Breaking News :

Monday, May 20
.

வாழ்றதுக்கு உனக்கு ஏதும் பிடிப்பு இல்லேன்னுதானே கவலைப்படறே? - காஞ்சி மகான்


(மகானிடம் வேண்டியவருக்கு பிடிப்பும் கிடைத்து விட்ட சம்பவம்)

 

(ஏதோ சினிமா நிகழ்ச்சி போல் தோன்றினாலும் மடத்தில் நடந்ததை தன் கண்ணால் பார்த்து, காதால் கேட்ட ஒரு டிராவல்ஸ் கம்பெனி அதிபர் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்.)

 

கட்டுரை-ரா.வேங்கடசாமி

காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து

புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 

காஞ்சி மடத்தில் வரிசையாக பக்தர்கள் மகானைத் தரிசித்தபடி போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

 

இப்போது வயதான தம்பதியர் முறை.மகான் அவரை ஏறிட்டுப் பார்க்கிறார். முதியவர் அதற்காகவே காத்துக்கொண்டு இருந்தவர் போல,மகானிடம் தன் எண்ணங்களைச் சொல்கிறார்.

 

"நான் சர்வீசிலிருந்து ரிடையர் ஆகிவிட்டேன். வாரிசுகள் யாரும் இல்லை. மடத்தில் ஊழியம் செய்யலாம் என்று வந்து இருக்கிறோம்.  மகான் அருள் பாவிக்க வேண்டும்."

 

பேச்சில் இருந்த உருக்கம், குழைவு எல்லாவற்றையும் மகான் கவனிக்கிறார்.  அருகில் வயதான மனைவி.

 

"வாழ்றதுக்கு உனக்கு ஏதும் பிடிப்பு இல்லேன்னுதானே கவலைப்படறே?

"

 

"ஆமாம்."

 

"ஏதாவது ஒரு காரியம் கொடுத்தா செய்வியா?"

 

"கட்டளையிட்டா நிறைவேத்த நான் தயார்"

 

அவரை அப்படியே நிறுத்திவிட்டு, அடுத்து வந்த பக்தரைக்கவனிக்கிறார். அவர்களும் வயதானவர்கள்தான். அருகில் ஓர் இளம்பெண்.

 

பெண்ணின் தந்தை மகானிடம் சொல்கிறார்...;.  "இது எனக்கு ஒரே பெண். இவளுக்கு கல்யாணம் செய்வதாக முடிவு பண்ணியிருக்கோம். பெரியவா ஆசீர்வாதம் செய்யணும்."

 

கையை உயர்த்தி அப்பெண்ணை ஆசீர்வதிக்கிறார்.

 

பிடிப்பு' வேண்டிய பெரியவர்  இதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

 

மகான் லேசாக அவரை நோக்கிப் புன்னகை செய்தவாறு, "பிடிப்பு வேணும்னு கேட்டியே. இதோ இந்தப் பெண்ணுக்கு நீ சிறப்பா கல்யாணம் செய்து வை"

 

"செஞ்சுடறேன்...செஞ்சுடறேன்..." என்றார் அவர்.  கீழே விழுந்து மகானை வணங்கியவாறு.

 

அதற்குள் மடத்து ஊழியர் ஒருவரிடம் ஏதோ சொல்லி அனுப்புகிறார்.

 

வணங்கியவர் எழுந்தபோது மகான் அவரிடம் இரட்டை விரலைக் காட்டிவிட்டு,அவரது துணைவியாரைப்பார்க்கிறார்.

 

அவரும் புரிந்து கொண்டார்.

 

அதற்குள் மடத்து ஊழியர் மகானிடம் ஒரு விஷயத்தைச்சொல்லி அப்பால் நகருகிறார்.

 

மகானின் முகத்தில் இப்போது லேசான மாறுதல்.

 

"உன் மூத்த தாரத்துக்கு ஒரு பெண் குழந்தை இருந்ததே..  அது என்னாச்சு?"

 

அது மகானுக்கு எப்படித் தெரியும்? கலங்கிப் போனார் பெரியவர்...

 

"இவ சித்தியா வந்ததும் அந்தப் பெண்ணை படாதபாடு படுத்த, அது சின்ன வயசிலேயே வீட்டை விட்டுப்போயிட்டா..  நானும் தேடாத இடமில்லை... போனவ போனவா தான்....."

 

"பிடிப்பு வேணுமுன்னு சொன்னே இல்லை,"

 

"இதோ இந்தப் பெண்தான் உன் காணாமற்போன மக,  இவளை அழச்சுண்டு போய்...  நல்லபடியா கல்யாணம் செய்து வை..."

பெரியவா இதைச் சொல்லக் கேட்ட, அத்தம்பதியர் கீழே விழுந்து, ஆனந்தக் கண்ணீர் விட்டபடியே வணங்கி எழுந்தனர்.

 

பெண்ணை வளர்த்த பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட பின் தான் மகான் இதை உறுதிப்படுத்தினார்.

 

பல வருடங்களுக்கு முன்பு ரயில்வே ஸ்டேஷனில் இந்தப் பெண் அழுது கொண்டு நின்றதாகவும், அதைக்கண்டு இவர்கள் திகைத்துப் போய், அவளை அழைத்துக் கொண்டு, தங்கள் ஊருக்குப் போய் வளர்த்து வந்ததாகவும் சொன்னார்கள். இதை மகான், மடத்து ஊழியர் வழியாக முதலில் தெரிந்து கொண்டார்.

 

காணாமற்போன பெண் கிடைத்தால், யாருக்குத்தான் மகிழ்ச்சி இருக்காது.

 

எத்தனையோ வருடங்களுக்கு முன்பு காணாமற்போன தனது மகள், திரும்பவும் தன்னிடமே வந்து சேர்ந்தது மகானின் அருளால்தான் என்பது பெரியவருக்குத் தெரியாதா?.

 

ஏதோ சினிமா நிகழ்ச்சி போல் தோன்றினாலும் மடத்தில் நடந்ததை தன் கண்ணால் பார்த்து, காதால் கேட்ட ஒரு டிராவல்ஸ் கம்பெனி அதிபர் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்.

 

தெய்வத்தின் மானிட உருவில் நடமாடிய அந்த மகான் தன்னை அண்டி,வேண்டி நின்றவர்களுக்கு உதவாமல் போனதே இல்லை.  அதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. பெற்றோர்களும், வளர்த்தவர்களும் ஒருங்கே ஆனந்தப்பட்ட நிகழ்ச்சி இது.....

 

மகானிடம் வேண்டியவருக்கும் பிடிப்பும் கிடைத்து விட்டது,

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.