ஹேக்கரின் கைவரிசை: யூடியூபில் கற்றுக் கொண்ட ஹேக்கிங்
இந்தியத் திரைப்படத் துறையை உலுக்கிய அதிர்ச்சிகரமான பைரஸி (Piracy) நெட்வொர்க் குறித்து ஹைதராபாத் காவல்துறை முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது. பாட்னாவைச் சேர்ந்த 21 வயதே ஆன ஒரு இளைஞன், ஆடம்பரமான டூப்ளக்ஸ் வீட்டில் இருந்தபடி, யூடியூப் வீடியோக்களை மட்டும் பார்த்து கற்றுக்கொண்டு, பல முன்னணிப் படங்களை முதல் நாளிலேயே HD தரத்தில் திருட்டுத்தனமாக இணையத்தில் கசியவிட்டது தெரியவந்துள்ளது.
பீகாரைச் சேர்ந்த இந்த இளைஞன், அஸ்வனி குமார், திரைப்படங்களைச் சட்டவிரோதமாக ஆன்லைனில் பதிவேற்றி கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். ஹைதராபாத் சைபர் கிரைம் பிரிவு நடத்திய சோதனையில், பாட்னாவில் உள்ள அவரது டூப்ளக்ஸ் வீட்டில் இருந்து கணினிகள், சர்வ்கள் மற்றும் பிற ஹேக்கிங் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விசாரணையில் தெரியவந்த பரபரப்பான உண்மைகள்:
பயிற்சி மூலம்: அஸ்வனி குமார், யூடியூப் வீடியோக்களைப் பார்த்து ஜாவா மற்றும் பைதான் மொழிகளைக் கற்றுக்கொண்டுள்ளார். அதைக்கொண்டு மால்வேர் இன்ஜெக்ஷன் (Malware Injection) மற்றும் பல்வேறு ஸ்கிரிப்ட் ஹேக்கிங் உத்திகளைச் செயல்படுத்தி உள்ளார்.
சாதனைப் படங்கள்: புஷ்பா 2, கேம் சேஞ்சர், குட் பேட் அக்லி மற்றும் பல்வேறு இந்திப் படங்கள் உள்ளிட்ட பல பெரிய படங்களை முதல் நாளிலேயே HD தரத்தில் இணையத்தில் கசிய விட்டதற்கு இவரே முக்கியக் காரணம்.
நிறுவனங்களின் சர்வர்களை ஊடுருவிய நிபுணன்!
2024 ஆம் ஆண்டில், இவன் இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு விநியோக (Distribution) நெட்வொர்க் நிறுவனங்களின் சர்வர்களை ஹேக் செய்ததாகக் கூறப்படுகிறது. முதலில் இந்த நிறுவனங்கள் ஹேக்கின் தகவலை மறுத்தன. ஆனால், அஸ்வனி குமாரைக் கைது செய்த பிறகுதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் முன்னிலையில், அந்த நிறுவனங்களின் நெட்வொர்க் கட்டமைப்பு (Structure) மற்றும் புரோட்டோகால் வழிமுறைகள் அனைத்தையும் அஸ்வனி குமார் படம் போட்டு விளக்கியபோது, உறைந்துபோன அந்த நிறுவனங்கள் தங்கள் சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோடிக்கணக்கில் வருமானம்: ஏல முறையில் விற்பனை
சம்பாதித்த தொகை: அஸ்வனி குமார் மொத்தம் 135 படங்களை லீக் செய்துள்ளார். ஒரு படத்துக்குச் சராசரியாக $800 என்ற கணக்கில், கோடிகளில் பணம் ஈட்டியுள்ளார்.
டெலிகிராம் நெட்வொர்க்: டெலிகிராம் போன்ற தளங்களில் ஒரு படத்துக்கு $135 வரை கட்டணம் வசூலித்து, இந்தத் திருட்டு நெட்வொர்க் இந்தியா முழுவதும் பல பயனர்களுக்குப் புதிய படங்களை குறைந்த விலையில் விற்றுள்ளது.
ஹேக்கர்களைப் பிடிக்கப் போலீஸின் தந்திரம்
பைரஸி நெட்வொர்க்குகளின் முக்கிய அட்மின்களில் ஒருவரான தமிழ்ப்பிளாஸ்டர்ஸ் அட்மின் சிறில் ராஜ் என்பவனும் பிடிபட்டான். இவன் மட்டும் மொத்தமாக 5 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளான் என்றும், மாதத்திற்குச் சுமார் 9 லட்சம் ரூபாயை கிரிப்டோகரன்சியாக (Cryptocurrency) பெற்று வந்துள்ளான் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த ஹேக்கர்கள் எப்படிச் சிக்கினார்கள் என்ற சஸ்பென்ஸ் இங்கேதான் உள்ளது. ஹைதராபாத் காவல்துறை அதிகாரிகள், திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்களைப் போலவே டீல் பேசி, கிரிப்டோகரன்சியில் பணம் அனுப்பி, இந்த மோசடி நெட்வொர்க்கில் உள்ளவர்களைப் பிடித்துள்ளனர்.
திரையுலகினருக்கு அதிர்ச்சி வைத்தியம்
இந்தக் கைதுகளுக்குப் பிறகு, சிரஞ்சீவி, நாணி, நாகார்ஜூனா உள்ளிட்ட தெலுங்குத் திரையுலகின் அனைத்துப் பெரிய நடிகர்களையும் கூப்பிட்டு, இந்த ஹேக்கர்கள் எப்படித் திருடினார்கள் என்பதைப் படம்போட்டு காவல்துறையினர் விளக்கிக் காட்டியுள்ளனர். அதைக் கேட்டு சினிமா வட்டாரத்தினர் அனைவரும் பேரதிர்ச்சிக்குள்ளாகினர். இதன் விளைவாக, திரைப்படத் தயாரிப்பு வட்டாரத்தில் உடனடியாக பேக்கப் (Backup) மற்றும் டேட்டா சேமிப்பு (Data Storage) குறித்த பாதுகாப்பு விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.