ஹாஸ்டல் உணவில் புழு.. விஜய்யிடம் புகார்களை கூறிய மாணவர்கள்!

hostel-food-issue-complaint-tamilnadu-cm-vijay
ஹாஸ்டல் உணவில் புழு.. விஜய்யிடம் புகார்களை கூறிய மாணவர்கள்!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சமூகநீதி மாணவர் விடுதியில் முதல்வர் விஜய் திடீரென ஆய்வு மேற்கொண்டிருந்தார். இந்த ஆய்வின் போது மாணவர்கள் சரமாரியான புகார்களை அடுக்கியிருக்கின்றனர்.

புதியதாக அமைந்திருக்கும் தவெக அரசு, எந்த விமர்சனங்களுக்கும் இடம் கொடுக்காமல் சிறப்பாக செயல்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் இயங்கி வருகிறது. எனவே துறை சார்ந்து பல்வேறு இடங்களில் முதலமைச்சரே நேரடியாக ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று எம்.சி.ராஜா விடுதியில், கொட்டும் மழையிலும் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டிருந்தார். இந்த ஆய்வில், மாணவர்கள் பல்வேறு குறைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

குறிப்பாக உணவின் தரம் சரியில்லை என மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். கடந்த காலங்களில் உணவில் புழு, வண்டு இருந்ததாகவும், அதிகாரிகள் ஆய்வுக்கு வந்த போது இது குறித்து புகார் அளித்திருந்தோம் என்றும் மாணவர்கள் கூறுகின்றனர். புகார் அளித்த பின்னர் அடுத்த சில நாட்களுக்கு மட்டும் உணவு தரமாக விநியோகிக்கப்படுவதாகவும், பின்னர் வழக்கம் போல உணவின் தரம் மோசமானதாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

இது மட்டுமின்றி போட்டி தேர்வுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் தாமதமாக வந்தால் உள்ளே அனுமதிப்பதில்லை. போட்டி தேர்வுக்கு தனியார் கோச்சிங் சென்டரில்தான் படிக்க வேண்டும். கோச்சிங் கிளாஸ் முடிந்து இரவு ஹாஸ்டல் வர தாமதமானால், மாணவர்களை உள்ளே அனுமதிக்காமல் காவலர்கள் தடுக்கின்றனர். இதனால் சில மாணவர்கள் வேறு வழியின்றி பூங்காக்களில் படுத்து உறங்குவதாகவும், இது போன்ற நேரங்களில் சமூக விரோதிகளின் தொல்லைகளுக்கு ஆளாவதாகவும் புகார் அளித்துள்ளனர்.

மேலும் மாணவர்களிடம் ஹாஸ்டல் கண்காணிப்பாளர்களும், வாட்ச்மேன்களும் இழிவாக பேசுவதாகவும், மரியாதை குறைவாக நடத்துவதால் பல மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறிவிடலாம் என்கிற சூழலுக்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறியிருக்கின்றனர்.

கையை கட்டி மாணவர்களின் கோரிக்கைளையும், புகார்களையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட முதல்வர் விஜய், இங்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறது என்றும், இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.