பெண் ஆட்சியர் புகார்.. தவெக எம்.எல்.ஏ. வழக்கில் டிசம்பர் 22-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

tvk-mla-arul-vignesh-kallakuruchi-collector
பெண் ஆட்சியர் புகார்.. தவெக எம்.எல்.ஏ. வழக்கில் டிசம்பர் 22-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆ*** குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது 5 சட்டப் பிரிவுகளின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் ஆர். திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், விசாரணை அதிகாரியாகத் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங் ஐ.பி.எஸ். அவர்களை நியமித்து உத்தரவிட்டார்.

மேலும், காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐ.ஜி. என். காமினி மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும், அதன் இறுதி அறிக்கையை டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுக்கும் சட்டத்தின் அடிப்படையில், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி காகர்லா உஷா தலைமையில் நான்கு பேர் கொண்ட உள்ளகப் புகார்கள் குழுவையும் தமிழக அரசு அமைத்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணையைத் தொடங்கிய எஸ்.பி. ஸ்ருஷ்டி சிங், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளார். தொடர்ந்து, புகார் அளித்த மாவட்ட ஆட்சியரின் இல்லத்திற்குச் சென்று சுமார் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்ததுடன், சம்பந்தப்பட்ட பிற அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. எம்.எல்.ஏ. தரப்பில் வழக்கறிஞர் மூலம் வாதங்களை முன்வைப்பதற்காக மட்டுமே காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளதாகவும், நேரில் ஆஜராகக் கோரி இதுவரை சம்மன் அனுப்பப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கள்ளக்குறிச்சியில் உள்ள எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் வீட்டின் முன்பு 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.