பொதும்பு அப்பத்தா - சிறுகதை

pothumbu-appatha-short-story
பொதும்பு அப்பத்தா - சிறுகதை

அந்த அப்பத்தாக்கெழவியோட பேரு என்னான்னு யாருக்கும் தெரியாது. எல்லாரும் அதை செவிட்டுஅப்பத்தா இல்லாட்டினா செவுடு ந்னும் செலபேரு பொதும்பு அப்பத்தா இல்ல பொதும்புக்கெழவின்னு கூப்புடுவாக. காரணம் அதுக்குகாது  கொஞ்சமாத்தான் கேக்கும். இடி விழுந்தா யாரு சட்டியப் போட்டதுன்னு கேக்கும் அம்புட்டுத்தெளிவு. 

அந்த அப்பத்தா எங்க அப்பத்தா கூடப் பொறந்ததுதான். சின்னவயசில பொதும்புன்ற கிராமத்துல கட்டிக்குடுத்து வீட்டோட வந்து தங்கச்சி கூடத்தங்கிருச்சு, அய்யாவுக்கு ஆலோசனை வழங்கும். நாம சொல்றது காதுலவிழாது . அதுபாட்டுக்கு ஆலோசனை வழங்கும். நாம உத்துப்பாத்துக்கிட்டு இருந்தா கேட்டதா நெனச்சிக்கிட்டுப்பேசும். ஆனா அது காது வளந்து சவுடிபோட்டுத்தொங்கும் அத ஆட்டி ஆட்டிப்பேசுறதுசின்னப்பிள்ளைகளுக்கு வேடிக்கையா இருக்கும்.

அதுக்கு வெத்தல பாக்குன்னா உசிறு. ஆனா அதுக்கு மெல்லுறதுக்குப்பல்லு கெடையாது அதுனால அத இடிக்கிறதுக்குன்னு ஒரு இரும்பு உரல் சின்னதா வைச்சிருக்கும். அதுல வெத்தல கொட்டப்பாக்கு சுண்ணாம்பு போட்டு செவக்கச்செவக்க இடிச்சி ஒருபாதி தன் வாயில போட்டு ஒதக்கிக்கும் இன்னொரு பாதிய அய்யாவுக்குக்கொடுக்கும் அதே மாதிரி அய்யாவும் பேரப்புள்ளைகளை வெத்தலைபாக்கக் குடுத்து இடிக்கச்சொல்லி அவரும் அப்பத்தாவுக்கு பங்கு குடுப்பாரு

சின்னபிள்ளை களுக்கு வெத்திலகாம்பை பிச்சி பச்சபிள்ளைகளுக்கு வாயில போட்டுவிடும்,
இன்னோரு விசயம் அதோட மொத்தபல்லும் கொட்டிப்போனதாலபேசுறதுபொதபொதன்னு கேக்கும் வெளங்காது. ஆனா அது சீரியசா பேசும்கேக்கலைன்னாகோவிச்சிக்கும் அம்ப பேஜுரத ஒருத்தியும்கேக்க மாட்டாளுக சிறுக்கிகன்னு திட்டும்

காலையில கஞ்சி குடிச்சேன்றதை காதையில கந்தி குதிச்சேன்ன்னு சொல்லும். பழக்கப் பட்டவுகளுக்கு அது புரியும் . மத்தவுகளுக்கு அது புரியாது.  

முருக்குன்னா அது உசுறு. அதுவும் அந்த ஒரல்ல போட்டு இடிச்சி வாயிலபோட்டு ஒதக்கிக்கிடும். கறியெடுக்குற அன்னிக்கி அதுக்குன்னு ஆட்டுக்கறிய கொழைய வேகவைச்சி அப்புடியே சப்பி முழுங்குற மாதிரி குடுக்கனும். ஒரு வேல வேக்காடு கம்மியா இருந்துச்சுன்னா சத்தம் போடும். ஒருத்திக்கும் சமைக்கவே தெரியலன்றத ஒதுத்திக்கும் சமையத்தெரியலன்னு சொல்றதை கேட்டு எல்லாரும் சிரிப்பாக. அது புரியாம முழிக்கும். 
அதுக்கு படுக்குறதுக்குன்னு வீட்டுக்கு ஒட்டி ஓடுபோட்டுக் குடுத்துருந்தாக. அங்கதான் அது படுக்கும். அதுக்கு நேரங்காலம் தெரியாம ராத்திரி வெத்தலபாக்கு உரல்ல இடிச்சி வாயில போடும் அதுனால அர்த்தராத்திரில கூட வெத்தலை இடிக்கும்

ஆரு வீட்டுக்கு விருந்தாளிக வந்தாலும் என்னா வாங்கிட்டு வந்த எனக்குன்னு கேக்கும்.  அதுக்கு அம்சவல்லி ஓட்டல் பிரியாணின்னா உசிறு... அத அந்த அம்ப்சபல்லி பிரியாணிய வாங்கிட்டு வராமா என்னா வெட்டிசோலிக்கி வந்தீக  சிறுக்கிகளான்னு வையும். வாரவுக அது கூட ஒக்காந்து பேசனும் இல்ல மண்டக்கனம்  புடிச்சவளுகன்னு வையும் அதுக்குப்பயந்துக்கிட்டே சும்மானாலும் அதுகிட்ட ஒக்காந்தா அதுவா பேசும் ஊம் கொட்டினா போதும்

அய்யா வீடு கொஞ்சம் வசதியான வீடுதான். பெரிய காரவீடு அத ஒட்டிபஜனை மடம். பஜனை மடம்ன்னா பக்திபஜனை ந்னு நெனைச்சிடாதீங்க. அய்யா நாடக்காரர். அதுக்கு ஒத்திகைக்கு பாட்டுபழகுற எடம். அங்கதான் பாடிப்பாப்பாக, அதுனால அந்த எடத்துக்கு பஜனைமடம்ன்னு பேராயிப்போச்சு. அங்கதான் நாடகச்சாமான் எல்லாம் இருக்கும். படுதா ஜால்ரா கீரீடம் கத்தி இன்னும் என்னான்னமோ வெல்லாம் இருக்கும்.
 
அய்யா ஊர் ஊராப்போய் நாடகம் போட்டவரு அண்ணந்தம்பிகளை த்தான் நடிக்கவைப்பாரு ஊர்திருவிழாக்கள்ல வண்டி கட்டிட்டுப்போய் நாடகம் மூணுநாளு போட்டுட்டு வருவாரு நல்ல வருமானம். அதுபோக நாடக சீன்ஸ் ராஜபார்ட்   பபூன் நாரதர் இவங்களுக்கெல்லாம்  வாடகைக்கு விடுறதுக்கு டிரஸ் தைச்சி தகரப்பொட்டில வைச்சிருப்பாரு. கல்நகை நட்டுக கிரீடம் கத்தி ஈட்டி அப்புறம் சிம்மாசனம்  படுதா எல்லாம் இருக்கும்

அந்தக்கல்லு நகைக எல்லாம் மலேசியாவுல இருந்து கொண்டாந்ததுன்னு சொல்லுவாரு  அத வீட்டுல இருக்குறவுகளைத் தொடவிட மாட்டாரு பூட்டி பத்திரமா இருக்கும்.

இந்த டிரஸ்களைத்தக்கிறதுக்குன்னே ஒரு டைலர் இருந்தாரு அவருக்கு ஊழைமூக்கு டெயிலர்னு பேரு. அவர் பாட்டுக்குக் குத்தச்சிட்டுக்கெடப்பாரு  சம்பளம் பெருசாகெடையாது கஞ்சி ஊத்துனாப் போதும் நு அங்குணக்குள்ளயே கெடப்பாரு

அன்னிக்கி வீட்டுல எல்லாரும் அய்யாவோட நாடகம் பக்கத்து தெருவுல நடக்குது. அங்கபோயிருந்தாக. வீட்டுல பொதும்பு அப்பத்தா மட்டும் தனியா இருக்குது. 

அன்னிக்கிப்பாத்து களவாணிக திருடுறதுக்கு வந்துருக்கானுக. அப்ப எல்லாம் கரண்டு கெடையாது. அதுனால இருட்டுனா சாப்புட்டுப் படுத்துருவாக. அவனுக வந்து வீட்டுக்குப் பின்னாடி ஒளிஞ்சிகிட்டு களவானுறதுக்கு காத்திருந்தாக. வீட்டுல செவிட்டப்பத்தா மாத்திரம்தான். 

வந்தவனுக நடுராத்திரிக்கா காத்திருந்தாக. நடுராத்திரியானவன்ன வீட்டுக்குள்ள நொழைய போற சமயத்துல அப்பத்தா வெத்தலைய உரல்ல போட்டு இடிக்க ஆரம்பிச்சிடுச்சு. அதுக்கு இன்னோரு பழக்கம் உண்டு. அதுபாட்டுக்கு எதுத்தாப்புல ஆளு இருக்குறமாதிரி பேசும். சண்டபோடும். 

அதுமாதிரியே வெத்தலைய இடிச்சிக்கிட்டு பேச ஆரம்பிச்சிடுச்சி களவாணிகளுக்கு நிதானிக்க முடியல. வீட்டுக்குள்ள வேற யாரு இருக்கா கெளவி வேற முழிச்சிருக்கு சத்தம் போட்டா மாட்டிக்குவோம் ந்னு யோசனை வந்தவன்ன கொஞ்சம் பொறுத்துப்பாப்போம்

கெளவி எப்புடியும் கொஞ்சநேரத்துல தூங்கிடும். ந்னு நெனச்சிக்காத்திருந்தாக. இதுக்கு நடுவில அப்பத்தாவுக்கு வீட்டுல யாரும் இல்லைன்றதால ஒரு விபரீத ஆசை வந்துச்சு, 

நேர பஜனை மடத்துலபோய் ராஜா கீரீடத்த தலையில வைச்சிக்கிட்டு கத்தி அது நாலடி ரெண்டு கிலோ வெயிட்டுஇருக்கும் அதைத்தூக்கிட்டு. பாட ஆரம்பிச்சிடுச்சு அது அய்யா நாடகத்துல வார பாட்டு. யாரடா நீ இங்கு வந்து வம்பு செய்யிறவன் யாரடா நீ சோர சம்பமா நேர என்கிட்ட சொல்லாம ஏன் வந்தாய் சொல்லு சொல்லு சொல்லு யாரடா நீன்னு பாட ஆரம்பிச்சிடுச்சு.

வந்தவனுகளுக்கு வயிறு கலங்கிப்போச்சு. கெளவி நம்மல பாத்துடுச்சு. அதான் கத்தியோட நிக்கிது கத்திய சொலட்டுற வேகம் பாத்தா கத்திச்சண்டையெல்லாம் தெரியும் போலன்னு வெல வெலத்துப்போயிட்டானுக. 
தப்பிச்சாப்போதுமுன்னு சொவரு மேல ஏறிக் குதிச்ச எடம் மாட்டுக்கொட்டகை. அங்க இருந்த சாணில வழுக்கிவிழுந்து ஒருத்தனுக்கு காலுஒடஞ்சி போச்சு. இன்னொருத்தனுக்கு காலு பெசகிப்போச்சு. எந்திரிச்சி ஓடமுடியல. அப்பப்பாத்து ராத்திரில ஒண்ணுக்கு இருக்கவந்த பக்கத்து வீட்டு சிங்காரம்பிள்ளை என்னாடா சத்தம்ஒருமாதிரியாக்கேக்குதுன்னு மாட்டுக்கொட்டாயில எட்டிப்பாக்க மாட்டிக்கிட்டானுக.

அவங்க ரெண்டுபேரையும் புளிய மரத்துல கட்டிபோட்டுட்டு ஊரை கூட்டிட்டாரு. பிள்ளை. ஊரே கூடிருச்சு. பஜனை மடத்துலதான் களவாங்க வந்திருக்கானுகன்ன வன்ன வீட்டுக்கத வைத்தட்டுனாக. அப்பத்தா பாத்தா கீரீடம் கத்தியோட நிக்கிது. பாத்தவங்க எல்லாம் அப்பத்தா அடிச்சதுலதான் அவனுக குதிச்சதா நெனச்சிக்கிட்டாக . அப்பத்தாவுக்கு இம்புட்டு வீரமான்னு ஆளாலுக்கு புகழ்ந்து பேச ஆரம்பிச்சிட்டாக... அதுக்கு ஒன்னும் புரியல ஏன்னா நடந்தது என்னான்னு அதுக்குத் தெரியாது. அது பயந்துடுச்சு அய்யாகிட்ட நகை நட்டபோட்டதை போட்டுக் குடுத்துட போறாங்கண்ணு.. பயந்து போச்சு...

அதுக்குள்ளவிடிஞ்சிருச்சு. நாடகத்துக்குப் போனவுக எல்லாம் திரும்பிட்டாக . வந்து பாத்து நடந்த கூத்த தெரிஞ்சிக்கிட்டாக எல்லாருக்கு ஒரே சிரிப்பு. 

அப்ப அப்பத்தா நெலவர்த்தை புரிஞ்சிக்கிட்டு அதுபாட்டுக்குச் சொல்லிக்கிட்டு இருந்துச்சு காத ஆட்டி ஆட்டி அவதுகளை வெத்திருப்பேன் திக்காம தப்பித்துதாங்க கையில கத்தில வத்திருந்தேன்னுன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சு.

ஆனா அய்யா கோவமா வந்தாரு ஒன்னய ஆரு நகைநட்டெல்லாம் எடுக்கச்சொன்னதுன்னு சத்தம் போட்டாரு. அப்பத்தா ஆடிபோய்டுச்சு 

அப்புறம் அவரே சொன்னாரு. சும்மா கோவம் வந்தமாதிரி நடிச்சேன்... உனக்குத் தெரியாமலேயே பெரிய வேலை செஞ்சிருக் கன்னாரு..  அதுக்கு அப்பையும் புரியல...

இதுக்குத்தான் நாதகத்துக்கு நாதும் வாதேன்னேன்னு  சொந்தேன்னு சொல்லிச்சி 
என்ன இருந்தாலும் தனி ஆளா சமாளிச்ச பொதும்பு அப்பத்தா தெறமையை இன்னிக்கிம் அந்த ஊருல பேசிச் சிரிப்பாக............

அ.முத்துவிஜயன்