ரொமான்ஸ் செய்வதில் ஆண்கள் கத்துக்குட்டியா?

romance-health-tips
ரொமான்ஸ் செய்வதில் ஆண்கள் கத்துக்குட்டியா?

ரொமான்ஸ் செய்வதென்பதில் எத்தனை வயதானாலும் ஆண்கள் கத்துக்குட்டி தான். பெண்கள் தான் அதற்கு ஆசிரியர்கள். ஆண்கள் பில்டப் கொடுத்துக் கொள்வோம். ஆனால் அவர்களோ அடக்கமாக.. வெளியில் தெரியாமல் இருந்து கொள்வார்கள். சத்தியமா நான் சொல்றது உண்மை. என்னை நம்புங்க.

ஆண்கள் ரொமான்ஸ் செய்யும்போது அது வெளியில் காட்டிக் கொள்வார்கள். பெண்கள் ரொமான்ஸ் செய்யும் போது அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். மாறாக தான் செய்த ரொமான்ஸை அடிக்கடி தனக்கு தானே தனிமையில் நினைத்து சிரித்து.. அதாவது ஆனந்தித்து கொள்வார்கள்.

சமையல் செய்த குழம்பை ருசி பார்க்கும் போது அவர்களுக்கு (வயதானாலும் கூட) கணவன் ஞாபகம் தான் வரும்.

கணவனுடைய துவைத்த ஆடைகளை மடித்து வைக்கும் போது.. சின்ன பரவசம்.. சின்னதாக ஒரு ஆனந்தம்.. அவர்களுக்கு வரத்தான் செய்யும்.

கணவன் வேலைக்கு செல்லும் போது அவன் முகத்தை ஒரு முறை பார்ப்பதற்காகவே.. வரும்போது ஏதாவது வாங்கி வர சொல்வது போல..ஏங்க..? என்னங்க..? என்று அழைப்பதில் அதில் ஒரு குதூகலம் இருக்கத்தான் செய்யும்.

மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வரப் போகின்ற கணவனுக்கு காபி ஆற்றி கொடுப்பதற்காக.. பால் சட்டியை எட்டிப் பார்த்தால் அதில் ஒரு டம்ளர் அளவு தான் பால் இருக்கும். இது அவருக்கு வேண்டும் என நினைத்துக் கொண்டு.‌. சொம்பில் தண்ணீர் மொண்டு குடித்துவிட்டு மனதை தேற்றிக் கொள்வதில்.. ஒருவித திருப்தி சந்தோசம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.

இரவில் தூக்கத்தின் நடுவில் எழுந்திருக்கும் போது.. கணவன் உடம்பில் கைகளை ஊன்றி எழுவதில் கூட அவர்களுக்கு ஒரு சுகம் இருக்கத்தான் செய்யும்.

தினசரி- கணவன்; டிவி பார்க்கும் போதும், கண்ணாடியில் தனது முகத்தை பார்க்கும் போதும் அவர் எண்ண ஓட்டங்களை ஆராய்வதில் ஒரு கிளுகிளுப்பு இருக்கத்தான் செய்யும்.
மக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களில் கணவனோடு நடந்து செல்ல நேர்ந்தால்.. அல்லது இரண்டு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது என்றால்.. சின்ன தொடுதல், சின்ன உரசுதல் என்பதெல்லாம் இருக்கத்தான் செய்யும்.

பிள்ளைகள் வீட்டில் சேட்டை செய்யும் போது கூட.. இருடா உங்க அப்பா வரட்டும் சொல்றேன்.. என்பதில் கூட.. நமக்கு மேல ஒருத்தன் இருக்கான் என்று ஆண்கள் ஆண்டவனை நினைத்துக் கொண்டிருந்தால்.. அந்த ஆண்டவனே எனக்கு கணவன் தான் டா என்பது போன்ற நினைப்பும் இருக்கதான் செய்யும்.

பொதுவாக ஆண்கள் பெண்களைப் பார்க்கும்போது மட்டும் தான் ரொமான்ஸ் செய்வார்கள் என்றால்.. பெண்களோ தன் கணவனை நினைக்கும் போதெல்லாம் தங்களுடைய மனசுக்குள்ளேயே.. தனக்குள்ளேயே.. நினைத்துப் பார்ப்பதிலேயே.. தனக்கு மட்டுமே தெரியும் படி ரொமான்ஸ் செய்து கொள்ளத்தான் செய்கிறார்கள்.

இயற்கையின் விதிப்படி.. ஆண்களின் காதலும் ரொமான்ஸ்ம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மட்டும்தான் என்றால்.. பெண்களுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் கடந்தும் நிறையவே இருக்கும்.
இதனால்தான் மனைவியை இழந்த பிறகு கணவனின் கண்ணுக்கு வெறுமை அதிகமாக தெரிகிறது. பெண்களுக்கு அவ்வளவாக தெரிவதில்லை.