நவ கிரகங்களில் சுக்கிரனும் பரிகாரமும்!
ஒருவர் சுகமான வாழ்க்கை வாழ்வதைக் கண்டாலும், எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வந்தாலும், யாரையாவது காதலித்தாலும் அவனுக்கென்ன சுக்கிரன் உச்சத்தில் உள்ளான் என்றும், சுக்கிர திசை நடக்குதோ என்னவோ என்றும் கூறுவது உண்டு. இவ்வுலகில் உள்ள சகல இன்பங்களையும் ஒருவர்அனுபவிக்க வேண்டுமேயானால் அவருக்கு சுக்கிரன் பலமாக அமைந்திருப்பது மிகவும் அவசியமாகும். சுக்கிரன் பலமாக இருந்தால் மட்டுமே அவருக்கு சொகுசான வாழ்க்கை அமையும்.
அசுர குரு, களத்திர காரகன், சுக காரகன், வண்டிவாகன காரகன் என பல பெயர்களும் சுக்கிரனுக்கு உண்டு. சுக்கிரன் காதலையும், காமத்தையும் உண்டாக்குவதில் முக்கியமான பங்கை வகிக்கிறார். சுக்கிரன் பலமின்றி அமைந்துவிட்டால் இவ்வாழ்வில் சோதனை, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்பு, முன்னேற்றத் தடைகள் என எல்லாவகையிலும் அசுப பலனையே சந்திக்க நேரிடுகிறது. எனவே இவ்வுலகில் உள்ள அனைத்து இன்ப சுகவாழ்விற்கும் வித்தானவராக சுக்கிரன் கருதப்படுகுறார்.
சுக்கிரனின் உச்ச வீடு மீனம், நீச வீடு கன்னி, பகை வீடுகள் கடகம், சிம்மம். ஆட்சி வீடுகள் ரிஷபம், துலாம், நட்பு வீடுகள் மகரம் கும்பம் ஆகும். சுக்கிர திசை 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரனுக்கு நட்பு கிரகங்கள் புதன், சனி, ராகு, கேது சம கிரகங்கள் செவ்வாய், குரு, பகை கிரகங்கள் சூரியன், சந்திரன் ஆகும். சுக்கிரன், பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களுக்கு அதிபதியாவார். சுக்கிரனின் திசை தென்கிழக்கு, சுவை இனிப்பு, கிழமை வெள்ளி, தெய்வம் சுகீர்த்தி.
சுக்கிரன் களத்திரம், செல்வம், வாகனம், ஆடை ஆபரணங்கள் காமம், வாசனை பொருட்கள், கட்டில், மெத்தை, கவிதை, விவாகம், கப்பல் வியாபாரம், ஹோட்டல், பால் தயிர் மீது பிரியம், பாக்குமரம், மந்திரித்துவம், மற்ற பெண்களின் சேர்க்கை, உடல் உறவு, சுருண்ட தலைமுடி போன்றவற்றிற்கு காரகனாகிறார். சிற்றின்ப நோய்கள், சர்க்கரை வியாதி, சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் நோய், ராஜ பிளவை, வீரியமின்மை, ஆண், பெண் குறியில் ஏற்படக்கூடிய நோய்கள் போன்றவற்றிற்கும் சுக்கிரன் காரகனாகிறார். முல்லை மலர், வெண்தாமரை, பனி போன்ற வெண்மையான நிறத்தை கொண்டவர் சுக்கிரனாவார்.
சுக்கிரன் மீன ராசியில் 27 பாகையில் உச்சம் பெறுகிறார். கன்னியா ராசியில் 27 பாகையில் நீசம் பெறுகிறார். சுக்கிரன் ஒரு ராசியை விட்டு கடந்து செல்ல 1 மாதம் ஆகியறது.
சுக்கிரன் தான் நின்ற இடத்திலிருந்து 7ம் வீட்டை பார்வை செய்கிறார். சுக்கிரனின் பார்வை ஏற்றமிகுப் பலன்களை உண்டாக்கும்.
களத்திர காரகனாகிய சுக்கிரனை சனி பார்வை செய்தால் குடும்பத்தில் ஓற்றுமை குறையும். சுக்கிரனும் குருவும் இணைந்து 8 ல் அமைந்தால் கணவன், மனைவி இருவருக்கும் ஒற்றுமை குறைவு உண்டாகி பிரிய நேரிடும். சுக்கிரனும் 7ம் வீட்டாதிபதியும் அசுபகிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்றால் களத்திர தோஷம் உண்டாகிறது. இது மட்டுமின்றி சுக்கிரனுக்கு இருபுறமும் அசுபர்கள் அமைவதும் களத்திர தோஷமாகும்.
அசுபர்களுக்கு குருவாக இருக்கக்கூடிய சுக்கிரன் குருவுக்கு அடுத்தப்படியான சுபகிரகமாவார். இவர் ஜெனன ஜாதகத்தில் கேந்திராதிபதியாகி திரிகோணத்தில் இருந்தாலும், திரிகோணாதிபதியாகி கேந்திரத்தில் இருந்தாலும் சுபயோகத்தை அள்ளித் தருவார். சுக்கிரன் விபரீத ராஜயோகம் பெற்றால் சினிமா, டிராமா, கூத்து, நடனம், சங்கீதம், அரசியல், பெண்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.
சுக்கிரன் ஒரு ராசியில் சஞ்சரிக்கும்போது 10 பாகை முதல் 20 முடிய சஞ்சரிக்கும் காலத்தில் நற்பலன்கள் உண்டாகின்றன.
ஸ்ரீரங்கம்,
பெரிய கோவில் என்று குறிப்பிடப்படும் திருப்பதியம் இது என்று குறிப்பிடப்படுகிறது. ஸ்ரீரங்கத்தின் விமானத்திற்கு ப்ரணவ விமானம் என்று பெயர். இந்த விமானத்தை தரிசித்தாலே சகல பாவங்களும் விலகும். சுக்கிரன் வழிபட்டு வரம் பெற்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. சுக்கிரனால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீரங்கம் சென்று அரங்க நாதரை வழிபட்டால் பல நன்மைகள் ஏற்படும்.
துர்க்கை அம்மனை வழிபாடு செய்தல், துர்க்கா பூஜை செய்தல், ஸ்ரீசரகம், தேவிதுதிபாடல்கள், துர்க்கா சாலிஸா போன்றவற்றை பாராயணம் செய்தல்.