பூமர் புத்தக விமர்சனம்

boomar-book-review
பூமர் புத்தக விமர்சனம்

ஆசிரியர் -சௌம்யா
எழுத்து பிரசுரம்
பக்கங்கள் -170
ஆசிரியரின் புத்தகங்களை ஏற்கனவே வாசித்திருக்கிறேன்.

எளிய நடை, அருகிருந்து கதை சொல்வதைப் போல,நாம் பார்த்துப் பழகிய மனிதர்களின் சாயலில் கதாபாத்திரங்களையும்,கதைகளையும் அமைத்திருப்பார்.ஏற்கனவே இணையத்தில் வாசித்த சில கதைகள் இருக்கிறது.திரும்ப வாசிக்கும் போதும் நம்மை ஈர்த்துக் கொள்கிற எழுத்து.இந்தத் தொகுப்பில் மொத்தம் 12 சிறுகதைகள்.நடுத்தர மக்களின் வாழ்வியலைச் சொல்பவை,அன்பு காதல்,அறச்சீற்றம் கூடவே இன்றைய சமூகத்தின் வேறொரு பரிணாமத்தையும்,பலப் பல உணர்வுகளையும் காட்டுகின்ற கதைகள்.

சொந்த வீட்டின் மீதான ஓட்டுதல் சொல்ல முடியாத ஒரு உணர்வைத் தரக்கூடியது.அங்கிருக்கும் மண்ணிலிருந்து மரம்,செடி,கொடி என அனைத்தும் நம்முடன் ஏதோ ஒரு பந்தத்துடன் நெருக்கமானவையாக இருக்கும்.அப்படியான ஒரு வீட்டை விற்கும் சூழல்,அதன் பின்னான பொருளாதாரத் தேவை, அழுத்தம் இப்படி எத்தனையோ காரணங்கள் இருந்தாலும்,வீடு கைவிட்டுப் போகக் கூடாது எனத் தவிக்கும் ஒருத்தியை அறிமுகப்படுத்தும் கதை"வாழிடம்".

மனதுக்கு நெருக்கமாக எதை நினைக்கிறோமோ அதுவே இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக மாறியதைச் சொல்லி முடிந்திருக்கிறது.மனதை பாரமாக்குகிற கதை இது.மரண பயம் ஒரு சிறுவனை எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதைச் சொல்கிற "சாகாவரம்".அவன் சந்திக்கும் சில நிகழ்வுகள் தொடர்ந்து பயத்தை ஏற்படுத்துவதும்,அதிலிருந்து மீள்வதற்கான வழியை அவனே நேரிடுவதும் கதையின் சிறப்பு.

இன்றைய தலைமுறையின் நட்பு காதல் இரண்டின் வரையறையைச் சொல்கிறது"பூமர்".காதல்,நட்பு, பொறாமை,கோபம்,தனக்கு மட்டுமே என உரிமை கொண்டாடும் குணம் இவை அனைத்தையும் சட் சட்டென மாற்றிக்கொள்ளும் மனம்,நட்பு, நட்புக்கு கொஞ்சம் மேல் என நமக்குத் தலை சுற்ற வைக்கும் இன்றைய பிள்ளைகளைப் பற்றிய ஜாலியான கதை இது.இளம் வயதில் ஒருத்தி நேரிட்ட ஒரு அவலத்தின் வெளிப்பாடு மனப்பிறழ்வாக மாறிக் காத்துக் கிடக்கிறது "பழி"கதையில்.

அந்தப் பெண்ணின் முன் கதையும்,
அவள் பழி தீர்க்கும் முறையும் நம்மை நடுங்க வைக்கும்.முக்கியமான ஒரு சமூக நீதியையும் உணர்த்துகிறது கதை.

ஒருவர் மீது அளவில்லாத அன்பு வைத்திருந்தால்,குறிப்பிட்ட அந்த நபரின் மீது சிறு குறை கூட மற்றவர்கள் சொல்வதற்கான வாய்ப்பைத் தராமல் பாதுகாப்போம்.அப்படி தன் தம்பியை,தன் மீதான அனைத்து அழுத்தங்களையும் தாங்கிக்கொண்டு காத்துக் கொண்டேயிருக்கிறாள் அக்கா.தன் தம்பியைத் அவள் தாங்கிப் பிடிக்கிற ஒவ்வொரு தருணமும் அவன் உணர்கிற அக்காவின் "உள்ளங்கை" குளிர்மை நமக்குள்ளும் பரவுகிறது.

மிக நெகிழ்வான கதை இது.
சொல்லாமல் உள்ளுக்குள் மறைத்து வைத்த காதல்,காலம் கடந்து உணர்ந்து கொள்ளப்படும் போது,
அப்போது அவர்கள் இருக்கும் சூழல் எப்படியான மாற்றத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தி இருக்கிறது என்பதைச் சொல்கிறது "தீராக் காதல்"இதில் ஒரு பெண் தனக்குப் பிடித்தவனை எப்படியெல்லாம் ரசிக்கிறாள் என்பதை வித்தியாசமாகச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.

பதின்ம வயதின் தொடக்கத்தில் இருக்கும் பிள்ளைகளை வளர்க்கும் இன்றைய பெற்றோரின் சங்கடங்களைச் சொல்கிற கதை "அலங்கோலம்".இயல்பான எந்த விஷயத்தையும் அதன் தன்மை மாறாமல் பிள்ளைகள் புரிந்து கொள்ளும் சூழலை பெற்றோர்தான் உருவாக்க வேண்டும் என்பதையும் சொல்கிறது.அழகான ஒரு நட்பையும் அறிமுகப்படுத்துகிறது இந்தக் கதை.

பெண்ணுக்காக இந்த சமூகம் கட்டமைத்து வைத்திருக்கிற ஒரு வட்டத்திற்குள் இருந்து வெளியே வரத் தயாராகிறாள் ஒருத்தி.மனைவி தாய்,குடும்பத்தைப் பார்க்க வேண்டியவள் என சுயநலமாகவே யோசிக்கிறது அவளைச் சுற்றி இருக்கும் கூட்டம்.தாய் நேரிட்ட அதே சூழ்நிலையை மகள் நேரிடும் போதுதான் தாயின் நியாயமும்,

அவள் எடுத்த முடிவின் தீவிரமும் புரிகிறது மகளுக்கு.தனக்கு வராத வரை அதன் பாதிப்பைப் புரிந்து கொள்ளக் கூட முயற்சிக்காத சுயநல மனிதர்களை அறிமுகப்படுத்துகிறது "ஐயுறவு".
நான் முற்போக்கானவன்,

பெண்களை மதிப்பவன்,எந்த சூழ்நிலையிலும் அவளுடன் நிற்பவன் என தன்னை சமூகத்திற்கு முன்னால் காட்டிக் கொள்கிறவர்களின் முகமூடியைக் கிழித்தெறிகிற கதை "மனக்குடல்"
எத்தனை மாற்றம் வந்தாலும் அடி மனதில் ஊறிக் கிடக்கிற சாதிய வெறியை மாற்றவே முடியாது.
ஏதாவது ஒரு கட்டத்தில் வெளியே தெரிந்துவிடும்.இந்தக் கதையில் அப்படி வெளிப்படுகிற அந்தத் தருணம்,இந்த அளவு வெறுப்பும், கீழான குணமும் உடைய ஒருவன் இருக்க முடியுமா என்ற அதிர்ச்சியைத் தருகிறது நமக்கு.

இந்தக் கதையின் உரையாடல்கள் மிக முக்கியமானவை.இந்தத் தொகுப்பில் என்னை வெகுவாகக் கவர்ந்த கதையும் இதுதான்.

இயல்பான எழுத்து நடையும் எந்த ஆடம்பரமும் இல்லாத வாக்கிய அமைப்பும்,நம்மிடையே நடமாடும் மனிதர்களைப் போன்ற கதாபாத்திர வடிவமைப்புமே ஆசிரியரின் கதைகளுக்கு சிறப்பு.அந்த இயல்பே நமக்கு மிக நெருக்கமான எழுத்தாகவும் மாறிவிடுகிறது. எல்லாக் கதைகளிலும் அடிப்படையாக ஒரு அன்பு மெல்லிய இழையாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.ஒவ்வொரு கதையை வாசித்த பிறகும் கொஞ்ச நேரம் அதைப் பற்றியே யோசிக்கவும் வைக்கிறது.நல்ல வாசிப்பனுபவம்.