வீட்ல வேலையெல்லாம் முடிச்ச பின்னாடி சும்மா இருக்க நேரத்துல எதுனா செய்யலாம்னு நினைக்கும் போது பல பெண்கள் கையில் எடுத்த விசயம் தான் பூ வியாபாரமும், பூ செய்யுறவங்களுக்கு பூ கட்டி கொடுக்குறதும், நாங்க பள்ளிக்கூடம் படிக்கும் போது இரண்டு குடும்பம் தான் பூ வியாபரம் செய்யுற குடும்பம் அதுல ஒரு குடும்பத்துக்கு மட்டும் நூத்துக்கணக்கான குடும்பங்கள் பூ கட்டி கொடுப்பாங்க கா படி முல்லை கட்டி பந்து போல சுத்தி குடுக்கனும் அப்போ MMM னு சீல் போட்ட ஒரு சிகரெட் அட்டைய குடுப்பாங்க.
அந்த அட்டையோட மதிப்பு 25 பைசா, ஒரு நாளைக்கு இருபது பந்து கட்டிக் குடுக்குற பெண்கள் உண்டு, சிலர் பத்து பதினைந்து பந்துகளை கட்டுவார்கள், காக்கட்டான் பூ மட்டும் பாக்கெட்டில் வரும் கால் கிலோ இருக்கும் அத கட்டி பெரிய பந்தா சுத்தி குடுத்தா 50 பைசா அட்டை குடுப்பாங்க.
நாளொன்றுக்கு மூன்றிலிருந்து ஆறு ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் இது எனது பள்ளிப்பருவம் இருபது ஆண்டுகளுக்கு முந்தைய நிலை.
இந்த பூக்கட்டும் தொழிலுக்கு ஒரு முன்னேற்பாடு செய்ய வேண்டும், காய்ந்த வாழை மட்டைகளை மொத்தமா வீடுகளுக்கு கொடுத்துவிடுவார்கள், மாலை நேரத்தில் அக்கம் பக்கம் வீட்டு பெண்களோடு உட்கார்ந்து கொண்டு சேப்டி பின்னை வைத்து அந்த பட்டையை நாராக்கி அந்த நாரை வகுந்து தனித்தனி நூலிழை போல எடுக்க வேண்டும் பின்னர், அதை தண்ணீரில் முக்கி ஒவ்வொரு வாழை நார் கீற்றையும் முடிச்சி போட வேண்டும் அது ஒரு கலை, இரண்டு நுனியையும் இணைத்து இடது கை ஆல் காட்டி மற்றும் கட்டை விரலில் பிடித்துக் கொண்டு இரண்டு விரலையும் சேர்த்து கட்டுவது போல ஒரு சுற்று சுற்றி நாரின் முனைகளை உள்ளே வாங்குவார்கள் அப்படியே முடிச்சி விழுந்துவிடும், அதை இயந்திர வேகத்தில் பெண்கள் செய்வார்கள், பல ஆண்டுகள் கழித்தே பூ கட்டுவதற்கென்று நூல் கண்டுகள் வந்தது.
அதற்கு முன்பு வரை மெலிசான நூலில் பூ கட்டினால் பூச்சரம் நிற்காது, பூவின் காம்பு துண்டாகிவிடும், கட்டுவதும் சிரமம், அதை கடையில் விற்பனை செய்வதும் சுலபமல்ல.
ஆகையால் வாழை நாரை இப்படி முடிச்சி முடிச்சாக இணைத்து ஒரு டைமண்ட் வடிவத்தில் சுற்றி வைத்துக் கொள்வார்கள், பூ கட்டும் போது அந்த வாழை நார் பந்தை தண்ணீரில் போட்டு வைத்துக் கொண்டு சரசரவென பூவை கட்டி முடிப்பார்கள். அப்படி ஈர நாரில் பூக்கட்டுவது ஒருவகை லாவகம்.
வீட்டில் போதுமான வருவாய் இருந்தாலும் காலத்தை கடத்தவே அம்மா பூக்கட்டும் வேலையில் இறங்கினார். மாதம் ஐம்பது ரூபாய் சேர்ப்பது குதிரைக் கொம்பு, சில பெண்கள் மட்டும் இருநூறு, முன்னூறு ரூபாய்க்கு பூக்கட்டுவார்கள் அவர்கள் இயந்திரம் போல இயங்குவார்கள்.
அப்பாவுக்கு தொழில் முடங்கிய போது அம்மா நீண்ட நேரம் பூக்கட்டும் பழக்கத்திற்கு வந்தார்கள் இந்த கா படி அரைப் படிக் கணக்கெல்லாம் மலையேறி கிலோ கணக்கு வந்தது.
ஒரு கிலோ மல்லிக்கு ஐந்து ரூபாய், ஒரு கிலோ முல்லைக்கு எட்டு ரூபாய் என உயர்ந்து இருந்தது, வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு பதினொரு மணிக்கு உக்காந்தாங்கனா சாயுங்காலம் ஏழு மணி வரைக்கும் மூனு கிலோ நாலு கிலோ கட்டுவாங்க, பூவை எடுக்க சிரமமாக இருக்கும் ஆகையால் குட்டி பசங்க அடிக்கி வைப்போம் முல்லை ரெட்டை வரிசை, மல்லி ஒத்தை வரிசைன்னு அப்போ கொஞ்சம் சிரமம் குறைவாக இருக்கும், கதம்பம் கட்டும் போது ஒரு ஆள் கனகாம்பரம், ஒரு ஆள் மல்லி / முல்லை அடுக்கிக் கொடுத்தால் மரிக்கொழுத்து பூக்கட்டும் நபர்களே சுருட்டி மடக்கி வைத்து கட்டுவார்கள் அதுவும் காலப்போக்கில் கோழிக் கொண்டை, நெய்வேலி காட்டாமணக்கு இலைலாம் வச்சி கட்டத் தொடங்கினார்கள் நான் பிஜி படிக்கிற வைரைக்கும் அதாவது 2010 வரைக்கும் அம்மா பூக்கட்டும் வேலையை செய்தார்கள்.
அவர்கள் கடைசியாக பூ கட்டும் போது கிலோ 25 ரூபாயாக உயர்ந்து இருந்தது, மாதம் சில ஆயிரம் சம்பாதிப்பார்கள். நோட்ல தினமும் கணக்கு எழுதி வச்சிகிட்டு மாசம் மாசம் முக்கியமான செலவு அல்லது மளிகை சாமான், அல்லது குழந்தைகளின் படிப்பு செலவுக்குன்னு பயன்படும், மத்த பெண்கள் பசங்களையும் பூக்கட்டவோ அல்லது ஏதாவது ஒரு கைத்தொழிலுக்கு அனுப்பி விட்டு இந்த காசில் கொஞ்சம் தங்கம் சேர்ப்பார்கள், அப்பாவின் வருவாயோடு இந்தச் சில ஆயிரமும் சேர்ந்துக் கொண்டு நான்கு நபர்கள் கல்வி கற்க முடிந்தது.
பெண்கள் பம்பரமாக சுற்றினாலும் அவர்களுக்கு கிடைப்பது என்னவோ சொற்பமான பணமும் நிம்மதியும் தான், அது போக பெண்கள் உழைத்து தங்கள் சேமிப்பில் வைத்திருக்கும் பணமோ நகையோ ஆண்களுக்கு அவ்வளவு உருத்தலாக இருக்கும், சம்பாதிக்கிறன்னு திமிரு அதான் மதிக்க மாட்றேன்னு ரொம்ப ஈசியா சொல்லிட முடியும்.
குருவி சேக்குறாப்ள சேத்து வச்சி மொத்த மொத்தமா மகளுக்கும் மகனுக்கும் கொடுக்க உழைக்கும் பெண்கள் தான் ஆறை நூறாக்கும் பெண்கள் அப்படி ஒரு பெண் தான் அம்மா மணிமேகலை.
மதியம் தோட்டத்தில் இருந்த செவ்வாழை மரத்தில் காய்ந்த பட்டையை உரித்து அந்த நாரில் முல்லைப்பூவை கட்டிக்கிட்டு இருந்தாங்க, வந்து கிட்ட உக்காந்து கொஞ்ச பாத்துகிட்டு இருந்தேன் இதுக்கு பின்னாடி ஒரு உலகம் இயங்குச்சி இப்பவும் இயங்கிட்டு தான் இருக்குன்னு.
தற்சார்பு வாழ்வியலுக்கான பாடம் தாய்மார்களிடம் கற்க வேண்டியது