கரையொதுங்கும் மீன்கள் - சிறுகதை
அவர் அந்த வீட்டுக்கதவைத் தட்டினபோது ரொம்பநேரமா யாரும் திறக்கவில்லை. அதனால் பலமாகத்தட்டத்தொடங்கினார். கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குள் இருந்து ஒரு அம்மா வெளியே வந்து
“ யாரு நீங்க என்ன வேணும் ஒங்களுக்குன்னு “ கேட்டாங்க
அதுக்கு அவர்
”நீங்க யாரு இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க இது எங்க வீடு ” என்றார்
அந்த அம்மா வீட்டுக்குள்ள பாத்து சொன்னாங்க
“ அய்யோ இங்க வாங்களேன் இங்க ஒருத்தர் கதவைத்தட்டி கலாட்டா பண்ணுறார் இது அவரோட வீடாம் வந்து என்னன்னு கேளுங்க”
உள்ளே இருந்து வெளியே வந்தவர் அந்த அம்மாவோட கணவராக இருக்கலாம் அவர்
“ நீங்க யாரு ஒங்களுக்கு என்ன வேணும் . இது எனக்கு டிபார்ட்மெண்ட்ல அலாட் ஆன வீடு இதுலதான் 7 வருசமா இருக்குறேன் நீங்க ஏதோ சொன்னீங்களாமே என்ன “ என்றார்
” இது என் வீடு எனக்கு டிபார்ட்மெண்ட் அலாட் செஞ்சி 10 வருசமா குடியிருந்தேன் இப்ப வடக்க புண்ணியதேசமெல்லாம் ஒரு டூர் தனியாப்போய்ட்டு வந்து பார்த்தா நீங்க வீட்டுல இருக்கிறீங்க இது என்ன நியாயம்” நு கேட்டார்
அவரைப்பார்க்கப் பரிதாமமாக இருந்தது எப்படியும் 70 வயசு இருக்கும் தாடியும் மீசையும் நரைத்து ரொம்ப அழுக்காகவும் நாற்றத்துடனும் இருந்தார் அவரிடம் வீட்டில் இருந்தவர் கேட்டார் “ ஒங்க பேர் என்ன எங்க ஒர்க் பண்ணுறீங்கன்னு”
அதுக்கு அவர்
” என் பெயர் தெரியல மறந்து போச்சு இங்கதான் வேலை பாக்குறேன் இந்த வீடு என்னோடதுதான் வீட்டுக்குள்ள என்னோட மனைவி இருக்கிறாளா பாக்கனும்” என்றார்
இவருக்குத் தலை சுற்றியது. ஏதோ பிரச்சனை என்று தெரிந்தது அவருக்கு. விசாரிப்போம் என்று பேச்சுக்கொடுத்தார்.
”உங்க வயசு என்ன ” என்று வந்தவரைக் கேட்டார்
அதற்கு அவர்
” 55 ”என்றார் , ஆனால் பார்த்தால் நம்ப முடியவில்லை. சரி உள்ளே வாருங்கள் பேசலாம் என்று அழைத்துச்சென்று
“என்ன சாப்பிடுகின்றீர்கள்” என்று கேட்டார்
அவர் டீ கிடைக்குமா எனக் கேட்டார்
தன் மனைவியிடம் டீயும் கொஞ்சம் பிஸ்கட்டும் கொண்டுவரச்சொல்லிவிட்டு
உடனே , இங்க ஒரு பிரச்சனை உடனே வாருங்கள் என்று டவுன்சிப் சூப்பர் வைசருக்குப்போன் செய்தார்.
அதற்குள் டீயும் பிஸ்கட்டும் மனைவி கொண்டுவர வந்தவரிடம் கொடுத்தார் அதைக்கையில் கூட வாங்காமல் அவர் எழுந்து கழிவரைக்கு விரைந்தார் வந்தவர்
சிறிது நேரம்கழித்து வெளியே வந்த அவர் ”கழிவரையில் மெயிண்ட்னஸ் எல்லாம் நடந்திருக்கின்றதே டைல்ஸ் எல்லாம் போட்டிருக்கு எப்ப போட்டாங்க ” என்று விசாரித்தார்
இவர்
”அது கிடக்கட்டும். எப்போ டூர் போனீர்கள் அங்க என்ன ஆச்சு ஏன் இப்படி இந்தக் கோலத்தில் வந்திருக்கின்றீர்கள் ”
என்று விசாரிக்கத்தொடங்கினார்“
அதற்கு அவர் சொன்னார் “ சரியா நெனப்பில்ல.ஆனா என்னோட பை லக்கேஜ் காசு ஐடி கார்டு எல்லாம் யாரோ திருடீட்டாங்க நான் சென்னையில் வந்து இறங்கிய பின் எதுவுமே என்னிடம் இல்ல. ஒருமாதிரி கையேந்தி சமாளிச்சி வீடு வந்து சேந்தேன் இங்க வந்தா இங்கயேயும் பிரச்சனை” என்றார்
”உங்களைப்பார்த்தால் 70 வயது போலத் தோன்றுகிறது 70 வயதில் எப்படி டிப்பார்ட்மெண்டில் நீங்கள் வேலை பார்க்க முடியும் கொஞ்சம் யோசிச்சிப்பாருங்க ” என்று சொன்னார் இவர்
அதற்கு அவர் ”இது என்வீடுதான் ஆனால் என் பெயர் மறந்து போச்சு டூர் போய்ட்டு வந்தால் அவ்வளவு வயசாகிவிடுமா என்ன இன்னிக்கி நான் டூட்டிக்குப்போகவேண்டும் புரிஞ்சிகங்க”
என்றார்
அதற்குள் இவரது மனைவி வந்து
” இது பைத்தியம் போல ஒளருது அதை வைச்சி விசாரிச்சிக்கிட்டு இருக்கீங்களே டீக் குடிச்சதும் ஒழுங்கா வெளியே அனுப்புற வேலையைப்பாருங்கள் ” என்று ஊதினாள்
அதற்கு அவர் நான் பைத்தியம் இல்லை. இப்பவும் டிபார்ட்மெண்டுல வெலை செய்கிறேன் என்றார்,
அதற்குள் டவுன்சிப் சூப்பர்வைசர் வந்துவிட்டார். அவர் வந்தவரையெ சற்று உற்றுப்பார்த்துவிட்டு ”நீங்க ராமச்சந்திரன் தானே ’என்று கேட்டார்
அதற்கு வந்தவர் சொன்னார் தெரியல என் பெயர் எனக்கே தெரியவில்லை என்று சோகத்துடன் சொன்னார்
அதற்குள் டவுன் சிப் சூப்பர்வைசர் சொன்னார் "வாங்க நாம என் வீட்டுக்கு போகலாம் எல்லாம் சரிபண்ணிட்டு வீட்டுக்கு வரலாம்"என்று அழைத்தார். அதற்குள் டீயைக்குசித்திருந்த அவர் “ சரி டீ நல்லாருக்கு தேங்க்ஸ்”
என்று சொல்லிவிட்டு டவுன் சிப் சூப்பர்வைசரைப் பார்த்து ”வாங்கபோகலாம் ” என்றார்
அவரை தன் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று அமரவைத்துவிட்டு பழைய ஃபைல் களில் அந்த வீட்டில் யார் இருந்தார்கள் என்று தேடி கண்டுபிடித்துச்சொல்லுமாறு அலுவலகத்தில் உள்ளவர்களிடம் சொன்னார்.
இவருக்கு ஏதோபிரச்சனை இவர் சொல்லுவதைப்போல இவர் இங்கே வேலை செய்திருக்கலாம் அதன் பின் ஓய்வு பெற்று வெளியே சென்றிருக்கலாம். அதற்குப்பின் இவருக்கு ஏதோ நடந்திருக்கின்றது இவரின் பெயர் இவருக்குத்தெரியவில்லை. இவரைப்பற்றி இவருக்கே மறந்து போய்விட்டது எப்படியாவது இவர் யார் என்று அறிந்து இவரை அவரின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு செய்தார் அதற்குள் தன் நண்பர் டாக்டரை அழைத்து இவரை அவரிடம் காண்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து அவரை உடனடியாக போன் செய்து அழைத்தார்
கொஞ்சநேரத்தில் அவர் வந்துவிட அவரிடம் நடந்த விசயங்களைச் சொன்னார். அவர் அதையெல்லாம் கேட்டுவிட்டு ”இவருக்கு முதியோருக்கு வரும் ”டிமென்ஷியா” என்ற நோய் பாதித்திருப்பது போலத்தெரிகின்றது. அந்த நோய் பாதித்தால் முதலில் சமீபத்திய நிகழ்ச்சிகள் மறந்து போகும் பின் படிப்படியாக நினைவுகள் மறந்து ஒரு கட்டத்தில் தன்னைப்பற்றிய விசயங்கள் மறந்து போகும் ஆனால் பழைய நினைவுகள் மட்டும் கொஞ்சம் இருக்கும் . அதனால் தான் இவருக்குத்தான் இருந்த வீடு தான் வேலை செய்த இடம் நினைவிருக்கிறது மற்றதெல்லாம் மறந்து விட்டது என நினைக்கிறேன்” என்றார்
அதற்குள் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. அந்த வீட்டில் 15 வருடங்களுக்கு முன் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒருவர் இருந்திருக்கின்றார். அவர் ஓய்வு பெறும்போது அந்த வீட்டில்தான் இருந்திருக்கின்றார். அவர் பெயர் வெங்கடாச்சலம் . அவர் ஓய்வு பெற்று தன்னுடைய சொந்த ஊரான சேலத்துக்குச் சென்றுவிட்டார் அவரின் சேலம் அட்ரெஸும் காண்டாக்ட் நம்பரும் தருகிறேன் குறித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி அவர் சொல்ல அதைக் குறித்துக்கொண்டார் டவுன் சிப் சூப்பர்வைசர்,
அவர் குறிப்பிட்ட அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியபோது அவர்கள் சரியாகப் பதில் சொல்லவில்லை. அவர்கள் பேச்சு ஒரு மாதிரியாக இருந்தது
அப்போது டாக்டர் சொன்னார் 15 வருடத்துக்கு முன்பு வேலை பார்த்தவர் என்று சொல்கின்றீர்கள். என் எதிர்வீட்டில் உள்ளவரின் அப்பாவும் ஓய்வு பேற்று 14 வருடமாகின்றது அவருக்கு இவரைத் தெரிந்திருக்கலாம் அவர் இங்கு வேலைசெய்து ஓய்வு பெற்று பின் தன் மகனுடன் வசித்துவருகிறார். அவர் மகனும் இங்கு வேலை செய்வதால் அவர் மகன் வீட்டில் இருக்கிறார் இருங்கள் அவரை அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய் அவரை அழைத்து வந்தார்
வந்தவர் கிட்டத்தட்ட இவரின் வயதிருக்கும். அவர் இவரைப்பார்த்து ”நீங்க வெங்கடாச்சலம் தானே என்று கேட்க இவர் அவரைப்பார்த்து நீ கிருஸ்ணமூர்த்திதான ”என உற்சாகமாகக் கேட்டார்.
அவர் டவுன்சிப் சூப்பர்வைசரைப்பார்த்துச் சொன்னார் ”இவர் பெயர் வெங்கடாச்சலம். இங்க ஆபீசராக வேலை செய்தவர்தான் 15 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரே ஒரு மகன் அவனை நன்றாகப் படிக்க வைத்தார்.நல்ல வேலை நல்ல இடத்தில் கல்யாணம் செய்துவைத்தார். இவர் ஓய்வு பெற்றதும் இவரை அவன் சென்னையில் தன் வீட்டில் வைத்துக்கொள்ளவில்லை.ஓய்வு பெற்று இவர் சொந்த ஊரான சேலத்திற்குப் போய்விட்டார்
ஆனால் சேலம் போன இவருக்கு நேரம் சரியில்லை. இவரின் மனைவி இறந்துவிட்டார். இவரது மகன் இவரை பாடாப்படுத்தி இவரிடம் இருந்த காசு பணம் எல்லாம் பிடுங்கிவிட்டு வீட்டை விட்டு வெளியேற்றியதகத் தகவல். இவருக்குப் பென்சனும் கிடையாது. வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட இவரை இப்போதுதான் பார்க்கிறேன் ரொம்பப்பாவம் என்றார்
அதற்கு டவுன் சிப் சூப்பர்வைசர் சொன்னார் ”உரிய இடத்தில் பேசி இவரை அவருடைய மகன் கவனிக்க ஏற்பாடு செய்யவேண்டும் பாவம் இவர்” என்று சொன்னார்
அப்போது வெங்கடாச்சலம் கேட்டார் அது சரி யார் அந்த வெங்கடாச்சலம் ரொம்ப நேரமா அவரைப்பற்றிப் பேசுகின்றீர்களே என்றார்
அதைப்பார்த்து அவரின் நிலமையை நினத்துக் கண்கலங்கினார்கள் அனைவரும் இந்த நிலைமை எதிரிக்கும் வரக்கூடாது என்றார் அவர்
அ.முத்துவிஜயன்