போகிப் பண்டிகை வரலாறு!

pogi-pandigai-varalaru
போகிப் பண்டிகை வரலாறு!

தமிழர் திருநாளான தைப் பொங்கல் பண்டிகையின் தொடக்கமாகக் கொண்டாடப்படுவது போகிப் பண்டிகை. மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி புதன்கிழமை அன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக ஜனவரி 13ஆம் தேதி வரும் நிலையில், இந்த முறை ஒரு நாள் தாமதமாக வருகிறது.

பண்டைய புராணங்களின்படி, போகிப் பண்டிகை மழையின் கடவுளான 'இந்திர தேவனுக்கு' அர்ப்பணிக்கப்பட்ட நாளாகக் கருதப்படுகிறது. உழவுக்கு ஆதாரமான மழையைத் தரும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவாகப் பண்டைய காலம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆன்மீக ரீதியாக, போகி என்பது அனுபவிப்பவர் என்ற சொல்லில் இருந்து வந்தது. நம்மிடம் உள்ள தீய குணங்களை நீக்கி, தூய்மையான மனதுடன் இறைவனை வழிபட வேண்டும் என்பதே இதன் தத்துவம். "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற சொல்லாடலின்படி, வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை மட்டுமல்லாது, மனதிலுள்ள கசப்புகளையும் நீக்கிப் புதிய வாழ்வைத் தொடங்குவதே இந்நாளின் நோக்கம்.

கொண்டாடுவது எப்படி?

போகி அன்று அதிகாலையிலேயே மக்கள் எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து, தேவையற்ற பழைய பொருட்களைத் தீயிட்டு எரிப்பார்கள். வீட்டின் சுவர்களுக்குப் புது வர்ணம் பூசி, மாவிலை மற்றும் வேப்பிலை தோரணங்களால் அலங்கரிப்பார்கள்.

கிராமப்புறங்களில் 'காப்புக் கட்டுதல்' ஒரு முக்கிய நிகழ்வாகும். வேப்பிலை, ஆவாரம்பூ மற்றும் பூலப்பூ ஆகியவற்றை இணைத்துக் காப்பு கட்டி, வீட்டின் மேல் கூரைகளில் சொருகி வைப்பார்கள். இது கிருமிநாசினியாகவும், தீய சக்திகள் அண்டாமல் பாதுகாக்கும் மங்கலப் பொருளாகவும் கருதப்படுகிறது. இந்நாளில் சிறுவர்கள் 'போகி கொட்டு' அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

கால மாற்றத்திற்கு ஏற்ப, போகிப் பண்டிகையைக் கொண்டாடும் முறையில் விழிப்புணர்வு அவசியம். பழைய துணி மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களை மட்டுமே எரிக்கலாம். பிளாஸ்டிக், டயர்கள் மற்றும் ரப்பர் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்களை எரிப்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். காற்று மாசுபடுவதைத் தடுத்து, இயற்கையோடு இணைந்த போகியாக இதைக் கொண்டாடுவது சாலச்சிறந்தது.

தை மகளை வரவேற்கத் தயாராகும் இந்த வேளையில், போகிப் பண்டிகை நம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் புதிய ஒளியை ஏற்றி வைப்பதாக அமைய அனைவருக்கும் வாழ்த்துகள்.