நகர்வு - சிறுகதை
அவரோட பேரு என்னன்னு அவருக்கே மறந்துபோச்சு. அவருக்கு சொத்து ஒருகொட டப்பா ஒருசாக்குப்பை அவ்வளவுதேன் . யாருகிட்டயும் கையேந்த மாட்டாரு. யாராவது குடுத்தா வாங்கிச்சாப்புடுவாரு .மிச்சமிருந்தா காக்காக்கி இல்ல நாய்க்கி போட்டுருவாரு அந்த சாக்குத்தான் படுக்க
அந்தப் பொட்டில என்ன இருக்குன்னு ஆருக்கும் தெரியாது . ஊரு ஊராத்தான் திரிவாரு.ஆருகூடயும் பேசமாட்டாரு. ஆராவது கேட்டா சிரிப்பாரு சைகைல போ போன்னு சொல்லுவாரு
கால்போன போக்குலதான் போயிக்கிட்டே இருப்பாரு. செலநாள் சாப்பாடு கெடைக்கும் செலநாள் எதுவும் கெடைக்காது . தண்ணியக்குடிச்சிட்டு படுத்துருவாரு இன்னிக்கி இதுதான் கெதின்னு
அந்த ஊருக்கு நேத்துராத்திரிதான் வந்துருந்தாரு. வழக்கமாஎதாவது மடம் பஸ்ட்டாண்டுன்னு தங்குவாரு, செலநேரம் போலீஸ்காரவுக வெரட்டிவிடுவாக ,ஒண்ணுஞ்சொல்லாமப்போய்டுவாரு .
இங்கயும் பஸ்ட்டாண்டுலதான் ராத்திரிபடுத்திருந்தாரு,ஆரோ சாப்புடக்கொண்டாந்து சாப்புடாம இருந்த பொட்டலத்தக்குடுத்தாக ,வாங்கிச் சாப்புட்டுட்டு மீதிய நாய்க்குக் குடுத்தாருஅப்புறம் பஸ்டாண்டுல படுத்துட்டாரு
அன்னிக்கிக்காலையில எந்திரிச்சி தெருவுல கெளம்புனாரு அவரு பாட்டுக்கு
அப்ப ஒரு அம்மா பையில பொட்டலம் கொண்டாந்து குடுத்துக்கிட்டு இருந்துச்சுஅதைப்பிச்சக்காரவுக வாங்கிட்டுப் போயிட்டு இருந்தாக இவரு அந்தப்பக்கம் போனாரு. அப்ப இவரப்பாத்துக்கேட்டுச்சு இந்தாயா இட்லிப்பொட்டனம் வாங்கிக்கன்னு , இவரு வாங்கிக்கிட்டு
நடந்தாரு அந்தம்மா இவரைப் பாத்துக்கிட்டே இருந்துச்சு.
இவரு வழக்கம்போல அதை வாங்கிட்டு போயிப் பிரிச்சி ஒருவா எடுத்து வைச்சாரு அவரு கண்ணுல இருந்து பொலபொலன்னு தண்ணீர்கொட்ட அரம்பிச்சிடுச்சு,
அந்த ஊருல பெரிய கட அந்தக்கடைதான்அந்தக்கடை மொதலாளி காலையில அஞ்சுமணிக்கி எந்திரிச்சி குளிச்சிட்டுசாமியகும்புட்டுட்டு வந்து கடை தொறந்தாருன்னா ராத்திரி பத்து மணிக்கித்தான் மூடுவாரு. சாப்பாடு தண்ணி எல்லாம் அங்கயேதான் கடைக்கி வாரவுகல மரியாதையா அய்யா அம்மான்னு தான் கூப்புடுவாரு சின்னப்புள்ளைகன்னாலும் மரியாததான்
அய்யாவுக்கு என்ன வேணும்பாரு
ராப்பகலாக்கடையில கெடப்பாரு தொழில் அவருக்கு மூச்சுமாதிரி அதுனால கடையிலதானிருப்பாரு அதுனால தொழில் வளந்துச்சு. வியாபாரம் பெருகுச்சு. அப்ப வந்தவுக ஆலோசன சொன்னாக ஆரையாவ்து வேலைக்கி வைச்சிக் கிலாம்லன்னு. அப்ப சொல்லுவாரு ஆரையாவது வேலைக்கிவைச்சா அம்புட்டயும் அவன் சாப்புட்டுப் போய்டுவான் நம்மால முடியிறவரைக்கும் பாப்போம்பாரு.
அவரோட சம்சாரத்த ஆரும் பாத்ததில்ல ஏன்னா அவருஅவள எங்கயும் கூட்டிட்டுப்போனதுமில்ல. கடைக்கும் வராது. அதுனால ஆருக்கும் தெரிய வாய்ப்பில்லஅவருக்குப் புள்ளகுட்டீ எதுவுமில்லன்றது பேச்சு
இப்புடிப் போய்க்கிட்டு இருந்த அவரு பொழப்புல ஒருத்தன் வந்துசேந்தான்
அவன் பேரு சோமு அவனொரு ரெண்டுங் கெட்டான் . வெவரம் பத்தாது. சொன்னா சொல்ற வேலையச்செய்வான் அதுவும் சிலநேரம் ஏடாகூடமா . இவந்தான் நமக்குச்சரியான ஆளுன்னு இவரு முடிவுபண்ணுனாரு அவனகூட ஒத்தாசைக்கிவைச்சிக்க முடிவு பண்ணாரு, அவன்கிட்ட வீட்டுக்கு எதுனாச்சும் குடுத்தனுப்ப சாப்பாடு வாங்கியாற கடைக்கிவாரவுக நெறையாச்சாமான் வாங்குனா அவன்கிட்டக்குடுத்து
வீட்டுக்குத்தூக்கிக் கொண்டுபோய்க் குடுக்கன்னு வைச்சிக்கிட்டாரு.
வீட்டுல இருந்து வார சாப்பாடுல அவனுக்கும் குடுப்பாரு
ஆனா கடைக்கி உள்ள சேக்கமாட்டாருஅவனும் சொல்றதச்செய்வான். ஏதாவது கேட்டா இளிப்பான் அம்புட்டுத்தான்,அதுனால கடைக்கிவாரவுக அவனக் கிண்டல் பண்ணுவாக என்னடா சோமு மொதலாளி எப்ப ஒனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாருன்னு கேப்பாக
அப்ப கெக்க பிக்கன்னு சிரிப்பான் அது வாரவுகளுக்கு ஒருபொழுதுபோக்கு அரடவுசர் மட்டும்போட்டுருப்பான் சட்டையெல்லாம் கெடையாது. கொஞ்சநாள்ல அவனுக்கு மீச தாடி யெல்லாம் வளந்திருச்சு அதுனால மொதலாளி அவனுக்கு அவரோட பழைய சட்ட ஒண்ணக்குடுத்தாரு
சந்தோசமாப் போட்டுக்கிட்டான் பாக்குறவுகக்கிட்ட எல்லாம் சொல்லுவான் எனக்கு மொதலாளி சட்டகுடுத்தாருன்னு பெருமையா ,ஆளும் நல்லா வளந்துட்டான் அதுனால கிண்டலும் அதிகமாப்போச்சு வார பொம்பளைக ஏண்டா சோமு பொண்ணு தாரம் கட்டிக்கிடுறீயான்னு கேப்பாக அவன் வெக்கத்துல சிரிப்பான் அதுல அவுகளுக்கு ஒருசந்தோசம்
இப்ப மூணுவேளையும் மொதலாளிக்கி வீட்டுல இருந்து சூடா சாப்பாடு வந்துச்சு, சோமுதான் வாங்கியாருவான். செலநேரம் சாப்புடச்சொன்னா வேண்டாம் பசியில்லம்பான். மொதலாளி விட்டுருவாருஇப்புடிப்போய்கிட்டு இருந்துச்சு அப்ப அப்ப அவன்மேல பொம்பளைங்க புகார் சொன்னாக அவன் பார்வை சரியில்லன்னு
அப்ப மொதலாளி சொல்லுவாரு அவங்கெடக்கான் கிறுக்குப்பய ந்னு
அவுகளும் போய்டுவாக ஏன்னா அவன்னால தொந்தரவில்ல
திடீருன்னு ஒருநாள் மொதலாளி சந்தோசமா இருந்தாரு பாத்தவுககேட்டாக என்ன விசமுன்னு அப்ப அவருசொன்னாரு சம்சாரம் முழுகாம இருக்குறதா.
அதுனால வார சின்னப்புள்ளைகளுக்கு முட்டாயெல்லாம் குடுத்தாரு
அன்னிக்கிகாலையில வழக்கம்போல கடதொறந்தாரு. ஒம்போது மணிக்கி சோமு இட்லி கொண்டாந்தான். வீட்டுல இருந்துஅவரு கடைக்குள்ள வைச்சி பிரிச்சி சாப்புடுறதுக்கு முன்னாடி அவனக்கூப்புட்டாரு அதுக்கு அவன் இட்லி வேணாமுன்னான்.
இவருக்குத் துணுக்குன்னுச்சு . பார்சல்ல இட்லி இருக்குன்னு எப்புடித்தெரியும்ன்னு கேட்டதுக்குச்சொன்னான் நீங்க பிரிச்சவன்னே இட்லிவாசம் வந்திருச்சேன்னு. இவருக்கு ஆச்சரியம் அவ்வளவு வெவரம் அவனுக்கு தெரியுதான்னு
அன்னிக்கி 12மணிக்கி மத்தியானச் சாப்பாடு வாங்க வீட்டுக்குப்போயிட்டான்
அன்னிக்கிப்பாத்து ஆரோ அந்த ஊரு அரசியல் புள்ளிய பட்டப்பகல்ல நடுரோட்டுல வெட்டிப்புட்டாங்க அதுனால தெருவெல்லாம் ஒரே கலாட்டா. ஒருகும்பல் எல்லாக்கடையும் அடைக்கச் சொல்லிக் கலாட்டா பண்ணிக்கிட்டு வந்தானுக இவனுக விடமாட்டானுகன்னு மனசே இல்லாம கடையச்சாத்திட்டு வீட்டுக்குக் கெளம்பினாரு
அன்னிக்கி மூடுன கட ஒருவாரமாத் தெறக்கல. ஆருக்கும் புரியல ஏன் கடதொறக்கலன்னு. அரசப்புரசலா பாத்தவுக வீடு பூட்டிருந்துச்சுன்னு சொன்னாக இது ஒரு ரகசியமாவே இருந்துச்சு ஏன் கடதொறக்கல என்ன ஆச்சு சோமுவையும் காணோம் ஒண்ணுமே புரியல ஆளாலுக்கு கதை சொன்னாக
சோமுவ மொதலாளி கொன்னு பொதச்சிட்டு ஊரவீட்டு ஓடிட்டாரு செலபேரு செலபேரு மொதலாளிய கொன்னுபுட்டு சோமு அவரு பொண்டாட்டிகூட ஓடிட்டான்னு செலபேருஒருத்தருக்கும் ஒண்ணும் புரியல கடையும் தொறக்கல. திருட்டுப்பயலுக செலபேரு உள்ளாற புகுந்து அள்ளிடலாமுன்னு கடைக்குள்ள கொஞ்சநாளுக்குப்பின்னாடி போனவனுக சொல்லித்தான் தெரியும் கடைக்குள்ள எந்த சாமானுமில்லன்றது
கொஞ்சநாளு பேசி அலுத்துப்போயி எல்லாரும் மறந்துட்டாக எல்லாத்தையும்....
இப்ப இட்லியபிரிச்சவரு கண்ணுல தண்ணி கொட்டுச்சா அவரு அந்த அம்மாவத்தேடிப் போனாரு . அந்தத்தெருவுல ஒரு பலசரக்குக்கட இருந்துச்சு. அங்க போயி இவரு பாத்தாரு. கடைக்குள்ள அந்த அம்மா யாவாரம் பண்ணிக்கிட்டு இருந்துச்சு
கடையில ஒரு போட்டா மாட்டிருந்துச்சு அதுக்கு மாலையும் போட்டுருந்துச்சு
அப்ப கடைக்கி ஒருபொண்ணு பைக்கில வந்து சாப்பாடு குடுத்துச்சு அவரு பக்கத்துல இருந்தவுகள வெசாரிச்சப்பத்தெரிஞ்சது இந்த ஊருக்கு அந்தம்மா வயத்துல புள்ளையோட வந்ததும் அதுகூட அப்புராணியா ஒருத்தன் வண்டிநெறையா சாமானோட வந்ததும் அவளுக்குப்பொண்கொழந்த பொறந்ததும் அவந்தான் இப்பக்கடைய நடத்துறான்னும் தெரிஞ்சது
கொஞ்சநேரத்துல சைக்கிள்ள கடைக்கி ஒருத்தன் வந்தான் அவன் சோமு, முன்ன மாதிரி இல்ல இப்ப அவன் தெளிவாருந்தான் அவன் கடைக்கி சாமான் இறக்கிட்டு கடைக்குள்ள போனதும் அந்தம்மா வெளிய வந்துச்சு இப்பவும் அது புள்ளத்தாச்சியா இருந்துச்சு
அது போனதுக்கு அப்புறம் கடைக்குள்ள எட்டிப்பாத்தாரு அங்க இருந்த போட்டா அவரோடதுதான்... கண்ணுல கண்ணீர்வழிய கெளம்புனாரு.......
அப்ப அந்தப்பொண்ணு கூப்புட்டு அவருக்கு சாப்பாடு பொட்டலம் குடுத்துச்சு அங்க இருந்தவரு சொன்னாரு அவுக வீட்டுல இருந்து ஆரோ ஓடிப்போயிட்டாகலாம் அவரு நாவகமா தெனம் பிச்சக் காரவுகளுக்கு சாப்பாட்டுப் பொட்டலம் தெனம் குடுக்குது இந்தம்மா.
இது எப்புடியாவது அவருக்குபோயிசேருமுன்ற நம்பிக்கையிலன்னு. அதைக்கேட்டதும் அவரு கண்ணுல தண்ணி ஊத்துச்சு அதுல அந்தப்பொண்ணோட மொகம் மங்கலாச்சு
அதை காக்காக்கு போட்டுட்டு நடக்கத்தொடங்குனாரு கண்ணீரோட..
அ.முத்துவிஜயன்......