செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சு வலி?

senthil-balaji-again-admitted-in-government-hospital
அமைச்சர் செந்தில் பாலாஜி

சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. கைது செய்யப்பட்ட போது நெஞ்சு வலி என்று கூறவே, தனியார் மருத்துவமனையில் வைத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகிற 20ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகும். 
செந்தில் பாலாஜிக்கு இன்று மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. நெஞ்சு வலிப்பதாக அவர் கூறவே, உடனடியாக அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி பரிந்துரைத்துள்ளனர். அதைத் தொடர்ந்த அவர் அங்கு கொண்டு செல்லப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் நலம் சரியாகிவிட்டால் நாளையே அவர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது. அவரது உடல் நல பாதிப்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.