ஒரு சிறு இசை - புத்தக விமர்சனம்

oru-siru-esai-book-review
ஒரு சிறு இசை - புத்தக விமர்சனம்

நெடிய ஓட்டத்திற்கு பின் இளைப்பாறல் தேவையாகவே இருக்கிறது ஒவ்வொரு அசைவிற்கு பின்னும்.

நாம் கிழித்தெறிந்த நாட்காட்டியின் காகித குப்பைகளோடு நாம் மறைக்க முற்பட்ட மனஓசைகளும் கேட்பாரற்று கிடக்கிறது .

அதன் கசங்கல்களில் ஆழ்மனத்தின் அறுபடாத நூலின் கண்ணிகள் பெருவலியென தகித்து கிடப்பதுண்டு .

யாரிடமேனும் வெளிப்படுத்தி விட கூடாதென்ற நெருக்குதலோடு இக்கதைகள் நம்மை அணைத்து கொள்கின்றன.

அனைவருக்கும் தெரியவே பலவற்றை அச்சில் ஏற்றிய பின் அது எப்படியோ , உரிய மனதிடம் இருந்த ரகசியங்கள் , வாசித்தவரின் மனதிற்குள்ளும் ஆழ் ரகசியங்களாகவே புதைந்து கொள்கின்றன.

பார்வைகளும் , தீண்டல்களும் , சில நேரங்களில் எல்லை தாண்டிய உணர்வுகளாக உருக்கொள்ளபடுகின்றன . ஆனால் உணர்வுகள் மட்டும் அதிக நேரங்களில் ஏன் தவறென கொள்ளாது , மன்னிப்பு வரத்தை பெற்று விடுகின்றன?

உணர்வுகள் செயல் வடிவம் பெறாது என்ற நிதர்சனமா , இல்லை அது போன்ற கருதுகோள் அனைவருக்கும் பொதுவென்ற பொருந்துதலா, எதுவோ இந்நூல் அதுவாகவே மாறிக் கிடக்கிறது .
தன் உள் உணர்வுகளை இக்கதை மாந்தர்கள் தம் வாழ்நாள் முழுவதும் பிரசவிக்கா கருவெனவே சுமந்து அலைகின்றனர் .

வண்ணதாசன் அவர்களோடு நம்மையும் சுமக்க வைத்திருக்கிறார் .
சக மனிதர்களின் மன ஓட்டங்களை அவதானித்து செல்ல முடியாத இக்கணங்களிலும், மூக்கம்மா ஆச்சியின் சந்தன கலர் சட்டையை அவளுக்காய் நாமும் பத்திரபடுத்தி கொள்கிறோம் .

ஜானகியின் உறக்கத்தோடு சிறகினை பிரிந்த அவளின் இறகினை தழுவிக் கொள்கிறோம் .
காமத்தோடும் , கலவியோடும் முடிந்து போன உணர்வுகளுக்கு முன் , ஒரு பூவின் மலரும் ஓசை என விரியும் மன ஓட்டங்களை மேற்சொன்ன இரண்டோடு பொருந்தா அம்மூன்றாம் உணர்வோடு வாழ்ந்து முடிந்த அவர்களின் முன் இப்பொழுதெல்லாம் நாமும் , நாமாக வாழ்த்தான் முடிவதில்லை என்றே தோன்றுகிறது எனக்கு .

நேர்கோடுகளே சரியென கொண்டு விட்ட பின் , வளை கோடுகள் வந்தால் என் செய்வதென்ற கேள்வியற்று , அதனை செவிக்குள் தனக்கும் மட்டும் கேட்கும் இசையென ஒலித்து ரசிக்கின்ற உணர்வுகள் யாருக்குத்தான் இல்லாமல் இல்லை.

தன்னிடம் மிருந்து விலகி போன மனைவியை , சதா பின்தொடர்ந்த கணவனின் கைகளுக்குள் , அவளோடு நெருங்கி போன ஆண் நட்பின் அடைக்கலம் ஏனோ அவஸ்தயாகவே எஞ்சி நிற்கிறது . அது அவர்களின் அந்திம கால நாட்களின் தொடர் நிகழ்வென நீட்சித்தும் போகிறது .

தன்னை சரி செய்து கொள்ளாத தன்னுணர்வினை , இணையின் விலக்கத்தின் பின்னேதான் உணர முடியுமெனில் , ஆண் , பெண் உறவுகள் மீண்டும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த பட வேண்டியதே .
அதற்கும் முன்னே ஒரு சிறு இசை கேட்ட பிறகு ஆய்விற்குள் செல்ல முற்படலாம் .

ஏன் எனில்
நம்முள்ளும் இசைத்திருக்க கூடும் . யாரேனும் கேட்பதற்குள் நாமும் கேட்கலாம் தான் .
கூறுங்களேன் .....
யாரிடம் தான் ஒரு சிறு இசை இல்லை என ?
நூல் அறிமுகம் : ஒரு சிறு இசை
நூல் ஆசிரியர் : வண்ணதாசன்
-சித்ரா சுப்பையா