புள்ளிக் கோலங்களின் புனிதம்!
கோயில்களில் அரிசி மாவினால் கோலம் போடுவது ஒரு சிறந்த திருப்பணியாகும். இதைச் செய்ய வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை ஆகும். இதனால் பல நன்மைகள் கோலம் போடுவோருக்கு மட்டுமல்லாது, சமுதாயத்துக்கும், பிற ஜீவன்களுக்கும் விளைகின்றன.
எந்த இல்லத்தின் முன்னும் புள்ளி மாக்கோலங்கள் இருந்தால் அவ்விடத்தில் தீயசக்திகள் அண்ட இயலாது. இவ்வகையில் கோலங்கள் வீட்டை காக்கும் ரட்சைகளும் ஆகும்.
புள்ளி கோலங்களை நானிலத்து நட்சத்திரப் பூக்கள் என்று போற்றுகின்றனர். கோயிலில் இடும் கோலங்கள், நம்முடைய வாழ்நாளில் ஏற்படும் பல சிக்கல்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றன.
கோலங்கள் எல்லாம் பீஜாட்சர சக்திகள், பித்ரு லோக தேவதைகள் வந்தமரும் சக்கரங்கள், யந்திரங்கள் ஆகும். ஓரிடத்தில் கோலம் போட்டவுட னேயே அதனுடைய யோக யந்திரச் சக்கரக் கோணத்தால் அந்த இடமே பரிசுத்தம் ஆகி விடுகின்றது. இது அதிஉத்தம சமுதாய சேவை அல்லவா.
வீட்டில் கோலம் போட்டாலும் அப்பகுதியைச் சுத்திகரிக்க வல்லதாகும். ஆலயத்தில் புள்ளிக் கோலம் இட்டாலோ ஊரையே, பரவெளியையே சுத்திகரிக்கும். கோலத்தினுள் இருக்கும் புள்ளிகள் கூட கூட கோலத்திற்கான அருளும் சக்திகள் மிகும்.
கோலத்திலும் புனிதமான பூக்களின் பங்கு உண்டு. பல கோலங்களும் பூக்களின் அமைப்பைக் கொண்டிருக்கும்.
துர்க்கா, லக்ஷ்மீ, சரஸ்வதி மூன்று தேவியரும் மேரு மலையில் இட்ட பூக்கோலங்களைப் பார்த்துத்தான் சிருஷ்டியின் போது பிரம்ம மூர்த்தி ஜீவன்களின் வடிவங்களை ஆக்கினார்.
மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில், தெருவில், கோயிலில் கோலம் இட்டு நடுவில் பசுஞ் சாணி உருண்டை மேல் பறங்கி பூவை வைப்பார்கள். பசுஞ் சாண உருண்டை என்பது கோலோகம். கோலம் என்பது பிரபஞ்சத்தைக் குறிக்கும். பறங்கியின் மஞ்சள் நிறம் ஸ்ரீசுபஸ்ரீ எனும் மங்கள தேவதா மூர்த்தியை குறிக்கும். இந்த வடிவமே சுபமங்கள லோகத்தின் வடிவம் என்பதால் எங்கெல்லாம் இவ்வாறு பறங்கி பூ வைத்த கோலம் தென்படுகின்றதோ, அங்கு மங்கள தேவதைகள் உடனேயே பிரசன்னமாகி, இவ்வாறு வரைந்து வைத்தோருக்கு நல்வரங்களை வார்த்து செல்வர்.