Breaking News :

Sunday, May 19
.

யோகா: இரத்த ஓட்டம் பெருக்கும் பத்தகோனாசனம்


பெண்களுக்கு மிகுந்த பயனை அளிக்ககூடிய ஆசனம் என்றால் மிகையல்ல...

 

சீரற்ற மாதவிடாய் ... சுகப்பிரசவம்...கர்பபை நீர்கட்டி...வெரிக்கோஸ் வெய்ன் எனும் நரம்புசுருள் பிரச்சனை ... வெள்ளைபடுதல் ... மூலம்...போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் அற்புதமான ஆசனம்.

 

ஆண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை தருகிறது.

 

சொப்பனஸ்கலிதம் எனும் இரவில் விந்து வெளியேறுவது கட்டுப்படுத்தப்படுகிறது.

 

பத்தகோணாசனம் என்ற பெயர் “பத்த” (கட்டுப்படுத்தப்பட்ட), “கோணா” (கோணம்), “ஆசனா” (ஆசனம்) என்ற சொற்களில் இருந்து உருவானது. இரண்டு பாதங்களையும் இனப்பெருக்க உறுப்பு இருக்கும் பகுதியை நோக்கி இழுத்துக் கொண்டுவந்து, கைகளால் இறுக்கிப் பிடித்து குறிப்பிட்ட கோணத்தில் பிடித்து வைத்து செய்யப்படுகிறது. இந்த ஆசனத்தின்போது காலை நகர்த்தும் விதத்தைப் பார்க்கும்போது வண்ணத்துப் பூச்சி சிறகடிப்பது போல் இருப்பதால் இதனை வண்ணத்துப்பூச்சி தோரணை என்றும் கூறுவார்கள்.

 

செய்யும் முறை (How to practice Baddhakonasana?)

 

யோகா மேட்டில் முதுகை நேராக வைத்தபடி உட்கார்ந்து கொண்டு கால்களை முன்னோக்கி நீட்டிக்கொள்ளவும்.

 

கால்களை மடித்து பாதங்களை இடுப்பை நோக்கிக் கொண்டுவரவும். இரண்டு பாதங்களையும் முடிந்தவரை அருகருகே கொண்டு வரவும். கால் மூட்டுகளை பக்கவாட்டில் தரையில் படும்படி செய்ய முயற்சிக்கவும்.

 

கைகளால் பாதங்களை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளவும். இன்னும் திடமாகப் பற்றிக்கொள்ள, உங்கள் கைகளை பாதத்திற்குக் கீழே வைத்துக்கொள்ளலாம்.

 

குதிகால்களை கூடுமானவரை இனப்பெருக்க உறுப்புப் பகுதிக்கு அருகே கொண்டு வர முயற்சி செய்யவும்.

முடிந்தவரை ஆழமாக மூச்சை உள்ளிழுக்கவும். தொடைகளையும் கால் மூட்டுகளையும் கீழே அழுத்தித் தரையைத் தொட முயற்சி செய்யவும். அவற்றை லேசாக கீழ்நோக்கி அழுத்தியபடியே இருக்கவும்.

 

இப்போது வண்ணத்துப்பூச்சி சிறகை அசைப்பதைப் போலவே இரண்டு கால்களையும் மேலும் கீழுமாக அசைக்க முயற்சி செய்யவும். மெதுவாகத் தொடங்கவும், பிறகு படிப்படியாக வேகத்தைக் கூட்டவும். இந்தப் பயிற்சியைச் செய்யும்போது இயல்பாக சுவாசிக்கவும்.

 

சௌகரியமாக எவ்வளவு நேரம் முடியுமோ, அவ்வளவு நேரம் கால்களை மேலும் கீழும் அசைத்துக்கொண்டே இருக்கவும். பிறகு படிப்படியாக வேகத்தைக் குறைத்து கடைசியில் நிறுத்தவும்.

 

ஆழ்ந்து மூச்சை உள்ளிழுக்கவும், மூச்சை வெளியே விடும்போது முன்னோக்கி குனியவும், குனியும்போது தாடையை மேலே வைத்துக்கொள்ள வேண்டும், முதுகை நேராக வைத்துக்கொள்ள வேண்டும்.

 

குனிந்தபடி இருந்துகொண்டு, முழங்கைகளை தொடைகளின் மீது வைத்து அழுத்தி, முழங்கால்கள் தரையில் படும்படி (அல்லது தரைக்கு அருகில் செல்லும்படி) செய்யவும்.

 

 தொடைகளின் உட்புறத்தில் தசைகள் நன்கு நீட்டிப் பயிற்சி பெற்றிருப்பதை நீங்கள் உணரமுடியும். இன்னும் சில முறை ஆழ்ந்து சுவாசித்து தசைகள் நன்கு தளரும்படி செய்யவும்.

 

ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, உடலை மேல்நோக்கிக் கொண்டு வரவும்.

மூச்சை வெளியே விடும்போது, அந்த தோரணையில் இருந்து வெளியேறவும். கால்களை நீட்டி நேராக வைத்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும்.

 

பத்தகோணாசனத்தின் நன்மைகள் (Benefits of Baddhakonasana):

 

தொடையின் உட்பக்கத் தசைகளுக்கும், கீழ் இடுப்புப் பகுதிக்கும் கால் மூட்டுகளுக்கும் நல்ல பயிற்சி அளிக்கிறது.

 

இடுப்பு மற்றும் கீழ் இடுப்புப் பகுதியில் வளையும் தன்மையை அதிகரிக்கிறது.

செரிமானம் மற்றும் மலக்குடல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.

 

நீண்ட நேரம் நிற்பது அல்லது நடப்பதால் உண்டாகும் களைப்பில் இருந்து ஆறுதல் வழங்குகிறது.

 

மாதவிடாயின் போது உண்டாகும் சிரமங்களைக் குறைக்கிறது, மாதவிடாய் முற்றிலும் நிற்கும்போது தொந்தரவு கொடுக்கும் அறிகுறிகளைத் தணிக்கிறது.

 

கர்ப்ப காலத்தில் இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்தால், சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது.கருவுற்ற தாய்மார்கள் முன்னே வளைந்து தரையை தொட முயற்சிக்க வேண்டாம். ஆசன நிலையில் அமர்ந்து கால்களை மேலும் கீழுமாக அசைத்தல் போதுமானது.

 

கால் மூட்டுகளில் அடிபட்டிருந்தால், இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்ய வேண்டாம்.

 

 பயிற்சி பெற்ற யோகா ஆசிரியரிடம் சென்று முறையாகக் கற்றுக்கொண்டால் அனைத்து ஆசனங்களாலும் மிகுந்த பலன்களைப் பெறலாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.