Breaking News :

Monday, May 20
.

திருக்குறள் கதைகள் - குறள் 12


கட்டிட வேலையை முடித்து விட்டு வேலாயி வீட்டுக்கு வரும்போது இருட்டி விட்டது. வீடு என்றால் வாசல், ஜன்னல், அறைகள் போன்ற அமைப்புகளைக் கொண்ட கட்டிடம் என்று நினைத்து விடாதீர்கள். பல வீடுகளின் கட்டிடப் பணிகளில் பணியாற்றியுள்ள வேலாயிக்கு வீடு என்பது நடைபாதையில் ஒரு சிறிய இடம்தான்.

 

சில சமயம் பாதி கட்டப்பட்ட வீட்டில் காவல் காக்கும் பொறுப்பு அவள் குடும்பத்துக்குக் கிடைக்கும். அப்போது மட்டும் வீட்டின்  வெளிச் சுவருக்கு அருகே ஆஸ்பெஸ்டாஸ் கூரையாலும் மரத் தடுப்புகளாலும் ஆன ஒரு வீடு அவர்களுக்குக் கிடைக்கும். அவள் குழந்தைகளுக்கும் மழையிலிருந்தும் குளிரிலிருந்தும் பாதுகாப்புக் கிடைக்கும். குழாய்த் தண்ணீர், கழிப்பறைகள் போன்ற 'ஆடம்பரங்களையும்' அனுபவிக்கலாம்.

 

அவளது தற்போதைய வீடு நடைபாதையில்தான் இருந்தது. வேறு சில கூலித் தொழிலாளர்களும் பக்கத்திலேயே குடி இருந்தனர்.

 

வேலாயின் கணவன் வடிவேலுவும் கட்டடத் தொழிலாளிதான். ஆனால் அவனுக்கு தினமும் வேலை செய்த அலுப்பு நீங்க 'சக்தி பானம்' அருந்த வேண்டும். 'ஆண்களுக்கு மட்டும்தான் உடல் அலுப்பு வருமா?' என்று வேலாயிக்குத் தோன்றும். ஆனால் அவள் அப்படிக் கேட்டதில்லை. கேட்டு விட்டு, அடி வாங்கிக்கொண்டு உடல் அலுப்பை மேலும் அதிகமாக்கிக் கொள்ள அவள் தயாராயில்லை!

 

அவளைப் போன்ற பெண்கள் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து, நீர், விறகு போன்ற சாதனங்களைச் சேகரித்து, சமையல் செய்து அனைவருக்கும் பரிமாறி, மீதம் இருப்பதை உண்டு விட்டுப் பாத்திரங்களை சிறிதளவு நீரில் திறமையாகக் கழுவி வைத்து விட்டுத் தூங்க வேண்டும். உடல் அலுப்பு என்ற ஒன்றைப் பற்றி அவளைப் போன்ற பெண்கள் எப்படிப் பேச முடியும்?

 

அவள் கணவனின் தினக்கூலி அவன் உடல் அலுப்பைப் போக்கிகொள்ளவே சரியாகி விடும் என்பதால் அவளுடைய கூலியில்தான் குடும்பம் நடக்க வேண்டும்.

 

வேலாயி வீட்டுக்கு வந்தபோது அவளுடைய நான்கு குழந்தைகளில் மூன்று பேர் விளையாடிக்கொண்டிருந்தனர். கடைசிக் குழந்தை கைக்குழந்தை. எப்போதும் அவளிடம்தான் இருக்கும்.

 

காலையில் குடித்த கஞ்சிக்குப் பிறகு வேறு எதையும் உண்ணாத நிலையிலும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்ததும் ஒரு புறம் அவளுக்கு நிம்மதியாக இருந்தாலும் மறுபுறம் ஓவென்று அழலாம் போல் தோன்றியது.

 

'வீட்டில்' மளிகைச் சாமான்களின் இருப்பைப் பார்த்தபோது வேலாயிக்கு அழுகை வந்து விட்டது. 'இந்த அரிசி எல்லோருக்கும் போதாதே!' நடைபாதைவாசி என்பதால் அவர்கள் குடும்பத்துக்கு ரேஷன் கார்டு கிடையாது. ரேஷன் கடையில் திருட்டு அரிசி நாளைக்குத்தான் வாங்க முடியும்.

 

'என்ன செய்வது? இருப்பதை வைத்துச் சமாளிக்க வேண்டியதுதான்.'

 

காலையில் குழாயடியில் வரிசையில் நின்று பிடித்து வைத்திருந்த ஒரு குடம் நீரில் பசி தீர்த்துக் கொள்வதற்காக அவள் குழந்தைகள் குடித்தது போகப் பாதிக் குடத்துக்கு மேல் மீதி இருந்தது. 'நல்ல வேளை தண்ணீராவது இருக்கிறதே. தண்ணீர்தான் கடவுள்!'

 

சோறு வடித்துக் குழந்தைகளுக்குப் பரிமாறுமுன் சிறிது மோரையும் நிறைய நீரையும் கலந்தாள்.

 

குழந்தைகள் தங்கள் அலுமினியத் தட்டில் பரிமாறப்பட்ட சோற்றைக் கையால் எடுத்துச் சாப்பிட முடியாமல் அப்படியே உறிஞ்சிக் குடித்தனர். சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விட்ட உற்சாகத்தில் மறுபடியும் விளையாடப் போய் விட்டனர். தண்ணீரின் துணையால் இப்போது வயிறு நிரம்பி விட்டது. இரவில் பசி எடுக்கும். அப்போது எழுந்து தண்ணீர் குடித்து விட்டுப் படுத்துக் கொண்டு விடுவார்கள்.

 

கலயத்தில் சோறு கொஞ்சம்தான் மீதி இருந்தது. குடித்து விட்டுத் தாமதமாக வரும் கணவனுக்குக் கண்டிப்பாகச் சோறு வேண்டும். எனவே இருந்த சோற்றைக் கணவனுக்கு வைத்து விட்டு வேலாயி தண்ணீரைக் குடித்துப் பசியைத் தற்காலிகமாகப் போக்கிக் கொண்டாள்.

 

கைக்குழந்தைக்கு மட்டும் பால் கொடுக்க வேண்டும். பால் வைத்திருந்த பாத்திரத்தைப் பார்த்தாள். பாலும் குறைவாகத்தான் இருந்தது. கொஞ்சம் நீரை ஊற்றினால்தான் ஒரு பாட்டில் வரும். பாலில் சிறிது. நீரை ஊற்றிச் சுட வைத்தாள். நல்லவேளை. வீட்டில் கொஞ்சம் சர்க்கரை இருந்தது. சர்க்கரையைக் கொஞ்சம் கூடுதலாகப் போட்டால் நீர்த்த பால் கூட ருசிக்கும் குழந்தைக்கு!

 

குழந்தையை மடியில் படுக்க வைத்து, பாட்டிலில் இருந்த பாலைக் கொடுத்தாள். மிதமான சூட்டுடனும், மிகையான நீருடனும் இருந்த பாலைக் குழந்தை ரசித்து அருந்தியது. பாட்டில் காலியானதும் திருப்தியாகக் கொஞ்சம் பாலை வாயிலிருந்து வழிய விட்டுத் தாயைப் பார்த்துச் சிரித்தது. அந்தச் சிரிப்பில் வேலாயி தன் அத்தனை வருத்தங்களையும் மறந்தாள்.

 

குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.

 

பொருள்:

உண்பவர்களுக்கு உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு, அவர்களுக்குத் தானே உணவாகவும் ஆகிறது மழை.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.