Breaking News :

Sunday, May 19
.

டயட் இல்லாமல் உடல் பருமன் குறைக்க சிம்பிள் வழியா?


“இன்றையச் சூழலில் சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை உடல் பருமன். காரணம், நவீன வாழ்க்கை முறை, மாறிவிட்ட உணவுப் பழக்கம். ஐந்து வயதுக் குழந்தை கொழுக்மொழுக் உடல்வாகுடன் பள்ளிக்குச் செல்வதைப் பார்க்க முடிகிறது.

 

20 வயதுகூட நிரம்பாத இளம்பெண், தன் வயதுக்குச் சற்றும் பொருந்தாத பருமனுடன் வண்டி ஓட்டிச் செல்வதைக் காண முடிகிறது. ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று தெரியாமல், உடல் பருமன் பிரச்னையில் தவிப்பவர்கள் பலர். உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, கடினமான வொர்க்அவுட், டயட், அறுவைசிகிச்சை, மின்னணு அலைகளைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் முயற்சி என என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். இதில் பலன் கிடைப்பது ஒருபக்கம் இருக்கட்டும்; இவற்றால் விளையும் பக்கவிளைவுகள் அநேகம். ஆனால், ஆயுர்வேதம் காட்டும் சில வழிமுறைகளைப் பின்பற்றினால் உடல் எடையை வெகுவாகக் குறைக்க முடியும். உடல் பருமனையும் தடுக்க முடியும். அது நம் ஆரோக்கியத்தையும் காக்கும்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். அந்த எளிய வழிமுறைகளையும் விளக்குகிறார்.

 

குள்ளமானவர்கள், உயரமானவர்கள், குண்டானவர்கள், ஒல்லியானவர்கள், வெளிர் நிறம் உள்ளவர்கள், மிகவும் கறுத்த நிறம் உடையவர்கள், முடிவளர்ச்சி அதிகம் உள்ளவர்கள், முற்றிலும் முடிவளர்ச்சியே இல்லாதவர்கள் ஆகிய எட்டுவிதமான மனிதர்களை, `ஆரோக்கியமற்றவர்கள்’ என்கிறது ஆயுர்வேதம். இதைத்தான் நவீன மருத்துவம், `ஹார்மோன் குறைபாடு’ (Hormonal Disorders) என்கிறது.பாலமுருகன் ஆயுர்வேத மருத்துவர்

 

உடல் பருமன் குறித்துக் குறிப்பிடும்போது, `மார்பு, வயிறு, புட்டம், இடுப்பு ஆகியவற்றில் அதிக அளவு கொழுப்புச் சேரக் கூடாது’ என்றும் குறிப்பிடுகிறது ஆயுர்வேதம். இந்த இடங்களில் தேவையில்லாத கொழுப்புச் சேரும்போது, சர்க்கரைநோய், இதய பாதிப்புகள் போன்ற நோய்கள் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்னை, தைராய்டு பிரச்னை ஆகியவை தலைதூக்கும். சிறியவர்களுக்கு மந்தத் தன்மை, செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகள் உண்டாகும். இதைக் கண்டுகொள்ளாதபோது, நோய்கள் தீவிரமடைந்து உயிருக்கே உலைவைத்துவிடும்.

 

`உடல் மெலிந்தவர்களைக்கூட குண்டானவர்களாக மாற்றுவது எளிது. ஆனால், குண்டானவர்களை ஒல்லியானவர்களாக மாற்றுவது சற்று கடினம்’ என்கிறது ஆயுர்வேதம். இதனால், உடல் பருமன் வந்த பின்னர் கஷ்டப்படுவதைவிட, உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதே நல்லது.

 

ஆயுர்வேத சிகிச்சைக்கு முக்கியமானவை ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் உணவு பழக்கமும்தான். அவை...

 

* 8 மணிநேரம் தூக்கம் அவசியம் தேவை. அதில் 6 மணி நேரம் ஆழ்ந்த தூக்கமாக இருக்க வேண்டும். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்னதாக எழுவதைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்தது. இது சிறந்த உடற்பயிற்சி என்பதை கவனத்தில்கொள்ளவும்.

 

* தினமும் 30 நிமிடங்கள் யோகாசனம் செய்யலாம். அதில் 10 நிமிடங்களாவது, பிராணாயாமம் செய்ய வேண்டும். இது தவிர நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு கோரும் செயல்களைச் செய்யவேண்டியது அவசியம்.

 

* காலையில் தேன் அல்லது எலுமிச்சைச் சாற்றை சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும். எலுமிச்சைப் பழத்தை ஜூஸாகவும் குடிக்கலாம். இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் உடலில் சேரும் நச்சை நீக்கி, செல்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். அதேபோல சோம்பு-வை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரிக்கும்.

 

* குழைவான, சூடான உணவையோ எண்ணெயில் பொரித்த உணவையோ சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். நன்றாக வேகவைத்த உணவைச் சாப்பிடுவதே சிறந்தது. சரிவிகித உணவாக இருந்தால், இரண்டு வேளை உணவுகூடப் போதுமானது. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.

 

* `திட உணவை அரை வயிற்றுக்கும் திரவ உணவை கால் வயிற்றுக்கும், மீதமுள்ள கால்வாசி உணவை வாயுக்கும் விட்டுவைத்தால் நோய் அண்டாது’ என்கிறது ஆயுர்வேதம். இது உடல் பருமனுக்கும் பொருந்தும்.

 

பால், தயிரில் அதிக அளவு கொழுப்பு உள்ளது. எனவே, பால் பொருள்களில், மோர் அனைவருக்கும் ஏற்ற பானம்.

 

குடம்புளி’ என்பது நம் பாரம்பர்யப் புளி வகை. முடிந்தவரை இந்த வகைப் புளியையே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

உணவுக்கு முன்னர் சிறு துண்டு இஞ்சியையும், சிறிதளவு இந்துப்புவையும் சேர்த்து வெறுமனே சாப்பிடலாம் அல்லது உணவில் சேர்த்தும் சாப்பிடலாம். இவை எவ்வளவு கடினமான உணவையும் எளிதில் செரிக்க உதவும்.

 

அன்றாடச் சமையலில் சின்ன வெங்காயம், லவங்கப்பட்டை ஆகியவை இடம்பெற வேண்டும். ஆயுர்வேதம் பதமான மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம் மற்றும் கறுப்பு மிளகைச் சேர்த்துக்கொள்ள வலியுறுத்துகிறது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, நல்ல கொழுப்புகள் அதிகரிக்க உதவும். இவற்றுக்கு உடலின் மெட்டபாலிசத்தை (வளர்சிதை மாற்றம்) சீராக்கும் வல்லமையும் உண்டு.

 

வெந்நீர்தான் குடிக்க உகந்த நீர்’ என்கிறது இயற்கை மருத்துவம். வெந்நீரை அடிக்கடி அருந்துவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, சாப்பிடும்போது, வெந்நீர் குடிப்பது அவசியம். இது, செரிமானத்தை சீராக்குவதுடன், கொழுப்புச் சேருவதைக் குறைக்கும்.

 

மாதம் இருமுறை ஒரு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெய் உட்கொள்ள வேண்டும். இது சிறந்த மலமிளக்கியாகச் செயல்பட்டு, உடல் கழிவுகளை நீக்கும்; வாயுவைத் தங்க விடாது. மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகளைச் சரிசெய்யும்.

 

மூக்கிரட்டை கீரையைச் சமைத்து சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள தேவையில்லாதத் தண்ணீரை சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

 

அரிசி உணவு மட்டுமே அதிகம் உண்ணாமல், கோதுமை, பார்லி உணவையும் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். காய்கறிகளில் முள்ளங்கியையும், பழங்களில் அன்னாசியையும் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

 

இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், திரிபலா பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இதைத் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் குடித்துவந்தால், உடல் பருமன் மட்டுமல்ல, வேறு எந்த நோயும் நெருங்காது.

 

உடல் பருமன் வராமல் தடுக்க, வந்த பின்னர் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க கடுமையான பத்தியமோ, உடலை வருத்திச் செய்யவேண்டிய உடற்பயிற்சிகளைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை. அன்றாட வாழ்க்கையில் இந்த நடைமுறைகளை பின்பற்றி வந்தாலே போதும்’ என்கிறது ஆயுர்வேதம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.