ரீல்ஸ் போட்ட யூடியூபருக்கு நடந்த சோகம்..!

uttarpradesh-youtuber-channel-blocked
ரீல்ஸ் போட்ட யூடியூபருக்கு நடந்த சோகம்..!

UP மாநிலத்தைச் சேர்ந்த நிதீஷ் குமார் என்பவர், தனது யூடியூப் சேனல் மூலம் மாதம் ₹2 லட்சத்திற்கும் மேல் சம்பாதிப்பதாகச் சோஷியல் மீடியாவில் வீராப்பாக வீடியோ போட்ட 48 மணி நேரத்திற்குள், அவரது சேனலின் வருமானம் மொத்தமாக நின்ற சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதீஷ் குமார் 'நியூ பார்ன் வேர்ல்ட் டிவி' என்ற பெயரில் 91,000 சப்ஸ்கிரைபர்களுடன் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அமெரிக்காவில் அதிகம் பார்க்கப்பட்ட இந்தச் சேனல் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் அவர் $2,394 (சுமார் ₹2.29 லட்சம்) சம்பாதித்துள்ளார். இந்தத் தொகையை வங்கியில் இருந்து எடுப்பது குறித்து செப்டம்பர் 23 அன்று அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலானது.

ஆனால், தனது வருமானத்தைப் பெருமையா வெளியிட்ட வெறும் இரண்டே நாட்களில், அதாவது செப்டம்பர் 25 அன்று அவரது யூடியூப் சேனல் மானிடைசேஷன் நிறுத்தப்பட்டு வருமானம் பூஜ்ஜியமாக மாறியது. இதனால் அதிர்ச்சியடைந்த நிதீஷ், ஆதாரங்களுடன் மற்றொரு வீடியோவை வெளியிட்டுத் தனது சேனல் முடக்கப்பட்டதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.

தனது சேனலில் பச்சிளம் குழந்தைகள் தொடர்பான வீடியோக்களைப் பதிவேற்றி வந்ததாகவும், அதில் சில வீடியோக்கள் யூடியூபின் சமூக வழிகாட்டுதல்களை மீறி 'தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம்' என்ற பிரிவின் கீழ் வந்ததால் வருமானம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோக்களைத் திருத்தினால் மட்டுமே மீண்டும் வருமானம் பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். "முதல்ல அந்த ஆபத்தான வீடியோக்களை எல்லாம் டெலீட் பண்ணுங்க, அப்பதான் சேனல் திரும்ப ஓட ஆரம்பிக்கும்" என்று சிலர் அறிவுரை வழங்கி வர, இன்னும் சிலரோ "தேவையில்லாம சோஷியல் மீடியாவில் வருமானத்தைக் காட்டி பெருமை அடிச்சதாலதான் இப்படி ஆச்சு" என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்