ரேவதி நட்சத்திரத்திற்கு சாபமளித்த முனிவர்!
இமயமலைச் சாரலில் ரித்வாக் என்னும் முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் ஓர் அரசகுமாரியை மணந்தார்.
நீண்ட நாட்கள் கழித்து அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த உடன் அரசகுமாரி இறந்து விட்டாள். இதனால் முனிவர் மிகவும் துன்புற்றார்.
முனிவரின் மகன் தீயோனாகி அக்கிரம காரியங்களைச் செய்து வந்தான். வயோதிக நிலையில், நோயினால் பீடிக்கப்பட்டிருந்த முனிவர் இதைக் கண்டு மிகவும் வருந்தினார். அவர் கர்க்காச்சாரியரிடம் சென்று தன் மகன் தீயவனாய் மாறக்காரணம் என்ன என்று கேட்டார்.
அப்போது கர்க்காச்சாரியார், உன் மகன் ரேவதி நட்சத்திரத்தில் நான்காம் பாகத்தில் பிறந்ததால் தீயவனாகி விட்டான். விதியை மாற்ற முடியாதே என்றார். உடனே முனிவர், தன் மகனைக் கெடுத்த ரேவதி மண்ணில் வீழ்ந்து மண்ணாய் போகுமாறு சபித்தார்.
அவ்வாறே ரேவதி விண்மீன், பூமியில் விழும்போது அதனிடமிருந்து ஓர் அழகிய பெண் தோன்றியது.
அதனைப் பிரமுகி என்னும் முனிவர் ரேவதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். வயது வந்த ரேவதிக்குத் திருமணம் செய்ய முனிவர் எண்ணினார். அவளுக்கேற்ற கணவர் யார் என்று அக்கினி பகவானிடம் வேண்டினார். அதற்கு அக்கினி, கிரமசீலன் என்ற அரசனுக்கும் காளிந்தி என்ற ராணிக்கும் பிறந்த துர்க்க மகாராஜனே அவள் கணவனாவான் என்று கூறிற்று.
ஒரு சமயம் துர்க்க மகாராஜன் வேட்டைக்குச் சென்றபோது பிரமுகியின் ஆசிரமத்தில் ரேவதியைக் கண்டு அன்பானவளே! முனிவர் எங்கே!? என்று கேட்டான். அதைக் காதில் கேட்டவண்ணம் அங்கு வந்த முனிவர் மகாராஜனிடம், அரசே நலமா? நாட்டில் எல்லோரும் நலமா? உன் மனைவி சுகமா? என்று நலம் விசாரித்தார். அதற்கு மன்னன் தனக்குப் பல மனைவியர் என்றும் யாரைப் பற்றி விசாரிக்கிறார் என்றும் கேட்டான். அதற்கு முனிவர், நீங்கள் சற்றுமுன் அன்பானவளே என்று அழைத்தாயே அந்த மனைவியைப் பற்றிக் கேட்டதாகக் கூறினார்.
அப்போது மன்னன் தற்செயலாக அவளை அவ்வாறு அழைத்தது குற்றமா என்று கேட்டான். அதற்கு முனிவர், அது குற்றமல்ல. அதுவே விதி. அக்கினி பகவான் மன்னன் துர்க்கனே ரேவதிக்கு ஏற்ற கணவன், என்று கூறினார்.
இப்போது நீயும் அவளை அன்பானவளே என்று அழைத்தது அதனை உறுதி செய்துவிட்டது என்று கூறி ரேவதியின் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யலானார்.
அப்போது அவள் ரேவதி நட்சத்திரத்திலேயே திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று கூறினாள். ரிஷி சாபம் பெற்ற ரேவதியால் செய்யப்படுவது நல்லதல்ல என்றார் முனிவர். ஆனால் ரேவதி, ரித்வாக் முனிவரிடம் அவரது தவவலிமையால் தனது தாய்க்கு மீண்டும் நட்சத்திரப்பதவி கிட்டச் செய்தால்தான் திருமணத்திற்கு சம்மதிக்க முடியும் என்றாள்.
முனிவரும் அவ்வாறே செய்ய ரேவதி நட்சத்திரம் கூடிய சுபமுகூர்த்தத்திலேயே ரேவதி, துர்க்கமன் திருமணத்தை முனிவர் நடத்திவைத்தார். அவர்கள் இருவரும் முனிவரைக் காலில் விழுந்து வணங்கிட அவர்களுக்கு என்ன வரம் வேண்டுமென்றார் முனிவர்.
தங்களுக்கு மந்வந்தரக் கர்த்தாவாகிய புதல்வன் பிறக்குமாறு அருள்புரிய வேண்டிட, அவ்வாறே அவரும் வரம் அளித்தார்.