திமுகவுக்கு ஏழரை சனி ஒழிந்தது - கடுமையாக விமர்சித்த ஆர்எஸ் பாரதி
தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல் ஆகியவற்றில் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுக தோல்வியடைந்து, கூட்டணியும் உடைந்துவிட்டது. கூட்டணியில் இருந்த பழைய கட்சிகளுடன் திமுக வாக்குவாதம் செய்து வருகிறது. இந்நிலையில் கூட்டணி கட்சியினரை ஏழரை சனி என குறிப்பிட்டு ஆர் எஸ் பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அந்த கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசுகையில், "எக்ஸ்ட்ரா லக்கேஜ் எல்லாம் நம்முடன் இருந்தது. கூட்டணி பேசும் குழுவில் நான் இருப்பேன். முழுமையாக நான் உட்கார மாட்டேன். சில பேர் பேசுவதை பார்த்தாலே கோபம் வரும். தோளில் உள்ள கருப்பு துண்டை தவிர வேறு எதுவுமே அவர்களுக்கு துணையில்லை. நான் எப்போதுமே பெரிய தலைவர், சின்ன தலைவரிடம் மனதில் உள்ளதை சொல்லி வெளியில் வந்துவிடுவேன்.
காங்கிரசுடன் கூட்டணியே வேண்டாம் என கூறினேன். பெரிதாக பில்டப் செய்து காங்கிரஸ் கட்சி நம் கூட்டணியில் 28 சீட்டுகள் வாங்கினார்கள். யார் பெயரையும் நாம் குறிப்பிட வேண்டியதில்லை. எந்த கட்சியும் வேண்டாம். இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தெரிந்திருக்கும், எவன் தயவும் இல்லாமல் திமுக தொண்டன் தன்னந்தனியாக நின்று 30 சதவீதம் ஓட்டு வாங்கியுள்ளோம். இத்தனை நாட்கள் அவர்களை நாம் சுமந்து கொண்டுள்ளோம்.
சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு கொடுத்த 50 சீட்களில், 30 தொகுதிகளில் நாம் நின்றிருந்தால் 20 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருப்போம். இந்நேரம் 104 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம். தவெக 74 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கும். நாம் ஆட்சியை பிடித்திருப்போம். ஏழரை நாட்டு சனி எல்லாம் ஒழிந்த பிறகு இப்போது நமக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளது. அதிலும் நாம் சிறப்பாக பணியாற்ற வேண்டும். இனி நமக்கு நல்ல நாள் தான்.
கூட்டணியில் ஒரே ஒரு ஆள் வென்றாலும் பதவி கேட்பார்கள். கும்பகோணத்தில் காங்கிரஸில் ஒரே ஒருவர் வென்றார். பேச்சு துணைக்கு கூட ஆள் இருக்காது. அந்த கவுன்சிலரை மேயராக்கினோம். எல்லா ஊரிலும் அந்த இழவுகளை துணை மேயராக்கினோம். பேச்சுவார்த்தையின்போதே இது சரி வராது, ஒன்று ஒப்புக்கோ.. இல்லை ஓடிப்போ என நான் நேரடியாக சொன்னேன். அப்போதே ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
திமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20க்கு வாங்கப்பட்டது. தவெக ஆட்சிக்கு வந்தவுடன் டெண்டரை ரத்து செய்து தற்போது ரூ.35க்கு வாங்குவது ஏன். விஜய் தணிக்கைக் குழுவிற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். மின்சார வாரிய ஊழல்களை மக்களிடம் கொண்டு செல்வோம். பாமாயில் கொள்முதலில் ரூ.600 கோடி ஊழல் நடந்துள்ளது. பருப்பு முதல் பாமாயில் வரை அனைத்திலும் ஊழல் நடந்து வருகிறது. இதனை திமுக சும்மா விடாது" என்றார்.