"பெரியவாளைக் காணவில்லை!" - மகா பெரியவா

kanchi-maha-guru-periyaval
"பெரியவாளைக் காணவில்லை!" - மகா பெரியவா

கோரப்பாயில் படுத்து, அந்தக் கோரப் பாயையே, தலைமேலே போர்த்திய மாதிரி சுருட்டிக் கொண்ட
பெரியவாளின் ஒரு லீலை.

ஸ்ரீ மடம் அல்லோலகல்லோலப்பட்டது ஒரு நாள்.
பெரியவாளைக் காணவில்லை !

மடத்தில் இத்தனை பேர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது எப்படி மாயமாக மறைந்தார்கள்? அணுக்கத் தொண்டர்களும்,பாராக்காரர்களும் என்னதான் செய்து  கொண்டிருந்தார்கள்? .
பெரிய மானேஜருக்கு மகாகோபம். பாராக்காரர்களைக் கடிந்து கொண்டார்.பெரியவா பக்கத்திலிருந்து சேவை செய்யும்  சிப்பந்திகளையும் கோபித்துக் கொண்டார்.

வழக்கம் போல் அன்றைய தினம் காலையில் பெரியவா கண்விழித்து, ஸ்நான ஜப தவங்களை முடித்து,ஸ்ரீ சந்த்ரமௌளீஸ்வரருக்குப் பூஜை செய்து ,பக்தர்களுக்குத் தீர்த்தப் பிரசாதம் கொடுத்து, மறுபடி ஸ்நானம் செய்து, அனுஷ்டானம் செய்து விட்டு,பிக்ஷைக்குச் சென்றார்கள்.அப்புறம் யார் கண்ணிலும் படவில்லை.

தகவல் அறிந்த பெரிய மானேஜருக்கு அசாத்ய கோபம்.

பெரியவாளுடன் எப்போதும் இரண்டு சிஷ்யர்கள் இருப்பார்கள்.அவர்களில் ஒருவருக்கு உடல் நலமில்லாததால் ஊருக்குப் போயிருந்தார். மற்றொருவர் வீட்டில் பிதுர்க்கடன் என்று சொல்லி ஊருக்குப் போயிருந்தார். புதிதாக வந்த ஒரு சிஷ்யர் தான்,பெரியவா பக்கத்தில் இருந்து கொண்டு கைங்கர்யம் செய்து வந்தார்.பெரியவாளிடம் அவருக்கு அதிகப் பழக்கமும் ஏற்படாத காலம்.

பெரியவா பிக்ஷைக்குப் போன சமயத்தில்,தூங்குவதற்குப்  போய்விட்டார் புதிய பணியாளர்
பெரியவா பிக்ஷை செய்து முடித்துக் கொண்டு தானாகவே ஓர் அறைக்குச் சென்று, ஓர் ஓரமாக இருந்த கோரப்பாயில் படுத்து, அந்தக் கோரப் பாயையே, தலைமேலே போர்த்திய மாதிரி சுருட்டிக் கொண்டார்கள்.

வெகு நேரமாகப் பெரியவா யார் கண்ணிலும் படாததால். பரபரப்பு உண்டாயிற்று. சிஷ்யரைக் கேட்டால், "நான் கொஞ்சம் தூங்கிப் போயிட்டேன்" என்றார்.

ஒரே கலவரம்.செய்தியை வெளியில் சொல்லவும் முடியவில்லை. தேடாமலும், கவலைப்படாமலும் இருக்க முடியவில்லை.

கோரப் பாயை சுருட்டி,அதற்குள் பெரியவா படுத்திருப்பார்கள் என்பதை யாரும் எண்ணிக் கூடப்   பார்க்கவில்லை.
சாயங்காலம் ஐந்தரை மணி.

பெரியவா அனுஷ்டானம் செய்வதற்காக எழுந்து வந்தார்கள்.ஸ்ரீ சந்த்ர மௌளீஸ்வரர் சந்நதிக்கு வந்து தரிசனம் செய்தார்கள்.

அப்போது தான் எல்லோருக்கும் உயிர் வந்தது என்று சொல்லலாம்.

இதனிடையில் தூங்கிப் போய்விட்டிருந்த சிஷ்யன்,கார்வார் கையால் நன்றாக அடி வாங்கினான்.
பெரியவா சௌக்கியமா இருக்கணும்.நூற்றெட்டு தேங்காய் உடைக்கிறேன் பிள்ளையாரப்பா" என்று ஒரு பாட்டி வேண்டிக் கொண்டாள்

"காமாக்ஷி! தாயே! பால் அபிஷேகம் பண்றேன்...பெரியவா வந்துடணும்" என்று ஒரு சுவாஸினி வேண்டிக் கொண்டார்

"பெருமாளே பெரியவாளை கண்டுபிடிச்சு அழைச்சுண்டு வந்து கொடு.அங்கப் பிரதட்சிணம் பண்றேன்" என்று இன்னொரு அம்மாள் வேண்டிக் கொண்டாள்.

பெரிய மானேஜருக்குப் பெரியவாளைப் பார்த்த பிறகுதான் உயிர் வந்தது.
பெரியவாளிடம் விஷயத்தைத் தெரிவித்தார் மானேஜர்."ஏல்லோரும் ரொம்ப ஆடிப் போயிட்டோம்.....தலைக்குதலை வேண்டுதல் வேறே..."

"எனக்காக இவ்வளவு பேர் ஈசுவரனை வேண்டிக் கொண்டீர்களா? எல்லோரும் பிரார்த்தனையை (வேண்டிக்கொண்டதை) நிறைவேற்றணும்...நான் நூறு வருஷம் இருப்பேன்!.. கவலைப்படவேண்டாம்" என்றார்கள் பெரியவா.

பின்னர் அடி வாங்கிய புது சிஷ்யனைக் கூப்பிட்டு, பகலில் தூங்கக் கூடாது என்பதற்கான அடி இது" என்று சமாதனப்படுத்தி,அவனுக்கு பல கதைகள் சொல்லி சாந்தப்படுத்தினாஎகள்.

இப்படியும் ஒரு லீலை!

கட்டுரையாளர்-ஸ்ரீ மடம் பாலு
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.