கிழிஞ்ச பை - சிறுகதை
அந்த அம்மாவோட கணவன் ஆஸ்பத்திரில் அட்மிட் ஆகியிருந்தாரு.தொணைக்கி அந்த அம்மா இருந்துச்சு. அந்த அம்மாவுக்கு மூணு மகள்கள் ஒருமகன் அவந்தான் கடைசி. அவந்தான் இப்ப அவங்களைக் கவனிச்சிட்டு இருக்கான் மூணுமகளுகளையும் கட்டிக்குடுத்தாலும் மாத்தி மாத்தி ஏதாவது ஒரு பிரச்சனைன்னு வந்து இங்குணக்குள்ளதான் கெடக்குதுக
அவந்தான் எல்லாத்தையும் பாத்துக்கிறான் இப்பயும் ஒருவா கஞ்சி குடிக்குறதே அவன் ஊத்துறதுனாலதான். பெத்தவுகளுக்கு கஞ்சி ஊத்துறது புள்ளைகளோட கடமைதான் இருந்தாலும் பொம்பளைப் புள்ளைகளால அது செய்ய முடியறதில்ல
ஆனா இவனுக்கே சரியான வேலையில்ல அதுக்குநடுவுலயும் பெத்தவங்களையும் அக்காமாருகளைநல்லாப்பாத்துக்குட்டான் அக்காமாருங்க லேசுபட்ட ஆளுக கெடையாது.ஏதாவது ஒரு பஞ்சாய்த்தகொண்டாந்துக்கிட்டே இருப்பாளுக இவந்தான் பொறுமையா சமாளிப்பான். ஆனா
இவனமாசமானப்ப அந்த அம்மா இருந்த சூழ்நிலைய நெனச்சாங்க. கண்ணுல தண்ணி கோர்த்துருச்சு ஒரு திருட்டுபண்ணுன பொம்பளைய மனசாற வாழ்த்தமுடியுமான்னு இப்ப நெனச்சா வாழ்த்தத்தோணிச்சு
அப்ப எல்லாம் ரொம்பக்கஸ்டம் . ரேசன் கடையில நாள் பூராம் வரிசையில நின்னு அரிசிவாங்கியாந்தப்ப பை கிழிஞ்சி அரிசி ரோடெல்லாம் கொட்டிப்போச்சு. அத அள்ளிட்டு வந்து ஒண்ணுக்கு மூணுதடவ பொடச்சி கழுவி சமைச்சி சாப்புட்ட காலமது. கைல காசப்பாக்க முடியாது வேலை ஒழுங்க இல்ல அவளோட புருசனுக்கு.
நாளத்தள்ளுறதே கஸ்ட்டம் அப்ப ஏற்கனவே ரெண்டுபொண்ணுக. அதுல அவளோட வீட்டுக்காரரு கதிகலங்கி கோயில் கோயிலாப்போயி ஆம்பளைப்புள்ள வேணுமுன்னு தவமிருந்தாரு அப்ப மூணாவதா இவ மாசமானா. என்னாபுள்ள பொறக்குமோன்னு கவலைப்பட்டு அதுவும் பொண்ணாப்போச்சு. ஒரு வருசத்துல அவ திரும்ப மாசமானா. அப்ப அதுவும்பொன்னாப்போயிருச்சுன்னா கஸ்டம்முன்னு எல்லாரும் பயமுறுத்துனாக
ஆரப்பாளையம் கிராஸ்ரோட்டுல ஒரு அம்மா அப்பெல்லாம் இதுல ஸ்பெச்லிஸ்ட்டா இருந்தாக. அவங்க கிட்டபோயி கலைச்சுறதுன்னு அந்த அம்மா முடிவெடுத்துச்சு. போய்ப்பாத்தப்ப வார செவ்வாக்கெழம
வரச்சொல்லுச்சி. இந்த அம்மா அதுக்குண்டான காசு துணி மணி எல்லாம் எடுத்துக்குட்டு கெளம்புச்சு. அப்ப போறதுபோறோம் திருப்புரோண்டம் (திருப்பரங்குன்றம்) முருகன் கோயிலுக்குப்போய் சாமி கும்புட்டுட்டு அப்புறமா ஆசுப்பத்திரிக்கிப் போகலாமுன்னு கெளம்புச்சு. கோயில்ல முருகன்கிட்ட போய் நல்ல படியா வேலை முடிய வேலவன வேண்டிக்கிட்டு வந்து பஸ் ஏறிச்சு. அங்க இருந்து பெரியாருக்கு அஞ்சாம் நம்பருல ஏறிவந்து எறங்கி ஒரு காப்பித்தண்ணிய சாப்புட்டுப்புட்டு ஆரப்பாளையம் கிராஸ் ரோடுக்கு பஸ் ஏறிச்சி. ஏறும்போதே ஒரு பொம்பளை சீட்டுப்புடிக்கிறதுல தகறாறு பண்ணுச்சு
பஸ்ல இடிச்சிக்கிட்டு ஏறி மாப்பாளையத்துல எறங்கிடுச்சு.
பஸ்ஸ விட்டு எறங்கி ஆஸ்பத்திரிக்கிப்போய் அவங்க பணம் கட்டச்சொன்னப்பதான் தெரிஞ்சது. பணப்பைய கத்திரிபோட்டது பைஅடிப்பாகத்துல வெட்டி உள்ளாற இருக்குற் காச எடுத்துருக்காங்க. மாப்பாளையுத்துல எறங்குன அந்த அம்மாதான் சோலி பாத்துருக்கனும்.
இப்ப வெறுங்கையாப்போச்சு. பத்துப்பைசா கைல இல்ல.
ஆசுப்பத்திரில பணம் இல்லாம ஒண்ணும் பண்ண முடியாதுன்னுட்டாக. இந்தப்பணமே அடகுக்கடையில பானைய அடகுவைச்சிக்கொண்டாந்த பணம்
திரும்ப பணம் பொறட்டுறது ரொம்பக்கஸ்ட்டம்....சோகமா நடந்து வீடு வந்து சேந்து அழுதுக்கிட்டே இருந்துச்சு. இருக்குற கஸ்ட்டத்துல இப்புடி ஆகிப்போச்சேன்னு. அப்ப அவளோட அம்மா வந்துருந்துச்சு, அது சொல்லிச்சி ஒரு வேலை முருகன் கருவ கலைக்கவேணாமுன்னு சொல்றாரோ என்னமோ...எனக்கென்னமோ அப்புடித்தான் தோணுதுன்னு சொல்லிச்சு
இவளுக்கோ நாலாவதும் பொம்பளைபுள்ளையானா நடுத்தெருவுக்கு வந்துருவமேன்னு பயம். சரி கோயில் வீட்டுல பூக்கட்டிப்பாப்போமுன்னு போட்டுப்பாத்தா கலைக்க வேணாமுன்னு வந்துச்சு. அடுத்த ஏழுமாசத்துல ஆம்பளைப்புள்ள இவன் பொறந்தான்
பணத்த திருடிட்டுப்போன அந்த பொம்பளைய மனசார வாழ்த்துனா இவ. அப்புடி முருகனே வந்து பெறச்சொன்ன மகன் இவன் அதான் இப்புடிப்பொறுப்பா இருக்கான். நல்ல வேளை அன்னிக்கி பணம் காணாமப்போகாம இருந்தா இவன் கருவிலே களைஞ்சிருப்பானேன்னு நெனச்சதும் கண்ணு கலங்கிடுச்சு அந்த அம்மாவுக்கு மீண்டும் அதே முருகனக்கும்புட்டா புருசனுக்காக.......கண்ணீரோட காப்பாத்தச்சொல்லி.
கவிச்சிகரம் அமுத்துவிஜயன்