பாமாயில் கொள்முதலில் ரூ 600 கோடி ஊழல்? உதயநிதி குற்றச்சாட்டு

ration-shop-palm-oil-dmk-udhayanidhi
பாமாயில் கொள்முதலில் ரூ 600 கோடி ஊழல்? உதயநிதி குற்றச்சாட்டு

துவரம் பருப்பு கொள்முதல் விலை குறைய இந்த சர்க்கஸ் சர்க்கார் இல்லை, திமுகதான் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பாமாயில் கொள்முதலில் ரூ 600 கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும்,

இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல - கழக அரசுதான் என்பதே நிதர்சனமான உண்மை. 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது கழக அரசு.

இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று திமு கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், கழக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.

ஆனால், இந்த Circus ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.

கழக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.

Abusive Warriors தான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்?
அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பை முந்தைய காலங்களை காட்டிலும் குறைந்த விலையில் கொள்முதல் செய்ததன் மூலம் தவெக அரசு ரூ 187 கோடியை மிச்சப்படுத்தியுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 3 மாதங்களில் துவரம் பருப்பை குறைந்த விலையில் கொள்முதல் செய்ததன் மூலம் ரூ.187 கோடி அளவுக்கு செலவினம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.109.15-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

ஆனால், தவெக ஆட்சியில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.89-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முந்தைய கொள்முதல் விலையைவிட ஒரு கிலோவுக்கு ரூ.31 குறைவாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதனால், கடந்த 3 மாதங்களில் துவரம் பருப்பு கொள்முதலுக்கான செலவில் ரூ.187 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் துவரம் பருப்பு கொள்முதலுக்காக திமுக ஆட்சியில் ரூ.654 கோடி செலவிடப்பட்டது. ஆனால், தவெக ஆட்சியில் ரூ.467 கோடி மட்டுமே செலவிடப்பட்டு, ரூ.187 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. See less