நம்ம மடத்திலே தங்கச் சொல்லி பாடம் சொல்லிக் கொடுக்கச் சொல்லு - பெரியவா

kanchi-matam-maya-periyava
நம்ம மடத்திலே தங்கச் சொல்லி பாடம் சொல்லிக் கொடுக்கச் சொல்லு - பெரியவா

தஞ்சாவூர் சந்தானராமன் தமக்கு ஏற்பட்ட ஒரு வேடிக்கையான பெரியவா அனுபவத்தைக் கூறுகின்றார்.

ஒரு முறை தஞ்சாவூர் சந்தானராமன் பெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றார். அவருடன் தஞ்சாவூர் சரவணபவன் ஹோட்டல் அதிபர் வெங்கடாசலமய்யரும் வந்திருந்தார். பெரியவாளை சிவாஸ்தானத்தில் தரிசித்தபோது, "வடக்கு வீதி சங்கர மடத்தில் இப்போ வேதாந்த பாடம், சாஸ்திரம் இதெல்லாம் யாராவது சொல்லிக் கொடுக்கிறாளா? மெலட்டூர் சாஸ்திரிகள்தான் இப்போ இல்லே போலிருக்கே" என்று கேட்டார் பெரியவா.

"மெலட்டூர் சாஸ்திரிகள் காலமான பின்னர் வேறு யாரும் அங்கில்லை" என்றார் சந்தானராமன்.

"யாராவது சாஸ்திரம் படிச்சவாளா அங்கே போட்டாத் தேவலை. ஒருத்தர் தவேயோ என்னவோ இருந்தாரே... அவர் என்ன பண்றார்?" என்றார் பெரியவா.

"அவர் திருக்கோயிலூர் போய்விட்டார். சந்யாச ஆஸ்ரமம் வாங்கிக் கொண்டதாக கேள்விப்பட்டேன்" என்றார் சந்தானராமன்.

உடனே சட்டென்று பெரியவா எனும் ஞானி "ஆசிரமும் இல்லே ஒண்ணும் இல்லை. அவரைக் கூட்டிண்டு வந்து நான் சொன்னேன்னு சொல்லி நம்ம மடத்திலே தங்கச் சொல்லி பாடம் சொல்லிக் கொடுக்கச் சொல்லு" என்று பெரியவா கூற, இவருக்குப் பெரிய சந்தேகம். தாம் தவே என்பவரைப் பற்றி சந்யாசம் வாங்கிக் கொண்டதாக கேள்விப்பட்டதை பெரியவா எப்படி இல்லை என்கிறார் என்பதே இவர் சந்தேகத்தின் காரணம். அதை பெரியவா சட்டென மறுத்ததில் அது உண்மையல்ல என்பதும் புரிந்தது. ஆனால் அதற்கான சாட்சி வேண்டுமல்லவா?

சந்தானராமனே சாட்சியோடு வந்திருப்பது அவருக்கே தெரியவில்லை. இவர் கூட வந்திருந்த சரவணபவன் அதிபர் வெங்கடாசலமய்யர் தான் அந்த சாட்சி!

"பெரியவா யாரைச் சொல்றா?" என்று வெங்கடாசலமய்யர் குறுக்கிட்டுக் கேட்டுவிட்டு "ஓகோ அவரா? எனக்கு நன்னாத் தெரியும். எங்க கடை காபின்னா அவருக்கு உசுரு. கார்த்தாலே கடையை திறக்கறதுக்கு முன்னாடியே காத்திருந்து ஐந்து மணிக்கு காபி சாப்பிட்டுட்டுத்தான் போவார்" என்றார்.

சந்யாசம் வாங்கிக் கொண்டார் என்று கேள்விப்பட்டவருக்கு இப்படி ஒரு காபி பைத்தியம் இருப்பதாக தெரிய சந்தானராமனுக்கு லேசாகச் சிரிப்பு வந்தது.

பெரியவா இதைக் கேட்டுவிட்டு "அப்போ இவரை உன்கூட அழைச்சுண்டு போ... இவரைப் பார்த்தா தவே உன்னோடு வந்திடுவார். ரொம்ப சுலபமாப் போச்சு" என்று பெரியவா வேடிக்கையாகச் சொன்னபோது அங்கே கூடியிருந்த அனைத்து பக்தர்களிடையே சிரிப்பலை எழுந்தது.