ராகு ,கேது எப்பொழுது நன்மையை தருவார்கள்?
ராகு மற்றும் கேது இருவரும் நிழல் கிரகங்கள் ஆகும். அனைத்திற்கும் ஆசைப்படும் கிரகம் ராகு, எதையும் விரும்பாமல் பற்றற்ற நிலையில் இருப்பது கேது.
நவகிரகங்களில் மற்ற ஏழு கிரகங்களுக்கும் உள்ளது போல ராகு மற்றும் கேதுவுக்கு என்று தனி ராசிகள் வீடுகள் எதுவும் இவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.
ராகுவானவர் சுக்கிரனின் அணியை சார்ந்தவர் என்றும் கேதுவானவர் குருவின் அணியை சார்ந்தவர்கள். எனவே சுக்கிரணியை சார்ந்த சுக்கிரன், சனி, புதன், இவர்களின் லக்னங்களுக்கு ராகு நன்மையை செய்வார் என்றும், குரு அணியை சார்ந்த குரு, சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய லக்னங்களுக்கு கேது நன்மையை செய்பவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், இந்த ராசிகளில் ராகுவானவர் இருக்கும் நிலையில் அவர் நன்மைகளை செய்வார் என்றும், கன்னி, விருச்சிகம், கும்பம் இந்த ராசிகளில் கேதுவானவர் இருக்கும் நிலையில் நன்மைகளை செய்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் பொதுவான பலன்களாகும். நாம் பலன் எடுக்கும் நிலையில் விதிகளை முதலில் பொருத்தி பார்த்து பின்னர் விதிவிலக்குகளையும் ஆராய்ந்து பலன் எடுக்கும் பொழுது பலன் ஆனது சரியாக வரும். அதே போல ராகு ,கேதுகளுக்கு சொல்லப்பட்டுள்ள பொது பலன்களை இங்கு அப்படியே எடுக்கக் கூடாது. ஏனெனில் ராகு கேதுக்களுக்கு சொந்தமாக வீடுகள் இல்லாத காரணத்தினால் இவர்கள் மற்ற கிரகங்களைப் போல லக்னத்திற்கு நட்பு கிரகம், எதிரி கிரகம் என்பதை தாண்டி இன்ன லக்னத்திற்கு இந்த மாதிரியான பலன்களை தான் செய்வார்கள் என்பது இல்லை.
இந்த இருவரும் லக்னத்திற்கு எந்த பாவத்தில் அமர்கின்றார்களோ அந்த பாவகாதிபதியை போலவே செயல்படுவார்கள். எனவே இவர்கள் எந்த அணியை சார்ந்தவராக இருந்தாலும் லக்னத்திற்கு நட்பு கிரக வீட்டில் அமரும் பொழுது அந்த பாவகத்திற்கு உண்டான பலனையும், எதிரி வீட்டில் அமரும் போது தாம் அமரும் வீட்டின் அதிபதியைப் போல செயல்பட்டு பலன்களை தருவார்கள்.
உதாரணமாக சுக்கிர அணியை சேர்ந்த சனியின் லக்னத்திற்கு ராகுவானவர் நட்பு நிலையை பெரும் கிரகம் என்றாலும், இவர் சனியின் எதிரிகளான சூரியன், சந்திரன் வீடுகளில் அமர்ந்து தசா நடத்தும் போது அந்த பாவகத்திற்கு உண்டான பலனை அப்படியே செய்வார்கள்.
கும்ப லக்னத்திற்கு ஆறில் அமரும் சந்திரனின் நிலையை பொருத்தும் ராகுவிற்கு கிடைக்கும் மற்ற கிரகங்களின் தொடர்பினை பொருத்தும் ராகுவானவர் கடன், நோய் போன்ற அனைத்தையும் கட்டாயமாக தருவார். இங்கு இவர் சுக்கிரன் அணியை சார்ந்தவர் என்பதால் பலன்கள் ஆனது மாறிவிடாது. மேலும் ஒளி கிரகங்களான சூரிய, சந்திரனின் வீடுகளில் அமரும் ராகு, கேதுக்கள் பெரிய அளவிலான நன்மைகளை தருவதில்லை.
ராகு கேதுக்கள் நன்மையை தர வேண்டும் என்றால் ராகு, கேதுக்களுக்கு வீடு கொடுத்த கிரகம் வலிமை பெற வேண்டும். ராகு, கேதுகளுக்கு வீடு கொடுக்கும் கிரகம் ஆட்சி, உச்சம் போன்ற வலுவில் இருக்கும் போது ராகு, கேதுக்களும் ராசி நாதனின் வலுவைக் கொண்டு பலன்களை செய்யும்.
ராகு ,கேதுவிற்கு வீடு கொடுத்த கிரகம் உச்சம் பெற்று சுப தன்மையை அடைந்து இருக்கும் நிலையில் ராகு, கேது நல்ல பலன்கள் செய்பவர்கள். அதேபோல போல ராகு, கேதுவும் சுப கிரக தொடர்பினை பெற்று சுபத் தன்மையை அடைய வேண்டும். ராகு, கேதுகளுக்கு வீடு கொடுத்த கிரகம் நீசம் அடைவது நல்ல பலன்களை தராது, ஆனால் ஒரு நீச கிரகத்துடன் ராகு, கேதுக்கள் இணைவது சில நிலைகளில் நல்ல பலன்களை தருகின்றது.
ராகுவிற்கும், கேதுவிற்கும் வீடு கொடுத்த கிரகம் வலுப்பெற்று சுப கிரக தொடர்பினை பெற்று சுபத்தன்மையை அடைந்திருந்தாலும், ராகு அல்லது கேது ஆணவர்கள் சனி, செவ்வாய் போன்ற பாவ கிரகங்களின் தொடர்பினை பெற்று பாவத்தன்மையை அடையும் போது நன்மையை செய்வதில்லை.
ராகு மற்றும் கேது இவர்கள் நன்மையை செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் சுப கிரகங்களின் தொடர்பானது தேவை, சுப கிரகங்களின் தொடர்பினை பெற்ற ராகு, கேது லக்ன சுபர்களின் வீடுகளில் அமர்ந்து, வீடு கொடுத்த கிரகமும் ஆட்சி அல்லது உச்சம் போன்ற வலிமையான அமைப்பில் இருக்கும் பொழுது ராகு, கேதுக்கள் மிகச்சிறந்த நல்ல பலன்களை செய்வார்கள்.
ராகு, கேதுக்கள் நன்மையை தர சுப கிரகங்களின் தொடர்பானது முக்கியம் என்பது போல, சுப கிரகங்கள் பார்வையின் மூலம் இவர்களை தொடர்பு கொள்ளும் நிலையில் சுப கிரகங்கள் ஆனது தனது வலிமையை இழக்காது. ஆனால் ராகு, கேதுக்களுடன் சுப கிரகங்கள் இணையும் பொழுது இணையும் டிகிரி அளவினை பொறுத்து அந்த சுபகிரகம் செயலிழந்து போகும். ராகுவுடன் எட்டு டிகிரிக்குள்ளாக இணையும் ஒரு சுப கிரகமானது பாவத்தன்மையை அடைந்து அது தன் காரகத்துவம் மற்றும் ஆதிபத்திய ரீதியிலான பலன்களில் தீமையை தரும்.