மெட்ரோ எனும் வானவில் - சிறுகதை
அவனுக்குப்பத்து வயசு இருக்கும். ஆகாய விமானம் போல விளக்குகள்மின்ன வானவில்லைப் போல் வண்ணமயகாக உயரத்தில் ஊர்ந்துவரும் மெட்ரோவில் ஏறிப்பாக்கனும்பான்னு அவனோட அப்பாகிட்ட்ச்சொன்னான். அப்ப அவர் சொன்னார் அது வெலைஜாஸ்திடா. ஒரு ஆளுக்கும் 50 ரூ வாயோ அதிகமாவோ ஆகும் நம்ம லோக்கல் டிரெயின்ன்னா அஞ்சு பத்துல போயிடலாம்... ரெண்டு பேரு போனா 100 ஆகுமேடான்னு சொன்னார்..
எம்புட்டோ செலவு பண்ணுறோம் ஒரே ஒரு தடவ என்னயக்கூப்புட்டுப்போய் ஏத்திக்காமிப்பா.. ரொம்ப ஆசையா இருக்கு நம்மலால ஏரோப்பிளேன்ல போகமுடியாது அம்புட்டு வசதியில்ல. இது 100 ரூவா தான ப்ளீஸ்ப்பான்னு கெஞ்சினான்.
அப்ப அவர்சொன்னார் ஒங்க அண்ணன் கிட்டயும் அம்மாகிட்டயும் சொல்லாத நாம போற விசயத்தை அப்புறம் அவங்களும் வறேன்னு அடம்பிடிப்பாங்க. செலவு எங்கயோ போயிடும் நாளைக்கி இஸ்கூல் விட்டவன்ன இஸ்கூலாண்ட நில்லு நான் கூப்புட்டுப் போறேன்னு சொன்னார்.
அதுக்கு அவன் சொன்னான் ஐய்யே யூனிபார்ம் அப்புறம் பொஸ்த்தகப்பையோடயா போவானுக ஊட்டுக்கு வந்து நல்லா கலர் டிரெஸ் போட்டுக்குகினு ஸ்கூலிங்க் கிளாஸ் மாட்டிக்கினு சும்மா ரஜினி மாதிரி போனும்பா னு ஆசையச்சொன்னான்.
சரி ஒன்னோட ஆசைய இன்னாத்துக்கு கெடுப்பானே ஆனா நா வூட்டுக்குள்ள வரமாட்டேன் தாம்பரம் இஸ்டேசன் வாசலாண்ட நிக்கிறேன் நீ ஸ்கூல்ல இருந்து வூட்டுக்குப்போய்ட்டு டிரெஸ் மாத்தினு வான்னாரு
அதுக்கு அவன் சொன்னான். அப்பா இன்னாத்துக்கு அம்புட்டு வேலை டிரஸெ நான் காலையில எடுத்துட்டு வந்து என் பிரண்டு வூடு ஸ்கூலாண்டதான். அங்க குடுத்து வைச்சிருறேன் அப்பாலேக்கி இஸ்கூல் முடிஞ்சதும் அங்க போய் டிரஸ் மாத்திக்கினு பேக்க அங்கயே வைச்சிட்டு வற்றேன். திரும்ப வந்து எடுத்துக்கலாம்ன்னான்....சரின்னார்
அன்னிக்கி சாயங்காலம் அதேமாதிரி அவனோட அப்பா தாம்பரம் ஸ்டேசன்ல வெயிட் பண்ண அவன் பேண்ட் சர்ட் போட்டு கூலிங்கிளாஸோட வந்து நின்னான். அப்ப அவர் கேட்டாரு இது இன்னாடா கூலிங்கிளாஸ் நு அதுக்கு அவன் சொன்னான் ஆயா கண்ணுக்கு ஆப்பிரேசன் பண்ணப்பக் குட்தாங்கள்ள அத்தத்தான் போட்டுக்கீறேன். எப்டிக்கீது சோக்காக்கீதான்னான்..
நல்லாக்கீது சரி வா இங்கருந்து லோக்கல்ல எக்மோர் போய்டுவோம். அப்புறம் அங்க எறங்கி பீச்சாங்கையாண்ட போனா மெட்ரோ கீது அதுல ஆலந்தூர் வந்து திரும்ப லோக்கல்ல தாம்பரம் வற்லாம்னு சொன்னார்.
அவன் ஒரே பரபரப்பா இருந்தான். போகும் போதே கிண்டில பக்கத்துல மேல மெட்ரோ பறந்துபோக ப்பா அங்கபாருப்பா சோக்கா கீது இன்னாமோ மரவட்டைப்பூச்சிக்கு லைட் போட்ட மாதிரி சோக்காக்கீதுப்பான்னான்
ஒரு வழியா எக்மோர் போய் எறங்கி பக்கத்துல மெட்ரோ ஸ்டேசனனுக்குள்ள எறங்கி வந்தாங்க எறங்கும் போதே எஸ்கலேட்டர்ல ஜாலியா எறங்குனான். டிக்கெட் எடுக்கப்போகும் போது அங்க இருந்தவங்க மாஸ் எங்கன்னு கேக்க ரெண்டு பேரும் முளிச்சாங்க. ஒடனே நீ இங்க இரு நான் போய் மாஸ்க் வாங்கியாறேன்னு சொன்னார்.. இவன் அங்க வெளிய வந்து காத்திருந்தான்.. அவர் வெளியே போய் மாஸ்க் வாங்கிட்டு வந்தார்..
இப்ப கவுண்டர்ல டிக்கெட் எடுத்தார் ஆலந்தூர் ரெண்டு டிக்கெட். அப்புறமா செக்கிங்க. பை எதுவும் கையில இல்ல. அதுனால நேர அந்த மெட்டல் டிடெக்ட்டர் செக்பண்ணிட்டு பிளாட்பாரத்துக்கு வந்தாங்க அங்க எதிரே விமான நிலையத்துல இருந்து சென்ட்ரல் போகிற வண்டி இன்னும் 5 நிமிடங்கள்னு காமிச்சிச்சி
இந்தப்பக்கம் சென்ட்ரல்ல இருந்து விமான நிலையம் போற வண்டி 3 நிமிசம் நு காமிச்சிச்சி. எதுத்தாப்புல படம் போட்டு அதுல CMBT க்கி கீழேபச்சை லைட் எறிஞ்சது அப்ப அவர் பக்கத்துல இருந்தவர்கிட்டக்கேட்டார். அதுவரைக்கும்தான் வண்டி போகுமான்னு அதுக்கு அவர் சொன்னார் இல்ல ஏர்போர்ட் வரை போகுன்னு... அப்ப அவர் கிட்ட கேட்டார் டிரெயின் எங்க வரும்னு அதுக்கு அவர் சொன்னார் இந்த கண்ணாடி டோர் இருக்கே அதுக்குள்ள வரும் வந்ததும் கண்ணாடி டோர் திறக்கும் நீங்க ஏறிக்கலாம்னு சொன்னார்
அதுக்குள்ள பையன் அப்ப ஜில்லுன்னு கீதுப்பா இஸ்டேசன் எல்லாம் ஏ சி பண்ணீருக்காங்கபோலன்னு கன்னத்துல கைவைச்சி சொன்னான்... அதுக்குள்ள கண்ணாடி கதவுக்குள்ள லைட் எரிய டிரெயின் வந்து நின்னு கதவு திறந்தது. ரெண்டுபேரும் உள்ளாற ஏறிக்கிட்டாங்க. கொஞ்சநேரத்துல கதவு மூடி டிரெயின் கெளம்புச்சு..அவன் அப்பா டிரெயின் போகுதுப்பான்னு சத்தமா சொன்னான்... அதுக்கு அவர் கம்ம்னு கெட சத்தம்போடாத எறக்கி விட்டுருவாங்கன்னார்
அப்பா உள்ள வழு வழுன்னு எல்லாமே மின்னுதுப்பா. அயகா கீதுப்பான்னான். எல்லோரும் அவனை ஒரு மாதிரி பார்த்தார்கள். கொஞ்ச நேரத்துல டிரெயின் திருமங்கலம் தாண்டி மேல ஏறுச்சு... நல்ல ஒசரத்துல டிரெயின் போக கீழ வீடுக கார்கள் எல்லாம் தெரிஞ்சது...
அவன் திரும்ப கத்துனான் ப்பா ஏரோப் பிளான்ல போறமாதிரி இருக்குப் பான்னான் அடுத்து சி எம் பி டி தாண்டி விருகம்பாக்கம் வடபழனி கே.கே நகர்னு வர கீழ வாகனங்கள் வண்ணமயமாக ஊர்ந்துவர அவன் சொன்னான் மேல இருந்து பாத்தா கீழயும் நல்லாத்தான் இருக்குன்னு... அப்படியே கத்திப்பார மேல் செல்லும்போது ப்பா இந்தப்பாலம் அப்புடியே பட்டர்பிளை மாதிரி அழகா இருக்குப்பான்னான்.... அந்த வண்ணத்துப்பூச்சியில் வாகனங்கள் வண்ணமயமாக ஊர்ந்தன...
ஆலந்தூர் வர அப்பா ஆலந்தூர் வந்துருச்சு எறங்கனும்ன்னான். வண்டி நின்றது இருவரும் வண்டிய விட்டு வெளியே வந்து பார்க்க மழை பிரட்டி எடுத்துக்கொண்டிருந்தது.. திடீருன்னு அவன் கேட்டான் ப்பா நம்ம வந்து டிரெயின் அண்டர் கிரவுண்டுலதான எக்மோர்ல வந்துச்சு மழைபேஞ்சு தண்ணி உள்ளாற வந்தா என்னாகும்னு கேட்டான். அதுக்கு அவர் சொன்னாரு அத்தெல்லாம் பாக்காமயா கட்டீருப்பானுக. வராதமாதிரி ஏதாவது பண்ணீருப்பாங்கன்னார்...
அப்படியே கீழ இறங்கி லோக்கல் டிரெயின் நிக்கிற எடத்துக்கு வந்து தாம்பரம் போற டிரெயின்ல ஏறினாங்க. வழக்கம்போல கூட்டம் அதுல கண்ணுதெரியாதவங்க ஊசி கடலைமிட்டாய் பேனா வியாபாரம் சத்தம் தூசி எல்லாம் இருந்துச்சு... அப்ப அவர் சொன்னார் இது எப்டிக்கீது இன்னும் நூறு வருசம் ஆனாலும் திருந்தாதுன்னார்.. அதுக்கு அவன் சொன்னான் எனக்கு மெட்ரோ புடிக்கலப்பான்னான் ஏன்னு கேட்டார்.
அது சுத்தமா இருக்கு சரிதான் ஆனா அதுனால யாருக்கும் பொழப்பு இல்லயே... கண்ணு தெரியாதவங்க எதுவும் விக்க முடியாதே எத்தன பேரு இந்த லோக்கல் டிரெயின வைச்சிப்பொழைக்கிறாங்க.... அதுல அது இல்லையேப்பா... நம்ம தெருவாண்ட ஆயாகூட காலையில மார்க்கெட் போய் காய் இட்டாந்து யாவாரம் பண்ணிப்பொழைக்கிது அது இதுல வரமுடியுமா....
அத்தே மாதிரி நாம பீச்சுக்குப்போய் மீன் வாங்கிட்டு இதுல வருவோம் அதுல விடுவாங்களா.... அதுமட்டுமில்லாம வயசானவங்க இதுல தனியா வரமுடியுமா ஏறி எறங்கி எம்புட்டு கஸ்டம்.... அப்புறம் யாருக்கா இது ஓடுது வசதியானவங்களுக்குக்காத்தான
அதுனால எனக்குப்பிடிக்கல... எனக்கு நம்ம லோக்கல் தான் சூப்பர்ப்பான்னான்....
அவரும் தலைய ஆட்டினார் உண்மைதான்னு
அ.முத்துவிஜயன்