கண்திருஷ்டி போக்கும் கருடக்கிழங்கு!

kan-thirusti-karuda-kilangu
கண்திருஷ்டி போக்கும் கருடக்கிழங்கு!

சில நாள்களுக்கு முன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று, எப்படி எல்லாம் உறவினர்களே ஒருவரின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுகிறார்கள் என்பதை விளக்குவதாக இருந்தது.

இதைத் தொடர்ந்து வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில்... புதிய வாகனம் வாங்கி ஸ்டேட்டஸ் போடுவது, சமூக ஊடகங்களில் தங்களின் வளர்ச்சி குறித்துப் பதிவிடுவது என நல்ல விஷயங்கள் எதைப் பகிர்ந்தாலும் தங்களுக்கு ஏதேனும் கெடுதல் வந்துவிடுகிறது என்று பதிவிட்டிருந்தனர் பலரும். இது உண்மையிலேயே ஆச்சர்ய முரண்.

நம் மரபில் உள்ள பலவற்றையும் மூட நம்பிக்கை என ஒதுக்கித் தள்ளும் ஜென்ஸி தலைமுறை கண் திருஷ்டியையும் நெகெட்டிவ் எனர்ஜியையும் தீவிரமாக நம்புகிறது என்றுதான் தோன்றுகிறது.
கண் திருஷ்டிக்கும் எதிர்மறை அதிர்வுகளை நீக்கவும் நம் முன்னோர்கள் பலவிதமான பரிகாரங்களைப் பரிந்துரைத் திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒன்றுதான் கருடக் கிழங்கு கட்டுதல்.

அந்தக் காலத்தில் கிராமப் புறங்களில் வீட்டு வாசலில் கழுகு போன்ற உருவம் கொண்ட இந்தக் கிழங்கைக் கட்டிவிட்டி ருப்பதைப் பார்த்திருப்போம். முன்பெல்லாம் நகரத்தில் மிகவும் அறிதாகவே காண முடிந்தது. ஆனால், தற்போது மீண்டும் இதன் மகத்துவத்தை அறிந்து அனைத்து தரப்பு மக்களும் கருடக் கிழங்கைத் தேடிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.அதன் பெயர் ஆகாய கருடன் கிழங்கு. இதற்கு கொல்லன் கோவை, பேய்சீந்தல் போன்ற பெயர்கள் உண்டு என்றாலும் ஆகாய கருடன் கிழங்கு என்பதே பொதுப்பெயர்.

காட்டில் மட்டுமே வளரும் கொடி வகையைச் சேர்ந்த இந்தத் தாவரத்தின் வேர் பகுதியை எடுத்துவந்து வீட்டு வாசலில் கட்டித் தொங்கவிடுவது வழக்கம். சிலர் வீட்டு வாசலில் கண் திருஷ்டி நீங்க கற்றாழையைக் கட்டித் தொங்கவிடுவது உண்டு.அதேபோன்றதுதான் கருடக் கிழங்கும். வானத்தில் பறக்கும் கழுகு நிலத்தில் ஊர்ந்து செல்லும் பாம்பை வேட்டையாடுவது போல, இந்தக் கிழங்கு பாம்புகளை விரட்டும் சக்தி கொண்டது என்பது நம்பிக்கை.

அதற்குக் காரணம் இந்தக் கிழங்கின் வாசம். இந்த வாசத்தால் எந்த விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது. அதுமட்டுமல்லாமல், இயற்கை கிருமி நாசினியாகவும் செயல்பட்டு, வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித தொற்று நோய்களும் வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு என்று நம்புகிறார்கள்.அதே போன்று வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்கள், தீயசக்திகள் போன்றவற்றையும் இது நீக்கும் என்கிறார்கள். அதாவது தீய சக்திகளைத் தனக்குள் கிரகித்துக்கொண்டு வீட்டுக்குள் பாசிட்டிவ் ஆற்றலை மட்டுமே அனுப்பும் என்பது நம்பிக்கை.
வீட்டில் தீய சக்திகள் இருந்தால், இந்தக் கிழங்கைக் கட்டியதும் கிழங்கு வாடி விடுமாம்.

மேற்கொண்டு வளராது. அதை வைத்து வீட்டில் நெகெட்டி எனர்ஜி, திருஷ்டி தோஷங்கள் இருப்பதை அறிந்து அதற்கேற்ப பரிகாரம் செய்துவிட்டு, மீண்டும் புதிய கிழங்கைக் கொண்டு வந்து கட்டினால் நல்ல படியாக அது வளரும் என்கிறார்கள். அதன்பின் திருஷ்டி தோஷங்கள் ஏற்படவே ஏற்படாது என்பது நம்பிக்கை. மேலும் இந்தக் கிழங்கு மூலிகைக் குணம் கொண்டது.விஷக்கடிப் பாதிப்புகளுக்கும், மண்ணுளிப் பாம்பினால் ஏற்படும் தோல் அலர்ஜியை போக்கும் மருந்தாகவும் இந்தக் கிழங்கைப் பயன்படுத்தும் வழக்கம் உண்டு என்கிறார்கள்.மேலும், இந்தக் கிழங்குக்குப் பலவேறு மருத்துவக் குணங்கள் உள்ளன என்கிறார்கள் நாட்டு மருத்துவர்கள். மருத்துவ விஷயங்களில் ரிஸ்க் எடுக்கத் தயங்கும் இன்றைய தலைமுறை திருஷ்டி தோஷங்களுக்காக கருடக் கிழங்கை வாங்குவதை வாடிக்கையாக்கி உள்ளது.