தானம் - சிறுகதை
சகுந்தலாப்பாட்டிக்கி பசி வயத்த கிள்ளுச்சு. கையில கெடைக்கிறது முருங்கக்கா கீரை வீட்டுக்கு முன்னாடி போட்டுருக்குற கத்தரி சுண்டக்கா இதுமாதிரி என்னத்தையாவது கொண்டுபோய் பக்கத்துல இருக்குற சின்ன நகரத்துல பிளாட்பாரத்துல கடைமாதிரி போட்டு விக்கும். அதுல வார காசவைச்சித்தான் பொழப்பு. வீட்டுல புருசன் கைகால் வெளங்காம இருக்குறதுனால சம்பாரிக்கவேண்டிய கட்டாயம் ஆயிப்போச்சு.
கடைசியா நேத்துக்காலையில கஞ்சி குடிச்ச நாவகம். மீதி வேளைக்கி நீச்சத்தண்ணிய வைச்சிப்பொழப்பு ஓட்டியாச்சு. இன்னிக்கிப்பொழப்புக்கு என்னா பண்ணுறதுன்னு தெரியல
சுத்திமுத்திக்கெடந்த காயெல்லாம் வித்தாச்சு. விக்கவேற ஒண்ணும் கெடைக்கல. கையேந்துர பழக்கமும் கெடையாது. தன்மானம் உள்ள மனுசி
கைகாலு நல்லாருக்கவரைக்கும் ஒழைச்சித்தான் சாப்புடனும் கையேந்துர நெலமைவந்தா உசுறு வாழுறதுல புரயோசமில்லன்னு வைராக்கியம்
இன்னிக்கி பகவான் சோதிச்சிப்புட்டாரு , சரி போய்ப்பாப்பம்ன்னு கெளம்புச்சு
போறவழிலதான்கெங்கம்மா வீடு அங்கபோனா எதுனாச்சும் வழிபொறக்கும் கெங்கம்மா மீனவருகுடும்பம். அங்க போச்சு பாட்டி கெங்கம்மா பாத்துட்டு என்னா விசயம்ன்னு கேட்டுச்சு. இதப்பாத்தவன்ன புரிஞ்சிபோச்சு இந்தா கருவாடு இருக்கு எடுத்துட்டுப்போன்னு சொல்லிச்சி. அதுக்கு பாட்டி எம்புட்டுன்னு சொல்லு. வித்துட்டுக்கொண்டாந்து தாறேன்னு சொல்லிச்சு
பாட்டியப்பத்தி கெங்கம்மாவுக்குத் தெரிமுல்ல அதுனால ஒப்புக்கு 30 ரூவான்னு சொல்லிச்சி அது எப்புடியும் 100 ரூவாக்கி விக்கலாம்.
பாட்டிசரின்னு வாங்கிட்டுக்கெளம்புச்சு
கூடையில எடுத்துக்கிட்டு பக்கத்து ஊருல பிளாட்பாரத்துல கடைபோட்டுச்சு
அன்னிக்கிப்பாத்து யாரும் கருவாடத்தேடல
அப்பத்தான் ரெண்டுபேரு பேசிக்கிட்டுப்போனாக இன்னிக்கி வருசப்பொறப்புன்னு . பாட்டி மர மண்டையில அப்பத்தான் ஒறைச்சது இன்னிக்கி வெலப்போகாது கருவாடுன்னு
சரி பொறுத்துப்பாப்போம்ன்னு ஒக்காந்துருந்துச்சு. அப்ப ஒரு பூனையும் வந்து கருவாட்ட தூக்க பாத்துட்டு இருந்துச்சு. பாட்டி கம்பு ஒண்ணஎடுத்து வைச்சிக்கிட்டு பூனை காக்காய வெரட்டிக்கிட்டு இருந்துச்சு. உச்சிவெயிலாகிப்போச்சு. ஆரும் தேடுறதா இல்ல. பசில கண்ணு கொஞ்சமா இருட்டுச்சு அப்புடியே மயங்கிடுச்சு
முழிச்சிப்பாத்தா ஒருத்தரு பக்கத்துல நின்னுட்டு இருந்தாரு. பாத்தாலே தெரிஞ்சது சுத்தபத்தமான ஆளுன்னு
அவருதான் மூஞ்சில தண்ணிய அடிச்சிருப்பாரு போல மூஞ்சியெல்லாம் நனைஞ்சிருந்துச்சு.
அவரு பாட்டிம்மா என்னா மயங்கிட்டீங்க பசிமயக்கமான்னு கேட்டாரு. பாட்டி கண்ணுல தண்ணிவந்துருச்சு. புரிஞ்சிகிட்டு அவரு பர்ஸ எடுத்து அதுல இருந்து 100 ரூ கொடுத்தாரு இந்தாப்பாட்டி வைச்சிக்கோங்கன்னு.
பாட்டி முகம்மாறிப்போச்சு. இந்த கருவாட வாங்கிக்கோங்கன்னு சொல்லிச்சி
அவரு நாங்க சாப்புடமாட்டோம்மா. பரவாயில்ல காசவெச்சிக்கோங்க எதுவும் குடுக்கவேணாமுன்னு சொன்னாரு
பாட்டி சொல்லிச்சி அது பிச்சைமாதிரி ஆயிடும் எனக்குப்புடிக்காது. கருவாட எடுத்துக்கிட்டா காசுவாங்குவேன் இல்லாட்டினா வாங்கமாட்டேன்னு தீர்மானாமா ச்சொல்லிடுச்சு பாட்டி
அவருக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல அவருக்குகருவாடப் பாத்தவன்ன வயத்த பொறட்டுச்சு.
அவரு ஒரு முடிவுக்கு வந்தாரு. பக்கத்துல இருக்குற பூனை கத்திட்டு இருந்துச்சு அதுக்கும் பசிபோல .
சரிபாட்டி 100 ரூவாக்கி கருவாட வாங்கிக்கிறேன்னுசொன்னாரு கருவாட எடுத்து பேப்பருல சுத்த தொடங்குச்சு
அப்ப அவருசொன்னாரு பசியா நின்னுக்கிட்டு இருக்குற பூனைக்கும் காக்ககாவுக்கும் குடுத்துறு, நான் சாப்பிட்ட மாதிரி நெனைச்சிக்கிறேன்னாரு
அது நல்ல யோசனையாப்பட்டது சரின்னு சொல்லிச்சி. பூனையும்காக்காயும் பாட்டிபோட்ட கருவாட சந்தோடமா சாப்புட்ட்டுச்சுக பூனை பாட்டிய ஒரசிவந்துச்சு. காக்கா சந்தோசமா சாப்புட்டுச்சு. காக்கா சாப்புடும்போது அவருக்கு அவரோட வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்றஅம்மா நெனப்பு வந்துச்சு.....
பாட்டிக்கு வரமுடியாம வீட்டுல இருக்குற புருசன் நெனப்பு வந்து கண்ணு கலங்குச்சு
நன்றி: கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்