மருத்துவரை 280,000 டாலர் திரட்டி காப்பாற்றிய நோயாளிகள்!
அமெரிக்காவின் பால்டிமோர் நகரைச் சேர்ந்த மருத்துவர் மைக்கேல் சோலிகோஃபர் , மக்கள் மத்தியில் டாக்டர் இஸட் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, போதிய மருத்துவ வசதி கிடைக்காத ஏழை எளிய மக்களுக்கு, "உங்களால் பணம் செலுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை, நான் உங்களுக்கு நிச்சயம் சிகிச்சை அளிப்பேன்" என்ற எளிய வாக்குறுதியுடன் சேவை செய்து வந்தார். பணமில்லை என்ற காரணத்திற்காக அவர் யாரையும் திருப்பி அனுப்பியதே இல்லை.
இத்தகைய உன்னத மனிதருக்கு சிறுநீரகம் மற்றும் மலக்குடல் என இரு வேறு இடங்களில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அதே நேரத்தில் மெடிகேர் காப்பீட்டு ஆவணங்களில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் குளறுபடிகளால், அவரது புற்றுநோய் சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகை பல தசாப்தங்களாகத் தங்களுக்கு சத்தமில்லாமல் சேவை செய்த ஒரு மாமனிதரை அந்த மக்கள் தனியாக விட்டுவிட விரும்பவில்லை.
அவரது நண்பர் ஒருவர் உதவி கோரும் பக்கத்தில் ஒரு நிதியுதவிப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதில் 3,400-க்கும் மேற்பட்ட நோயாளிகளும் பொதுமக்களும் இணைந்து, தங்களால் இயன்ற பணத்தை வழங்கி, குறுகிய காலத்தில் 280,000 டொலருக்கும் அதிகமாக நிதி திரட்டி அவருக்குக் கொடுத்தனர்.
இவரது இந்த நெகிழ்ச்சியான கதை அமெரிக்க நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. மேரிலாண்ட் நாடாளுமன்ற உறுப்பினர் Kweisi Mfume, டாக்டர் இஸட்டின் சேவையைப் பாராட்டி நாடாளுமன்றப் பதிவேட்டில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்தார்.
இதுகுறித்து பின்னர் நெகிழ்ச்சியுடன் பேசிய டாக்டர் இஸட், "இந்தச் சோதனையான காலகட்டத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். ஏனெனில், இது மனித நேயத்தின் உண்மையான ஆற்றலை எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது" என்றார்.
நாம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது, இந்த உலகம் ஏதோ ஒரு வழியில் அதனை நமக்கே திருப்பித் தரும் என்பதற்கு இந்த மருத்துவரின் கதையே மிகச் சிறந்த உதாரணம்!