1600 கோடிக்கு கைமாறிய அடையாறு ஆனந்த பவன் பங்கு!

adyar-anandhabavan-stock-market
1600 கோடிக்கு கைமாறிய அடையாறு ஆனந்த பவன் பங்கு!

தமிழகத்தில் ரெஸ்டாரண்ட் துறையில் முக்கிய அடையாளமாகவும், தென்னிந்தியாவின் மிகப்பிரபலமான சைவ உணவகம் மற்றும் இனிப்பு வகை விற்பனை நிறுவனமாகவும் திகழும் அடையாறு ஆனந்த பவன் (A2B), தனது நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை 'போதி ட்ரீ சிஸ்டம்ஸ்' என்ற முதலீட்டு நிறுவனத்திற்கு விற்றுள்ளது.

சுமார் 180 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,600 கோடிக்கும் அதிகமான தொகைக்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

யார் இந்த போதி ட்ரீ சிஸ்டம்ஸ்?

உலகப் புகழ்பெற்ற ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக்கின் இளைய மகன் ஜேம்ஸ் முர்டோக் மற்றும் இந்திய ஊடகத் துறையின் முன்னோடியும், ஜியோஸ்டார் நிறுவனத்தின் துணைத் தலைவருமான உதய் சங்கர் ஆகியோர் இணைந்து தொடங்கிய முதலீட்டு நிறுவனம்தான் போதி ட்ரீ சிஸ்டம்ஸ். ஏற்கனவே 'ஆலன் கரியர் இன்ஸ்டிடியூட்' மற்றும் 'ஜியோஸ்டார்' ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள போதி ட்ரீ குழுமம், மூன்றாவதாக உணவுத் துறையில் கால்பதித்து ஏ2பி நிறுவனத்தைத் தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏ2பி நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் 350 மில்லியன் டாலராக (ரூ.3,100 கோடி) மதிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி, ஏ2பி நிறுவனத்தின் புதிய இயக்குநர்கள் குழுவின் தலைவராக உதய் சங்கர் பொறுப்பேற்கவுள்ளார்.

விரிவாக்கத் திட்டங்கள் என்ன?

இந்த மிகப்பெரிய முதலீடு குறித்து ஏ2பி நிறுவனத்தின் உரிமையாளர் குடும்பத்தைச் சேர்ந்த விஷ்ணு சங்கர் கூறுகையில், "இந்த முதலீட்டுத் தொகை நிறுவனத்தை இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் புதிய சந்தைகளுக்கு விரிவுபடுத்தப் பயன்படுத்தப்படும். குறிப்பாக மேற்கு இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிய கிளைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும், சில்லறை விற்பனையை அதிகரிக்கச் சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள எங்கள் தொழிற்சாலைகளை நவீனமயமாக்க உள்ளோம். ஏற்றுமதி மற்றும் சில்லறை விற்பனைக்காக மற்றுமொரு புதிய தொழிற்சாலையை அமைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்" என்றார்.

நிறுவனத்தின் இணை நிறுவனர் கே.டி. ஸ்ரீனிவாச ராஜா கூறுகையில், "50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய இனிப்புக் கடையாகத் தொடங்கிய பயணம், இன்று லட்சக்கணக்கான குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிவிட்டது. போதி ட்ரீ உடனான இந்தக் கூட்டணி, எதிர்காலத்தில் ஏ2பி நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் பட்டியலிடும் அளவிற்கு உயர்த்தும்" என நம்பிக்கை தெரிவித்தார்.

ராஜபாளையம் டூ உலகச் சந்தை: ஏ2பி கடந்து வந்த பாதை

1960-களில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கே.எஸ். திருப்பதி ராஜா என்பவரால் சிறிய இனிப்புக் கடையாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 1979-80 காலகட்டத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையில் 'ஸ்ரீ ஆனந்த பவன்' என்ற பெயரில் காலடி எடுத்து வைத்தது. பின்னர் 1988-ல் சென்னை அடையாறில் கிளை தொடங்கிய பிறகு 'அடையாறு ஆனந்த பவன்' எனப் பெயர் மாற்றம் பெற்று, 2000வது ஆண்டிற்குப் பிறகு உணவகத் துறையிலும் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது.

தற்போது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏ2பி நிறுவனத்திற்கு இந்தியாவில் 160 கிளைகளும், அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் 30-க்கும் மேற்பட்ட கிளைகளும் உள்ளன. சுமார் 15,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

தென்னிந்திய உணவுப் பாரம்பரியத்தை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த ரூ.1,600 கோடி ஒப்பந்தம், இந்திய உணவகத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.