். அதன்பிறகான காலமாற்றத்தில், ஆழ்ந்த புலமை கொண்டவர்களுக்குத் தீனி போடும் வாசிப்பை எந்த எழுத்தாளரும் தரத் துணிந்ததில்லை.
எல்லாவற்றிலும் புகுத்தப்பட்ட எளிமைத்தனம், 'எனக்கு இவ்வளவு அறிவு கொடுத்தால் போதும்' என, கற்பதிலும் வாசிப்பாளருக்குச் சோம்பலைத் தொற்ற வைத்துவிட்டது. அதன் நீட்சியாகத்தான் மரபுக் கவிதைகள், வெண்பாக்கள் போன்றவை வழக்கொழிந்துப் போயின.

என் வாசிப்பில் நீண்ட காலத்திற்குப் பின், அந்தத் தரத்திலான ரா'வான கற்றலை, மருத்துவர் #நடராஜன்_பெருமாள் எழுத்தில் கண்டேன்.

புத்தகங்களில் கன்டென்ட்டையும் எழுத்தாளர் உரையையும் மட்டுமே படிக்கும் வழக்கம் கொண்ட நான், பெரும்பாலும் அணிந்துரை வகையறாக்களைப் புறக்கணித்து விடுவேன். ஆனால் ஏனோ தெரியவில்லை, நண்பர் #தசாமி யின் அணிந்துரையை முழுமையாகப் படித்தேன். வாசிப்பவர், புத்தகத்துக்குள் ஆர்வத்துடன் இறங்கும்வகையில், நூலாசிரியரை முழுமையாக உள்ளுணர்ந்து எழுதியிருக்கிறார். அவர்களிருவருக்கும் ஒத்த ரசனை அமைந்திருப்பது ஆச்சரியமான ஒருங்கமைவு.

'..இடைநிறுத்தி விளக்கம் கேட்காமல், சொல்லி முடித்தவுடன் கேள்வி கேட்கலாம்; சந்தேகம் எழுப்பலாம்' எனும் நிபந்தனையைத் தன் மகனுக்குச் சொன்னதாய்ச்சொல்லி, நமக்கானதாகவும் நம்பவைக்கிறார்.

'..தாம் பயன்படுகிறோம் என்ற பிரக்ஞை எதுவுமில்லாமலே மரம் பயன்தருகிறது' என்கிற இவரும், அந்த மரத்தைப் போலத்தான்.

புத்தனையும் இயேசுவையும் மட்டுமல்ல; மனம், அன்பு, கோபம்.. என இதுவரை பேசாதவையெல்லாம் பேசினால் என்னாகும் என்கிற கற்பனையில் தொடங்கி, உளவியல் ரீதியாக நம்மை அவற்றுடன் பேசவைக்கிறது இவருடைய எழுத்து மருத்துவம்.

தான் மெத்தப் படித்தவரென்பதைக் காட்டும்வகையிலான மருத்துவ; உளவியல் மொழிகளின் புரியாத வார்த்தைப் பிரயோகப் பயன்பாடுகளைத் தவிர்த்துவிட்டு, தேவையான மேற்கோள்களுடன் அனைவருக்குமான எளிய மொழியில் ஆன்மீகக் கருத்துகளை நிறையவே அலசுவதுடன், 'தியானம் செய்வது எப்படி?' என்று தொடங்கி, அதனால் ஏற்படும் மாற்றங்களையும் உள்ளது உள்ளபடி சொல்லிவிடுகிறார்.

இப்புத்தகத்தின் எந்த இடத்திலும் தன் அதிமேதாவித்தனத்தை இவர் விளம்பரப்படுத்திக் கொள்ளவேயில்லை.

தன் குழப்பமான மனநிலையையும் மனநல மருத்துவரை அணுக வேண்டிய சூழ்நிலையையும் உணர்ந்தவர் கூட, அங்கு செல்லத் தயங்கிக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. '..அங்க போன பின்னாடி நமக்கு புதுசா ஒரு பட்டம் கட்டி வுட்டுடறாங்களே, பைத்தியம்ன்னு. அதுக்கு பயந்துகிட்டே அங்க போகல' என்பவர்களுக்கான பதிலையும் ஒரு தேர்ந்த மருத்துவராக எடுத்துரைக்கிறார்.
'கர்மா' என்கிற செயல்விளைவுத் தத்துவத்தையும் மிக எளிமையாக விளக்கியிருப்பது சிறப்பு. இப்புத்தகத்தின் கடைசியில் வரும் 'எப்படி? எதற்கு? ஏன்?' எனும் கட்டுரையை முதல் கட்டுரையாகவே வைத்திருக்கலாம். உளவியல் பற்றிய புரிதலுடன் வாசகர் உள்நுழைய ஏதுவாக இருந்திருக்கும்.

"தியானம் - பசி - சோறு - காசு - உழைப்பு - தெம்பு - நல்ல உணவு - படிப்பு - வாய்ப்பு" என்கிற சுழற்சியை விளக்கும் ஒரு பத்தியைப் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும்...

'..மனிதனாகப் பிறந்ததன் நோக்கம் தியானம் என்று உட்கார்ந்தால் பசிக்கிறது. பசித்தால் சாப்பிடச் சோறு வேண்டும். சோறு வேண்டுமானால் காசு வேண்டும். காசு வேண்டுமானால் உழைக்க வேண்டும். உழைப்பதற்கு உடலில் தெம்பு வேண்டும். தெம்பு வேண்டுமானால் நிறைய நல்ல உணவுகளை உண்ண வேண்டும். அதற்கு இன்னும் நிறைய காசு வேண்டும். நிறைய காசு வேண்டுமானால் நிறைய உழைக்க வேண்டும்; அல்லது நிறைய காசு சம்பாதிக்கும் அளவிற்குப் படிக்க வேண்டும். படிப்பு வேண்டுமானால் வாய்ப்பு வேண்டும். வாய்ப்பு கிடைத்தால்தான் நல்ல சோறு கிடைக்கும். இதையெல்லாம் செய்தால்தான் இந்த உலகத்தில் வாழ முடியும். அதுதான் இங்கு நிஜமாக இருக்கிறபோது, அதைவிடுத்து 'இந்த உலகம் வெறும் மாயை; தியானம் செய், ஞான நிலையை அடை' என்று சொன்னால் பசி எங்ஙனம் நீங்கும்?...' என்று எல்லாத் திசைகளிலும் தானே கேள்விகளை எழுப்பி, அவற்றிற்கான பதில்களையும் தனது பாணியில் அழகாகச் சொல்லிவிடுகிறார், நூலாசிரியர்.

ஆன்மீகத்தோடு, கம்யூனிசம்-இட ஒதுக்கீடு-சமூகப்பொறுப்புணர்வு என அத்தனையும் ஒன்றிணையும் புள்ளியாக #மருத்துவத்_தியானம் நமக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.

இப்புத்தகத்தை வாசித்ததில் மனநிறைவு.
பேரன்புடன்,
ப்ரியா வெங்கடேசன் @ 8056584237.