திருநெல்வேலி சமையலுக்கு ஒரு தனி இடமுண்டு. சமையலில் தேங்காய் பிரதானமாக இருக்கும். திருநெல்வேலி மோர்க்குழம்பு, தேங்காய் அரைத்த குழம்பு, சொதி போன்றவை மிகவும் பிரபலம்.
தேங்காய் அரைத்த குழம்பு சுவையுடனும் பார்ப்பதற்கே நல்ல நிறத்துடன் சாப்பிடத்தூண்டும்..
தேவையான பொருட்கள் :-
வறுத்தரைக்க :-
- தேங்காய் 6 டேபிள் ஸ்பூன் (முக்கால் தேங்காய்)
- நீள வரமிளகாய் 10
- உளுத்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் 1/2 ஸ்பூன்
- புழுங்கலரிசி 1 டேபிள்ஸ்பூன் (இது முக்கியம், டேஸ்ட்)
- புளி எலுமிச்சை அளவு, இரண்டு டம்ளர் தண்ணியில் ஊரவைத்து பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
காய்கள் :-
இரண்டு கப் எல்லா காயும் சேர்த்து. தான் (காய்கள்)ரொம்ப ஜாஸ்தி ஆயிட்டால் அதற்கேற்ற அளவு குழம்பு செய்யணும். மூணுநாள் ப்ரிஜில் வைத்து சாப்பிடும்படி ஆகிவிடும், ஜாக்கிரதை.
முருங்கை, அவரை, கத்திரி, வெண்டை, பூசனி, பரங்கி, சேப்பங்கிழங்கு(வெந்தது) இல்லைன்னா உருளை சின்னது, வெண்டை, சாம்பார் வெங்காயம் (விருப்பம் உள்ளவர்களுக்கு).
செய்முறை :-
- வாணலியில் வறுத்து அரைக்க வேண்டியதை தேங்காய் எண்ணையில் வறுத்தெடுக்கவும்.
- அரவை மிக முக்கியம். முதலில் மிளகாய் தேங்காய் போட்டு சுத்தி பின் பருப்பு, வெந்தயம், புழுங்கரிசி போட்டு ஒரு சுத்து. கொற கொறன்னு இருக்கணும்.
டிப்ஸ் : ஒரு மிளகாயை நிறுத்தி உளுந்து அரிசியுடன் பிச்சுப்போட்டு சுற்றவும்.
- காய்களை ஒரு அங்குலத்திற்கு நறுக்கி பாத்திரத்தில் முங்கும் அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் பொடிபோட்டு வேக வைக்கவும்.
- முக்கால் வெந்தவுடன் புளித்தண்ணியை விட்டு வாசம் போக கொதிக்கவிடவும்.
- காயும் வெந்து புளிவாசனை போனவுடன், கேஸை சிம்மில் வைத்து விடவும். மிகமுக்கியம்.
- அரைத்த கலவையை போட்டு கலக்கி ஒரேஒரு நிமிடத்தில் அணைத்து பாத்திரத்தை கேஸிலிருந்து எடுத்து தள்ளி வைத்து விடவும்.
- குழம்பு செய்யும் போது ஒன்றோ இரண்டோ காஷ்மீர் மிளகாய் கூட சேர்த்து கொள்ளலாம். கலர் அழகாக வரும்.
- பின்பு தேங்காய் எண்ணையில் கடுகு, காஞ்சமிளகாய், துளி பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொட்டவும்.
- இந்தக் குழம்பு காரம், புளிப்பு உப்பு சற்று தூக்கலாக இருந்தால்தான் சாதத்தில் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.