தொலைந்துபோன சந்தோஷங்கள்!

happiness-loses
தொலைந்துபோன சந்தோஷங்கள்!

*கடைக்கு வந்து சாமான் வாங்கும் குழந்தைகள் கையில் பொட்டுக்கடலை சர்க்கரையோ, ஆரஞ்சு முட்டாயோ தரும் கடைக்காரர்கள்!

*அதிகாலையில ‘உப்ப்ப்பேய்ய்ய்’ என்று கூவிக் கொண்டு தெருவில் வரும் உப்பு வண்டிகள்!

*பசுமை மாறாத கீரைகளைக் கூடையில் சுமந்து வந்து சில்லரைக் காசில்லாத பெண்களிடம் ஆழாக்கு அரிசியை வாங்கிக்கொண்டு பண்டமாற்று முறையில் கீரை கொடுத்தவர்கள்!

*அம்மிக்கல்லு கொத்தலியோ? ஆட்டாங்கல்லு கொத்தலியோ? என்றுக் கூவிக் கொண்டு (முந்தானைத் தொட்டிலில் பால்குடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளோட) வீதியில் வரும் பெண்கள்!

*மூங்கிலின் உச்சியில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடும் பொம்மையுடன் தெருவில் வரும் பம்பாய் மிட்டாய்! ஒரு கடிகாரம் வாங்கினால் கொசுறாக ஒரு துண்டு மிட்டாய் கன்னத்தில் ஒட்டப்படும். ஆண் பிள்ளைகளுக்கு மீசை...

* பசித்தால் யார்வீட்டில் வேண்டுமானாலும் சாப்பிடும் கள்ளமில்லாக் குழந்தைகள்!

*எல்லாப் பட்டுப்புடவைக்கும் வெள்ளை ஜாக்கெட்டோடு திருப்தியடைந்த பெண்கள்( இப்போது ஜன்னல், கதவு, கண்ணாடி முத்தெல்லாம் வைத்து தையல் கூலியே10000)

*விசேஷம் என்றால் இரண்டு நாட்கள் முன்னதாகவே வரும் உறவுக்காரர்கள்! (வருகின்ற பெண்கள் தூக்கி சொருகிக் கொண்டு சமைத்த அழகு)

*பண்டிகைக் காலங்களில் உரிமையோட முருக்குப்பிடி, ஜல்லிக் கரண்டி ஓடி வாங்க வரும் வாண்டுகள்!
*வயதானவர்களோ, கைக்குழந்தையோடு வரும் பிச்சைக்கார்ரகளுக்கு வாசலில் உட்கார வைத்து சோறுபோட்ட தாய்மார்கள்!

*கல்யாண வீட்டில் பந்தல் போடுவதில் தொடங்கி 500 பேருக்குப் பரிமாறி (சரக்கு அடிக்காமல்) கடைசியாக மண்டபம் காலி செய்யும் வரையில் உடனிருந்து வேலை செய்யும் நண்பர்களும் உறவுகளும்!

*வீடு மாற்ற வேண்டுமானால் வாடகை வண்டி மட்டுமே! சாமான் ஏற்றி இறக்கும் அத்தனை வேலைகளையும குதூகலமாகச் செய்த நண்பர்கள்!

*புதுப்படம் ரிலீசானால் சைக்கிள் டிக்கட் நிச்சயம் கிடைக்கும் என்பதற்காகவே இரவு முழுவதும் சைக்கிளோட வரிசையில் நின்ற இளைஞர்கள்!

* தெருவுல வரும் தோளில் கம்பளமும், உருமாலையும் கட்டி வரும் வளையல் காரர்களிடம் கை நிறைய கண்ணாடி வளையல்கள் வாங்கிப் போட்டுக் கொண்டு காசு கொடுக்கையில் ‘மலாரத்திற்கு’ குங்குமம் வைத்து தொட்டுக் கும்பிட்ட பெண்கள்!

* அந்த 3 நாட்களில் உலக்கையை குறுக்கே போட்டு அதற்கு உள்ளே உட்கார்ந்து கொண்டு பிள்ளைகளோட தாயம் விளையாண்ட கன்னியர்!

* விடுமுறை நாட்களில் குழந்தைகளெல்லாம் சேர்ந்து ‘மரப்பாச்சி பொம்மைகளுக்குக் கல்யாணம்!’ பண்ணிவெச்சு கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிட்ட விருந்து!

*மோட்டார் போடாமல் கிணற்றில். தண்ணீர் சேந்தி குடத்தில் சுமந்து வந்து அண்டாவில் கொட்டின உடல் உழைப்பு!

*திருவிழாவென்றால் எல்லா ஆண்களும் வட்டமாக கைகோர்த்து நடுவில். பெண்களையும் குழந்தைகளையும் நடக்கவிட்டு பத்திரமாக அழைத்துச் சென்ற பாங்கு!

*திறந்த வெளியில் கோவணம் கட்டிக் கொண்டு குளித்த கணவனுக்கு முதுகு தேய்த்துவிட்ட மனைவிகள் !

*மதிய வேளைகளில் பக்கத்துவூட்டு அக்காவுக்கு தலையில் பேன் பார்த்தபடி கதை பேசி இறைப்பாறிய சகோதரிகள்!

*பள்ளி விடுமுறை விட்டால் ஒரு வாரம் பத்து நாட்கள் என்று அத்தை மாமா வீட்டுக்கு போய் உரிமையோடு தங்கி விளையாடி கிடைத்ததை உண்டு பாயில் உருண்டு கதைபேசி களித்த நாட்கள்!

*இழவு வீட்டில் பத்து நாட்களுக்கு அடுப்புப் பற்ற வைக்க அனுமதிக்காமல் முறைபோட்டுக்கொண்டு வேளைக்கொரு வீட்டில் சமைத்துக் கொண்டுவந்து வீட்டில் பரிமாறின நட்பும் உறவும்!

இப்படி இன்னும் இன்னும்…!

நெஞ்சைவிட்டு நீங்காமல் பசுமை மாறாத நினைவுகள் ...