கொலுசு (சுகுமார் கவி) - குட்டிக்கதை

kolusu-short-story
கொலுசு (சுகுமார் கவி) - குட்டிக்கதை

அருணின் அம்மாவும், அவன் மனைவி வீணாவும் கூடத்தில் பேசிக் கொண்டிருக்க வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்த அருண்,
“அம்மா, சிந்து எங்கம்மா?” என்றான்.

அதற்குள் இவன் குரலைக் கேட்ட சிந்து,  அவள் அறையில் இருந்து வெளியே வந்து, “சொல்லு அண்ணா” என்றாள்.
“சிந்து உனக்காக கொலுசு வாங்கி வந்திருக்கேன் சரியா இருக்கான்னு போட்டுப் பாரு”

“என்ன அண்ணா திடீர்னு வெள்ளிக் கொலுசெல்லாம்... இன்னைக்கு என் பிறந்தநாள் கூட இல்லையே”...
“பிறந்தநாள் வந்தால்தான் வாங்கித் தரணுமா … அண்ணனுக்கு தோணிச்சி வாங்கிட்டு வந்துட்டேன்”
“சரி சரி போட்டு பாரு” என்று சொல்ல,

சிந்துவும் கால் கொலுசை போட்டுப் பார்த்து, “சரியாய் இருக்கு அண்ணா” என்றாள்.
இதை பார்த்துக் கொண்டிருந்த வீணாவிற்கு வருத்தமானது. 'புதிதாய் திருமணமான தனக்கு எதுவும் வாங்கித் தராமல், தங்கைக்கு வாங்கி வந்திருக்கிறாரே'… என யோசித்தவள் சோகமாக அறைக்குள் சென்று விட்டாள்.
சிறிது நேரத்தில் அறைக்குள்ளே வந்த அருண், அவள் முகவாட்டத்துடன் இருப்பதைக் கண்டு, "என் செல்லக்குட்டி ஏன் சோகமாய் இருக்கு?" என்றான். அவன் கேள்விக்குப் பதில் ஏதும் சொல்லாமல் தலையைத் திருப்பிக் கொண்டாள் வீணா.

அவளின் கோபத்தை ரசித்துக் கொண்டே சொன்னான்,
“ஐயோ தப்பா நினைச்சிக்காதே வீணா, நான் ஏன் என் தங்கச்சிக்கு கொலுசு வாங்கிக் கொடுத்தேன் தெரியுமா?”

'ம்க்கும் இதுக்கு என்ன சாக்கு சொல்லப்  போகிறாய்?' என்பது போல் அவனை பார்க்க,
 “வீணா, நாம இப்பதான் புதுசா கல்யாணமான தம்பதிங்க.  அதனால நம்ம அறையில அப்படி இப்படித்தான் இருப்போம்... ஆனா சிந்து அதெல்லாம் புரிஞ்சிக்காம திடீர் திடீர்னு நம்ம அறைக்குள் வந்துடுறா.  அதனாலதான் அவளுக்கு கொலுசு வாங்கிக் கொடுத்தேன்”.

“யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல் இனிமேல் அவ வரும் முன் கொலுசு சத்தம் கேட்கும் இல்லையா” என்று சொல்லிக் கண் அடிக்க,

கோபம் தணிந்து புன்முறுவல் பூத்தவள், அவன் தோள் மேல் தன் கையிரண்டையும் போட்டுக் கொண்டு ,
“என் செல்லம் உங்களைப் போய் நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேனே” என்றவள் அப்படியே அவனை இழுத்து இதழோடு இதழ் சேர்க்க முயல அதே நேரம் வெளியே கொலுசு சத்தம் கேட்க, “சிந்து வர்றா” என உஷாராகி விலகினர் இருவரும்.

~மகிழா.