Breaking News :

Sunday, May 19
.

புற்றுநோயை குணப்படுத்துமா நம்ம ஊர் ரசம்?


ரசம்.... இதை, தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான, எளிமையான சூப் வகை என்றுகூடச் சொல்லலாம். வடை, பாயசம் களைகட்டும் சைவ விருந்தானாலும், மட்டன், சிக்கன் எனக் களேபரப்படும் அசைவ விருந்தானாலும் ரசத்துக்கு முக்கிய இடம் உண்டு. இன்றும் பல கிராமங்களில் உள்ள சிறிய ஹோட்டல்களில் ஒரு வழக்கம் உண்டு. வருகிற வாடிக்கையாளர்கள், சைவமோ, அசைவமோ எந்த உணவைச் சாப்பிட்டாலும் இறுதியாக அவர்களுக்குக் கொஞ்சம் ரசம் கொடுக்கத் தவறுவதில்லை.

தண்ணீர், புளி, மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை, சீரகம், மிளகு, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கொத்தமல்லி இலை போன்ற பொருள்களைக் கொண்டு செய்யப்படுவது ரசம். இதில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. ஆனாலும், இதில் சேர்க்கும் பொருள்கள் மாறுமே தவிர, ஆதாரமான சேர்மானப் பொருள்கள் மாறாது. இதனுடன் சேர்க்கப்படும் காய்கறிகள் மேலும் பல ஊட்டச் சத்துகளை அளிக்கும். சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டாலும், சாதம் சாப்பிட்ட பின்னர் அப்படியே குடித்தாலும் இது தரும் பலன்கள் ஏராளம்.

ரசத்தில் உள்ள புளிக்கரைசலில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது சிறந்த மலமிளக்கியாகச் செயல்படும். குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும். புளியில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நோய்க் கிருமிகளிடம் இருந்து சருமத்தைக் காக்கும். சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் இருக்க உதவும்.

காய்ச்சல், சளி அல்லது உடல்நிலை சரியில்லாதவர்களுக்கான சிறந்த உணவு ரசம் சாதம்தான். ரசத்துடன் பயறு மற்றும் காய்கறிகளைச் சேர்க்கும்போது, அதன் ஊட்டச்சத்து மதிப்பு இரட்டிப்பாகும். இது உடலுக்குத் தேவையான ஊட்டத்தை அளிக்கும். உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும்.

கர்ப்பிணிகள் ரசத்தை சூப்பு போல உணவுக்குப் பின்னர் குடிக்கலாம். இதில் வைட்டமின் சத்துகள், தாதுஉப்புகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அதிகளவு புரோட்டீன் நிறைந்துள்ளன. இது எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. உடல் உள்ளுறுப்புகள் சீராக இயங்க உதவும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்னைகளைச் சரிசெய்யும் ரசம்.

உணவை மென்று சாப்பிடாத அல்லது சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கு இந்தத் திரவ உணவைப் பழக்கலாம். மிகவும் எளிமையான உணவு. எளிதில் செரிமானமாகும். குழந்தை, தாய்ப்பால் குடிப்பதை மறக்கவைக்க முயலும் தாய்மார்களுக்கு சிறந்த ஆல்டர்நேட்டிவ் ரசம்தான். எல்லா குழந்தைகளுக்கும் ஏற்றது. ரசத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன. தயாமின், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ மற்றும் சி, நியாசின் மற்றும் ரீபோஃப்ளேவின் போன்ற சத்துகள் அதிகளவில் உள்ளன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

* இது பேலன்ஸ் டயட்டுக்கான சிறந்த உணவு. பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், செலினியம், காப்பர் மற்றும் மாங்கனீஸ் போன்றவை உணவுக்குக் கூடுதல் சுவையைத் தருவதோடு, கூடுதல் ஊட்டச்சத்தையும் தருகின்றன. இதில் கலக்கப்படும் மிளகு, உடல்பருமன் குறைக்க உதவும். உடலிலுள்ள நச்சுகள் வெளியேற ஊக்குவிக்கும். நச்சுகளை வியர்வை மற்றும் சிறுநீர் மூலமாக வெளியேற்றும். உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவும் ரசம்.

தினமும் ரசத்தை உணவுடன் சேர்த்துக்கொள்வது, புற்றுநோய்களிடம் இருந்து நம்மைக் காக்கும். மிளகில் உள்ள பைப்பரின் (Piperine) புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். மேலும், ரசத்தில் சேர்க்கப்படும் மஞ்சளில் உள்ள குர்குமின் புற்றுநோய் செல்களின் தாக்குதலிலிருந்து நம்மைக் காக்கும்.

மிளகு, வயிற்றில் சுரக்கும் அமிலச்சுரப்பை அதிகரிக்கும். இது செரிமான மண்டலம் சீராக இயங்க உதவும். உணவை வேகமாகச் செரிக்கச்செய்யும். பசியின்மை, பித்தம், வயிற்றுப்பொருமல், வாய்வுத்தொல்லை, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் அசிடிட்டியை சரிசெய்யும்.

வயிறு உறுதி பெறவும், குடல் உறுப்புகள் சீராகச் செயல்படவும் ரசத்திலுள்ள கறிவேப்பிலை உதவும். மேலும், கூந்தல் கருமை பெற உதவும். பார்வைத்திறனை மேம்படுத்தும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.