மரணயோகத்தில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாதா?
திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற இந்த ஐந்தும் பஞ்சாங்கத்தின் உறுப்புகள். இங்கே யோகம் என்று குறிப்பிடப்படுவது அமிர்தாதி யோகங்களை அல்ல. 27 நட்சத்திரங்களைப் போன்று 27 விதமான யோகங்கள் உண்டு. பஞ்சாங்கத்தின் முக்கிய உறுப்பான யோகம் என்பது இந்த 27 யோகங்களைத்தான் குறிக்கும். நாம் நினைப்பது போல் அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் என்ற இந்த மூன்றினையும் அல்ல.
இந்த மூன்று யோகங்களும் அன்றைய கிழமை மற்றும் நட்சத்திரத்தின் இணைவின் அடிப்படையில் கணக்கிடப்படுவது. உதாரணத்திற்கு ஞாயிற்றுக் கிழமையும், அஸ்வினி நட்சத்திரமும் இணையும் நாளில் சித்தயோகம் என்று குறிப்பிட்டிருப்பர். ஞாயிறு அன்று மகம் நட்சத்திரம் வரும் நாளில் மரணயோகம் என்று குறிப்பிடுவர். இந்த அட்டவணையின் அடிப்படையில்தான் காலண்டரில் அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் என்ற குறிப்புகள் இடம்பெற்றிருக்கும்.
இந்த மூன்று யோகங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் பழக்கம் நம் தமிழ்நாட்டில் உள்ளதால், காலதேச வர்த்தமானத்தை அனுசரித்து திருமணம், கிரகப் பிரவேசம் முதலான நிகழ்வுகளை மரணயோக நாட்களில் தவிர்க்கிறார்கள். மற்ற எல்லா அம்சங்களும் பொருந்தி வரும் நாளில், மரணயோகம் வந்தால் திருமணம், க்ரஹப்ரவேசம் தவிர்த்து மற்ற சுபநிகழ்ச்சிகளைச் செய்வதில் எவ்விதத் தவறும் இல்லை.