"அந்த சட்டித் தயிர் கொண்டு வா" - காஞ்சி மகான் பெரியவா

kanchi-mahan-periyava-thayirkari-seitha-punniyam
"அந்த சட்டித் தயிர் கொண்டு வா" - தயிர்க்காரி செய்த புண்ணியம்

('சாமி எல்லாத்தையும் சாப்பிடணும்' என்று சொல்லிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் போனாளே தயிர்க்காரி,  அவள் வார்த்தைகள் சத்தியமாகி விட்டன.)

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.

புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

சிவாஸ்தானத்தில் ஒரு தயிர்க்காரி இருந்தாள்.ஸ்ரீ மடத்தைத் தாண்டிப் போகும் போதெல்லாம்  பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டுப் போவாள். கூட்டமாக இருந்தால், யார் மேலும் பட்டுவிடாமல் தொலைவிலிருந்தபடியே விழுந்து கும்பிடுவாள்.

காலையில் நீராடுகிற வழக்கமில்லை. அநேகமாக பிற்பகலில்தான் நீராடுவாள். அதனால் மற்றவர்களுக்குத் தீட்டுப்  பட்டு  விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பாள்.
ஒருநாள் கூட்டமில்லாத சமயத்தில், பெரியவாள் எதிரில் வந்து தயிர்க்கூடையை வைத்தாள். சிறு சிறு சட்டிகளாக நாலைந்து சட்டித் தயிரை வெளியே வரிசையாக வைத்தாள்.

"எசமானே! பசும்பால் காய்ச்சி, உறை குத்திக் கொண்டு வந்திருக்கேன். சுத்தமா செய்திருக்கேன். சாமி எல்லாத்தையும்  சாப்பிடணும்" என்று உரக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
பிற்பாடு சிஷ்யரைக் கூப்பிட்டு, "அந்த சட்டித் தயிர் கொண்டு வா" என்றார்கள் பெரியவாள். ஒரு சட்டியிலிருந்து தன் கையாலேயே  சிறிதளவு எடுத்துச் சாப்பிட்டார்கள். மீதி சட்டிகளிலிருந்த தயிரை, தயிர்ப்பச்சடி, மோர்க்குழம்பு, மோர்க்கூட்டு, அவியல் செய்யச் சொல்லி, அன்று பிக்ஷை  செய்தார்கள்.

ஒரு தயிர்க்காரியின் பக்திக்குக் கட்டுப்பட்டு, பெரியவாள் இப்பட்யெல்லாம் செய்தார்கள். பெரிய பெரிய தனவந்தர்களுக்குக்     கூட கிடைக்காத பாக்கியம் இது. தயிர் என்றால், பெரியவா கண்ணனாகவே மாறி விடுவார்கள்.

'சாமி எல்லாத்தையும் சாப்பிடணும்' என்று சொல்லிவிட்டுப் பதிலுக்குக்  காத்திராமல் போனாளே தயிர்க்காரி
அவள் வார்த்தைகள் சத்தியமாகி விட்டன என்பது வேண்டுமானால் ஒருகால் அவளுக்கு தெரியாமல் போயிருக்கலாம்.

ஆனால், 'சாமி' சத்தியமானவராயிற்றே!.