கூட்டுக் குடும்பம் ஏன்?
கூட்டுக் குடும்பம் என்று கூறும் பொழுதே சுகமான காற்று வீசுவதுபோல் உணர்கின்றேன்.. ஆனால், சில சமயங்களில் அது புயல் காற்றாய் வீசும் பொழுதுதான் வருத்தமே...
கல்யாணம் ஆனதும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் தம்பதியர் தனிக் குடுத்தினம் செல்வது நல்லது என்பது எனது கருத்து.. கட்டாயம் இது அந்தப் பெண்ணிற்கு ஒரு வரப்பிரசாதமாய் இருக்கும். அம்மா வீட்டு பக்கத்திலோ அல்லது மாமியார் வீட்டு பக்கத்திலோ... இந்த நிலை கட்டாயம் மாமியார், மாட்டுப் பெண் இடையே ஒரு பாசம், அன்பு, புரிந்து கொள்ளுதல் , பரிவு ஏற்படும் என்பது எனது எண்ணம். கூடி வாழவேண்டும் என்ற ஏக்கம் பிறக்கும் விரைவில்... இது உண்மை..
புதியதாய் கல்யாணம் ஆனப் பெண் கட்டாயம் தன் கணவனுடன் வெளியில் செல்ல ஆசைப் படுவது இயற்கையே... , தனக்குப் பிடித்தது, கணவனுக்குப் பிடித்தது என்று ஆசையாய் செய்து கொள்ள இஷ்டப் படுவது இயல்பு.... எந்த ஒரு புக்ககத்திலும் உள்ளே நுழைந்திருக்கும் பெண்ணின் விருப்பத்தை கேட்டுத் தெரிந்துக் கொள்வதில்லை... அவளுக்கு ஒன்றும் தெரியாது என்கிற முத்திரைதான் பதிக்கப் படும்... இது அவளின் ஆர்வத்தை முடக்குவதாய் அமைகின்றது... கூட்டுக்குடும்பத்தில் கொஞ்சம் ஸ்ரமம் தான்.. இப்பொழுது கொஞ்சம் நிலைமை மாறி இருக்கலாம்... ஆனால் நான் கூறுவது பொதுவானக் கருத்து....
ஓரிரு ஆண்டுகள் ஆனவுடன் குழந்தை பிறந்ததும் கட்டாயம் கூட்டுக் குடும்பம் இன்றைய கால கட்டத்திற்கு அவசியம்... ஆனால், அக்காலகட்டத்தில் , ஒரு மாமியார் நினைப்பது.... " இப்ப மட்டும் வேண்டுமா என்னுடைய துணை ? குழந்தையைப் பார்த்துக்க நான் ஆயாவா? " அவள் நினைப்பது குற்றம் என ஒரு மனதாய்க் கூறிவிட முடியாது என்றாலும், உண்மைதானே? திருமணம் ஆன புதிதில் ஊரைச் சுற்ற, தன் இஷ்டம்போல் வாழ தனிக்குடித்தினம்... பின் , குழந்தையை பராமரிக்க கூட்டுக்குடும்பமா?
சரி, யார் இவர்கள்..? தன் பிள்ளைகள் தானே? அவர்கள் சந்தோஷம் தானே நம் சுகம்... இருந்துவிட்டுப் போகட்டும் சில வருடங்கள்... அவர்கள் இல்லா வாழக்கை ஒரு வாழ்க்கையா? அவர்களுக்கு செய்யாமல் யாருக்குச் செய்யப்போகிறோம்? நினைத்துப் பாருங்கள்....
மாமியார் சற்று ஒத்துழைத்தால் கூட்டுக் குடும்பம் போல் எதுவும் இல்லை... மாறாக அவர் கண்டிப்பானவராகவோ, குற்றம் கண்டு பிடிப்பவராகவோ இருப்பின் , தனி குடுத்தினம் நல்லது... மன கலக்கத்துடன் கூடி இருப்பது கஷ்டம்... ஒருவர் முகத்தை ஒருவர் தினமும் பார்க்க வேண்டும்... மனதில் வெறுப்போடு கூடி இருப்பதை விட சற்று தள்ளி இருந்து பாசமாய் இருப்பது மேல்...
இளைய தலைமுறையினருக்கு தன் குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்தவுடன் புரியும் கூட்டுக் குடும்பதின் அருமை.. இது உண்மை வெறும் வாய் வார்த்தை அல்ல.. கூடி இருப்பதில் சுகமே... சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க என்ன வழி என்று ஆராயலாம். கொஞ்சம் முயற்சி எடுத்தால் சாத்தியமே..!
எப்பொழுதுமே ஒன்று இல்லை என்றால் தான் அதன் அருமை புரியும்... "இக்கரைக்கு அக்கரைப் பச்சை" என்பார்களே..! அது இந்த விஷயத்தில் உன்மைதான் ...
மாமியார் தன் மகளாய் மாட்டுப் பெண்ணை நினைத்தாலே போதும்... மாட்டுப்பெண் மாமியாரை அம்மா ஸ்தானத்தில் வைத்துப் பார்த்தால் எந்த ஒரு பிரச்சனையும் விலகும் மேகங்களாய் மறையும் என்பது உறுதி...
இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் பழக்கம் அவசியம்.... எதையும் இயல்பாய் எடுத்துக் கொள்ளும் எண்ணம், ஈகோ என்கிற ஆணவத்தை சற்று தகற்றினால் நன்று..... நம் குடும்பம், நம் இல்லம் நம் மனிதர்கள் என்கிற சொற்கள் மனதில் பதிந்தால் மாற்றங்கள் ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை...
கூட்டுக் குடும்பத்தை போற்றுவோம் ....