இயக்குநர் பாக்யராஜ்: 17 வது நாளில் பிரிந்த உயிர்.. என்ன நடந்தது?.
குரு, தட்சிணாமூர்த்தி இருவரில் கொண்டைக்கடலை மாலை யாருக்கு?
குருபகவான் வேறு, தட்சிணாமூர்த்தி வேறு என்பதை மிகச்சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் கேள்வியில் இருந்தே தெரிகிறது.
நவகிரஹங்களில் உள்ள குருபகவானுக்கு உரிய தானியமாக கொண்டைக்கடலையை வகுத்து உள்ளார்கள்.இந்த கொண்டைக்கடலைக்கும், தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.நவகிரஹங்களில் உள்ள குருபகவானுக்கு உரிய தானியம் கொண்டைக்கடலை என்பதால் அதனை மாலையாகக் கோர்த்து முதலில் குருபகவானுக்கு அணிவித்தார்கள்.
தட்சிணாமூர்த்தியை குருபகவானாக எண்ணி வணங்கியதால் நாளடைவில் அந்த மாலை அவருக்கும் அணிவிக்கப்பட்டு வருகிறது. குருபகவானுக்கு உரிய தானியம் கொண்டைக்கடலை என்பது போல், சனி பகவானுக்கு உரிய தானியம் எள்ளு ஆகும். ஆனால் இந்த தானியம் உருவத்தில் சிறியதாக இருப்பதால் இதனை யாரும் மாலையாகக் கோர்த்து சனிபகவானுக்கு அணிவிக்க முயற்சிக்கவில்லை.
தானியங்கள் என்பது இறைவன் நமக்கு அளித்த பிரசாதம். இந்த தானியங்களைக் கொண்டு உணவு தயாரித்து அவற்றை இறைவனுக்கு நைவேத்யம் செய்து எல்லோருக்கும் வழங்க வேண்டும். இதற்காகத்தான் பெரியோர்களால் இந்த தானியங்கள் இந்த கிரஹத்திற்கு உரியது என்று வகுக்கப்பட்டிருக்கிறது. யாரோ ஒருவர் இறைவனை அலங்கரித்துப் பார்ப்பதற்காகக் கொண்டைக்கடலை மாலையாகக் கோர்த்து அணிவித்ததால் அதுவே தற்போது பெரும்பாலானோரின் பழக்கமாக மாறிவிட்டது.
கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்ப்பதற்கு பதிலாக அதனை அவித்து சுண்டலாக சமைத்து, அதனை இறைவனுக்கு நைவேத்யம் செய்து எல்லோருக்கும் விநியோகம் செய்தால் அதுவே இறைவனுக்கு முழுமையான சந்தோஷத்தைத் தரும். இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்கிறோம், காய்கறிகளால் அலங்காரம் செய்கிறோம், பழங்களால் அலங்கரிக்கிறோம், வளையல்களை அடுக்கி அலங்கரித்து அழகு பார்க்கிறோம், இதையெல்லாம் செய்து கண்குளிர தரிசித்து மீண்டும் அவற்றை பிரசாதமாக எடுத்துக்கொள்கிறோம்.
ஆனால் இங்கே நூற்றுக்கணக்கான கொண்டைக்கடலை மாலைகளை அணிவித்து, மறுநாள் அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிடுகிறோம். நவகிரஹங்களில் உள்ள குருவிற்கு உரிய தானியம் கொண்டைக்கடலை. இதனை மாலையாக தட்சிணாமூர்த்திக்கு அணிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.