கும்பகோணம் டிகிரி காப்பி வரலாறு!
இந்தியாவில் கர்நாடக மாநிலம் குடகு மலைப் பகுதியில் காபி முதன்முதலில் ஆங்கிலேயர்களால் பயிர் செய்யப்பட்டது. காபி டீயைப் போல இல்லாமல் சற்று குளிர் மற்றும் உயரம் குறைந்த மலைப்பகுதியில் விளையக்கூடியது.
அதனால்தான் தமிழ்நாட்டில் சிறிய மலைகளான ஏற்காடு, ஜவ்வாது மலை, கொல்லிமலை, கொடைக்கானல், ஏலகிரி போன்ற இடங்களில் காபி விளைகிறது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள்தாம் காபியைப் பயன்படுத்தி வந்தனர். அவர்களிடமிருந்து இந்திய, குறிப்பாக தென்னிந்திய உயர்சாதியினர் அந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொண்டனர்.
இந்தியாவில் காபி என்பது மேட்டுக்குடி மக்களுக்கானதாகவே இருந்தது. அதனால்தான் இன்றளவும் டீ அளவுக்கு காபி பிரபலமாகவில்லை. இதற்குக் காரணம் அதைத் தயாரிக்கும் முறையில் உள்ள சிக்கல்களும்தான். பால் கலந்து காபி போடும் பழக்கம், இன்ஸ்டன்ட் காபித்தூள் எல்லாம் காபியின் பரிணாம வளர்ச்சிதான்.
கும்பகோணம் என்றால் கோயில்களையும் தாண்டி பலருக்கும் நினைவுக்கு வருவது டிகிரி காபி. அதென்ன டிகிரி காபி? டிகிரி காபிக்கு பெயர்பெற்ற கும்பகோணம் `ஞானம் காபி பார்' உரிமையாளர்களில் ஒருவரான பிரவீன் சொல்கிறார்.
``1927-ம் வருஷம் கடையை தொடங்கினோம். நாலாவது தலைமுறையா கடையை நடத்திட்டு வர்றோம். தண்ணி கலக்காத சுத்தமான பசும்பால்தான் டிகிரி காபியோட தனிச்சிறப்பு. தரமான காபித்தூள்ல பில்டர் பாத்திரத்துல டிக்காஷன் ரெடி செஞ்சு, அதை டிகிரி பால்ல கலக்குறதுதான் கும்பகோணம் டிகிரி காபியோட தனிச்சுவைக்குக் காரணம்.
அந்தக் காலத்துல, வியாபாரிகள்கிட்டயிருந்து பால் வாங்கும்போது அதுல தண்ணி கலந்திருக்கானு பார்க்க, கண்ணாடி கிளாஸ்ல பாலை ஊத்தி 20 நிமிஷம் வைப்பாங்களாம். கிளாஸ்லயிருந்து பாலை வேற பாத்திரத்துக்கு மாத்துனதுக்கு அப்புறம், அந்தக் கிளாஸ் கண்ணாடியில பால் பிசுபிசுனு அடர்த்தியா ஒட்டியிருந்தா, அது தண்ணி கலக்காத பால்னு உறுதிசெய்வாங்க.
தண்ணி கலந்த பால்ல காபி போட்டா முழுமையான டேஸ்ட் கிடைக்காதுங்கிறதால, காபி கடைக்காரங்க எல்லாரும் பால்ல டிகிரி பார்க்குற இந்த முறையை பின்பற்றி வந்தாங்க. மக்கள் அந்தச் சுவையை `டிகிரி காபி கொடுங்க'னு குறிப்பிட்டுக் கேட்க, அந்தப் பெயர் வந்துடுச்சு அப்படின்னார்.
இன்னைக்கு ஊருக்கு ஊர் கும்பகோணம் டிகிரி காபின்னு விற்பனை செஞ்சாலும் ஒரிஜினல் டிகிரி காபியின் சுவை கும்பகோணத்துலயே கிடைக்கிறது குறைவு தான், ஏன் சொல்றேன்னா கலப்பின மாடுகள் அதிகரிப்பால பசும்பாலின் சுவையும் தரமும் குறைந்து போனது தான் காரணம், செக்கில் ஆட்டிய பிண்ணாக்கு, பருத்திக்கொட்டை எல்லாம் உணவா கொடுத்த இடத்துல கலப்பு தீவனங்களால பால் உற்பத்தி அதிகரிச்சாலும் பாலின் தரம் குறைந்து தான் காணப்படும், பாக்கெட் பால்ல பில்டர் காபிய போட்டுட்டு டிகிரி காபின்னு யாராவது சொன்னா நம்பாதிங்க அதுமட்டும் இல்ல காபியோட தரமும் இந்த கும்பகோணம் டிகிரி காபிக்கு முக்கிய காரணம் அந்த காலத்துல முதல் தர காபி கொட்டைகள் தான் பெருமளவு சந்தைக்கு வந்தது சிக்கரி கலந்து டிக்காக்சன் எடுக்கும் போது சாலையில போறவங்கள வாசனை சுண்டி இழுக்கும் அதான் மேட்டர் , காபி குடிச்சா மட்டும் கிக்கா இருக்க கூடாது காபி போடும் போதே கிக் ஏறனும் .....
விக்கிரவாண்டியில மரணவிலாஸ் உணவகங்கள்ல இரவு நேரம் பஸ் நிறுத்தும் போது பில்டர் காபின்னு ஏமாந்த நபர்கள நானும் ஒருத்தன் இன்னைக்கு கருப்பட்டி காபின்னு ஊர ஏமாத்திட்டு இருக்குற வியாபாரிகளுக்கு கும்பகோணம் டிகிரி காபியின் சுவை எப்படி இருக்கும்குறதே தெரியிறது இல்ல. .
ஒரு கடை அதோட சிறப்பான உணவு அதோட தனித்துவம் செய்முறை எல்லாமே இடம் மாறும் போதும் சரி முறை மாறும் போதும் சரி ஒரிஜினாலிட்டிய இழந்துடுது அப்படின்னு தான் சொல்லுவேன், கும்பகோணத்துல காபிய குடிச்சா மட்டும் டிகிரி காபி குடிச்சேன்னும் சொல்லிட முடியாது ஏன்னா கும்பகோணத்துலயே டிகிரி காப்பின்னு ஏமாத்தி விற்பனை செய்ற மரண விலாஸ்கள் இருக்கத்தான் செய்யிது .
சக்கரை தூக்களா ஒரு பில்டர் காபி அந்த நாள் இனிய நாள