Breaking News :

Monday, May 20
.

திருக்குறள் கதைகள் - குறள் 18


இந்த வருஷம் நம்ம கோவில் திருவிழாவைப் போன வருஷத்தை விடச் சிறப்பாகக் கொண்டாடணும்" என்றார் தர்மகர்த்தா நாச்சிமுத்து.

"அதுக்கென்ன ஜமாய்ச்சுப் புடலாம்" என்றார் அய்யாக்கண்ணு.

"ஜமாய்க்கறதாம்! இவரு ஒரு பைசா குடுக்கப் போறதில்ல"  என்று நினைத்துக் கொண்டார் மருதமுத்து.

வேறு யாரும் எதுவும் பேசாமல் மௌனமாகத் தலையாட்டினர்.

"சரி. அப்ப நானும் விழாக்குழு உறுப்பினர்களும் நாளையிலேருந்து வசூலுக்குக் கெளம்பறோம்" என்று தர்மகர்த்தா சொல்ல, கூட்டம் முடிந்தது.

இரண்டு வாரங்கள் கழித்து நாச்சிமுத்துவும் மற்றவர்களும் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு வந்தார்கள். பொன்னம்பலம் ஊரிலேயே பெரிய பணக்காரர். எந்த நல்ல காரியம் என்றாலும் தாரளமாக உதவி செய்பவர்.

வந்தவர்களை உட்கார வைத்து, காப்பி கொடுத்து உபசரித்து விட்டு, பொன்னம்பலம் கேட்டார். "ஆமாம், வசூல் எல்லாம் எந்த மட்டிலே இருக்கு?"

"என்னத்தைச் சொல்றது? போன வருஷம் வசூல் ஆனதில் கால் பங்கு கூட வசூலாகவில்லை. எப்பவும் தாரளமாகக்  கொடுக்கறவங்க கூட இந்த வருஷம் குறைவாத்தான் குடுத்தாங்க. எல்லாத்தையும் விடக் கொடுமை என்னன்னா, சில பேரு 'இவ்வளவு பணம் செலவழிச்சுத் திருவிழா நடத்தணுமா?'ன்னு கேக்கறாங்க. சில பேரு பிடிவாதமா பத்து ரூபாய் கூடக் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. தெய்வ நம்பிக்கையே குறைஞ்சுக்கிட்டு வருது."

"வழக்கம் போல நீங்கதான்  பெரிய அளவில உதவி செஞ்சு திருவிழாவைச்ச சிறப்பா நடத்தி வைக்கணும்" என்றார்  நமசிவாயம் என்ற விழாக்குழு உறுப்பினர்.

பொன்னம்பலம் கொஞ்சம் யோசித்து விட்டு, "இந்த வருஷம் வசூல் ஏன் இவ்வளவு குறைவுன்னு உங்களுக்குத் தெரியாதா?" என்றார்.

"தெரியாமல் என்ன? மழை பெய்யாததால விவசாயம் நடக்கல. ஊர்ல மத்த தொழில் செய்யறவங்களுக்கும் வருமானம் குறைஞ்சு போச்சு. யார் கிட்டேயும் காசு இல்லே. காசு இருந்தாலும் நம்ம தேவைக்கே போதாதபோது கோவில் திருவிழாவுக்குக்  கொடுக்கணுமான்னு யோசிக்கிறாங்க!"

"எல்லோருக்கும் அதே நிலைமைதான். உங்களையும் என்னையும் சேர்த்துத்தான் சொல்றேன். ஊர்ல மழை பெய்யாமல் விவசாயம் குன்றிப் போனா, திருவிழாக்கள் நடத்தறதில மக்களுக்கு எப்படி உற்சாகம் இருக்கும்?"

"நீங்க என்ன சொல்ல வரீங்க?"

"இந்த வருஷம் திருவிழா வேண்டாம். வசூல் பண்ணின பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க. அடுத்த வருஷம் நல்லபடியா விழாவை நடத்திடலாம்" என்றார் பொன்னம்பலம்.

"விழா நடத்தலேன்னா சாமிக்குத்தம் ஆகி விடாதா?'

"ஏங்க, மழை பெய்ய வைக்க வேண்டியது சாமிதானே? மழை பெய்யலேன்னா அது சாமியோட குத்தம் இல்லையா? நான் கடவுளுக்கு எதிராப் பேசலே. நீங்க சாமிக் குத்தம்னு சொன்னீங்களே அதுக்காகச் சொன்னேன். நாம வருஷா வருஷம் விழா நடத்திக்கிட்டுத்தானே இருக்கோம்? இந்த வருஷம் நாம விழா நடத்தலேன்னா அதுக்கு என்ன காரணம்னு சாமிக்குத் தெரியாதா? மழை பெய்து மக்கள் வளமாக இருந்தால்தானே சாமிக்கு விழா எல்லாம் எடுக்க முடியும்? குடும்பத்தை நடத்தறத்துக்கே கஷ்டப்படுகிற மனுஷன் சாமிக்கு விழா எடுக்கறதைப் பத்தி எப்படி யோசிக்க முடியும்?"

"அப்ப நாங்க வரோம்" என்று எழுந்தார் தர்மகர்த்தா.

குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

பொருள்:
வானிலிருந்து பெய்ய வேண்டிய மழை பெய்யாவிட்டால் வான் உலகில் வாழும் தெய்வங்களுக்கு நடக்க வேண்டிய பூசைகள் கூட நடக்காது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.