ஈரம் - சிறுகதை

eram-short-story
ஈரம் - சிறுகதை

யாருக்குத்தான் பிடிக்காது மழை? எல்லோருக்கும் பிடிச்சதுதான் மழை ஆனா எனக்குப் பிடிக்கல ஒன்னு அதுனால இன்னிக்கிப் பொழப்பு கேள்விக்குறியாச்சு, செங்கக் காளவாசல் காரரு இன்னிக்கி மழை நின்னாத்தான் வேலை மழைபேஞ்சா சோலி இல்லைன்னு சொல்லிட்டாரு அதை நிப்பாட்டுறது நம்ம கையிலயா இருக்கு

சாமியத்தான் கும்புடனும் மழைய நிப்பாட்டுன்னு ஆனா ஊரு சனங்க எல்லாம் குடிக்க குளிக்க வெவசாயத்துக்கு மழை வேணும்னு வேண்டுறப்ப நா மட்டும் வேணாமுன்னு வேண்டுனா சாமி நான் கேக்குறதக் கேக்குமா?

என் கஸ்டம் எனக்குத்தான் தெரியும் இந்த மூணு நாளா ஏதோ பொயலாம் அதுனால ஊரு பூராம் மழை இன்னிக்கி கரையக் கடந்து ருச்சாம் அதுனால மழை கொறஞ்சாலும் தூறல் கொறையல அதுனால வேல நின்னு போய் கெடக்கு

இம்புட்டுக்கும் நெறையா செங்க வேணு முன்னு ஆடர் வந்து கெடக்கு ஆனா மழைன்னால செங்க அருக்க முடியல செங்க அருக்குற எடமெல்லாம் தண்ணி தேங்கிக் கெடக்கு மூனு நாளா வெலை இல்லாததால கையில இருந்த காசெல்லாம் தீந்துபோச்சு மூனுநாளா நானும் என் புருசனும் வந்து வந்து போறோம் ஒன்னும் கதைக்கு ஆகல பசி வேற வயித்தக்கிள்ளுது சரி மொதலாளிக்கிட்ட எதுனாச்சும் கேட்டுப்பாப்போம் நு தோணிச்சி

அவர்கிட்ட மண்டையச்சொறிஞ்சிக்கிட்டு நின்னப்பவே அவர் சொன்னாரு

” மண்டையச்சொறிஞ்சி ஒன்னும் பிரயோசனமில்ல நானே அருத்த செங்கல தார்ப்பாய் போட்டு மூடிவைச்சிருக்கேன் மழையில எத்தன தேறும்னு தெரியல மூனுநாளைக்கி முன்னாடி அருத்தசெங்கல் எல்லாம் கரைஞ்சி போயிடுச்சு அதுல நஸ்ட்டம் காப்பாத்திவைச்சிருக்குற மத்த கல்ல சுடனும்னா கல்லு சேரல இனி மழை நின்னாத்தான் சோலி அதுவரை வானத்தப் பாத்துக்கிட்டு கெடக்க வேண்டியது தான்

நானும் தேங்கா ஒடைச்சிக்கூரை மேல போட்டாச்சு செகுட்டுஅய்யனாருக்கு மழைய நிப்பாட்டு அடசல் வைக்கிறேன்னு வேண்டியாச்சு அவர் காதுல எதுவும் விழுகல மூனுநாளா மழை பிச்செடுத்துருச்சு என்னத்தச்சொல்ல” நு பொலம்புனாரு

” அய்யா மூனுநாளா வேலை இல்ல சமைக்க அரிசி வாங்கனும் பிள்ளகுட்டியெல்லாம் பட்டினி வேற ஏதாவது வேலை குடுத்தா செய்யிறோம் பாத்து பெரிய மனசு வையிங்க ஒங்களுக்குப் புண்ணியமாப்போகும்” நு கெஞ்சினேன்

“அவரும் கொஞ்சம் மண்டையச்சொறிஞ்சி யோசனை பண்ணிப்பாத்துட்டு சரி ஒன்னையும் பாத்தாப் பாவமாத்தான் இருக்கு ஒன்னு செய் ஒரு வாரமா அருத்த செங்கல் எல்லாம் தார்ப்பாலின் போட்டு மூடி வைச்சி ருக்கு அடுத்த மழைக்குத்தாங்காது அதை அள்ளிட்டு வந்து காளவாசல் கொட்டகைக் குள்ள அடுக்குங்க ரெண்டுபேரும் செய்யிங்க கூலி தாறேன் இது அவசரமில்ல இருந்தாலும் உங்களுக்காகச் சொல்றேன் நானும் மனுசந்தான்”

இதக்கேட்டதும் சந்தோசமாப்போச்சு. தட்டு சும்மாடு அதுக்கு மேல சாக்கப்போட்டு அங்க அங்க அடுக்கிருந்த பச்சச் செங்கலக் கொண்டாந்து காளவாசல்ல நானும் புருசனும் அடுக்கத்தொடங்குனோம்

நசநசன்னு மழை அதுல ஒடம்பெல்லாம் நனைய ஆரம்பிச்சிச்சி அது ஒன்னும் புதுசில்ல அதைப்பாத்தா வயித்த நெறப்ப முடியுமா கொஞ்சம் கொஞ்சமா கொண்டாந்து உள்ளாற அடுக்கையில மழைத்தண்ணி சேலைய நனைச்சி பாவாடையத்தாண்டி ஒடம்ப நனைக்க ஆரம்பிச்சது

அப்பத்தான் ஞாவகம் வந்துச்சு இன்னிக்கி வெளியன்றதும் அதைச்சமாளிக்க ஈரத்த உறிஞ்ச துணிய வைச்சிக் கட்டிட்டு வந்ததும்
அந்த ஈரத்தோட மழைத்தண்ணி ஈரமும் சேந்து நசநசத்துச்சு அந்த அவஸ்த்தைய வெளிய சொல்ல முடியாது

நேரம் ஆக ஆக ஈரம் அதிகமாகி ரெண்டும் கலந்து வழிய ஆரம்பிச்சது “ கொஞ்சம் போய்ட்டு வாறேன்னு சொல்லிட்டு மாத்துறதுக்குக் கொண்டாந்த துணிய எடுத்துக்கிட்டு மறைவாப்போய் மாத்த ஆரம்பிசேன் ஆனா அதுக்குள்ள ஈரத்துணி ஒரசி ஒரசி தொடையெல்லாம் தடிச்சி புண்ணாயிடுச்சு. எரிச்சல் தாங்கல ஒருவழியாத் துணியமாத்திட்டாலும் திரும்ப மழை உதிரக்கசிவு ரெண்டும் சேந்துஒடம்புல ஒரசும் போது நரகவேதனையத்தந்துச்சு

நான் ஒரு மாதிரி நடக்குறதைப்பாத்துட்டு என் புருசன் என்னனு விசாரிச்சாரு. நான் விசயத்தைச்சொன்னதும் “ நீ வேணுமுன்னா வீட்டுக்குப்போ நான் இருந்து முடிச்சிட்டு வாறேன்” நு சொன்னாரு

ஆனா எனக்கு இந்த மழை எப்ப நிக்கிம் எப்ப த் திரும்ப வேலை கெடைக்கும்னு தெரியல கெடைச்ச வேலையமுடிச்சா ரெண்டாளு கூலி 300+200 மொத்தம் 500 கெடைக்கும் அதை வைச்சி ஒரு வாரம் சமாளிக்கலாம்னு தோணிச்சி அதுனால வைராக்கியமா வேலைய நானும் முடிச்சிறேன்னு சொல்லிட்டு செய்ய ஆரம்பிச்சேன்

ஆனா கொஞ்சநேரத்துல நடக்கவே முடியல
அப்பப் பாத்து மொதலாளி வந்து கேட்டாரு “ ”என்னம்மா வேலை கையில கால்ல விழுந்து கேட்டன்னு கொடுத்தா இப்ப தேய்க்கிற வேகத்தைக்காணோம் சும்மா டயத்தைக் கடத்துற “ நு கோவிச்சிக்கிட்டாரு

என் நெலமைய கஸ்ட்டத்தை அவர்கிட்ட எப்படிச்சொல்லமுடியும் ”கால்ல முள்ளு குத்திருச்சு அய்யானு “ சொல்லி வைச்சேன்

ஆனா கொஞ்சநேரத்துல முடியல கசிவு ஜாஸ்த்திஆயிடுச்சு கீழேசொட்ட ஆரம்பிச்சிடுச்சு. அசிங்கமாப்போச்சு அப்ப மொதலாளியோட அம்மா வந்தாங்க வந்து என்னப்பாத்தவன்னே ஏதோ புரிஞ்சமாதிரி

“ ஏம்மா ஒடம்புக்கு முடியலையா” நு கேட்டாங்க
” இல்ல கால்ல முள்ளு குத்திடுச்சு ”நு சொன்னேன்
அதுக்குள்ள அவங்க “ என்ன தூரமா ?” நு கேட்டாங்க
நான் தலையக்கவுத்து மெளனம் காத்தேன்

அப்ப அவுங்க சொன்னாங்க” இது மாதிரி நாள்ல வேலைக்கி வரக்கூடாதும்மா ஏற்கனவே வீக்கா இருப்ப இந்த மாதிரி வேல செய்யக்கூடாது ஒனக்கு வேற 40 வயசாகும் போல பிரச்சனை அதிகமா இருக்குமே ”
ன்னாங்க
“ ஆமா வேற வழியில்லம்மா மூனு நாளா மழை ஒன்னும் பொழப்புக்கு வழியில்ல அதான் அய்யா கைல கால்ல விழுந்து வேலை வாங்குனோம் ஆனா அதை முடிக்கிறதுக்கு முன்னாடி பிரச்சனை ஆயிறுச்சு”
” கொஞ்சம் இரு குடிக்க டீ கொண்டாருறேன்” நு சொல்லிட்டு உள்ளாற போனாங்க

திரும்ப வெளியவந்து டீயக்குடுத்து குடிக்கச்சொன்னாங்க ஒன் புருசனுக்கும் குடுன்னு சொல்லி இன்னொரு கப்புல குடுத்தாங்க

நான் குடிச்சி முடிச்சதும் தனியாக் கூப்புட்டுப் போய் ஒரு களிம்பு குடுத்து தடிச்சி புண்ணான எடத்துல தடவச்சொன்னாங்க அப்புறம் ரெண்டு நாப்கின் குடுத்து மாத்திக்கச் சொன்னாங்க அதுக்கப்புறம்” நீ ஒடனே வீட்டுக்குக் கெளம்பு நான் அவன் கிட்டாச்சொல்லி சம்பளம் ஒனக்கும் குடுக்கச் சொல்றேன் போய் வீட்டுல ரெஸ்ட் எடுஇந்தா இந்தக்கொடையக்கொண்டுபோ ” நு சொல்லி அனுப்பி வைச்சாங்க

அப்ப நான் பரிதாபமாப் பாத்தேன் அவங்க
“ ஏம்மா ஒரு பொண்ணோட கஸ்டம் ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும் நாங்களும் மனுசங்கதான உன் கஸ்டத்தைப்பாத்து நான் சும்மா இருக்கமுடியுமா அப்புறம் நான் அப்புடி இருந்தா மனுச சென்மமா போ போய் சொன்னதைச் செய்” நு சொல்லும் போதுமழை வலுத்துச்சு

அப்ப அவங்க சொன்னாங்க” கொடையப் புடிம்மா திரும்ப நனையாத பாவம்”

எனக்கு ஒருபக்கம் அவங்க செத்துப்போன என் ஆத்தா நெனப்பக்குடுக்க மறுபக்கம் பெண் ஜென்மம் எவ்வளவு கொடுமை யான துன்னு நெனைச்சி அழுகைய அடக்கமுடியல அது மழையவிட அதிகமா இருந்துச்சு நிக்காம

அ.முத்துவிஜயன்